சங்கம் ஹோட்டல் என்று குறிப்பிடுவதை அவ்வளவு பெருமையாக நினைப்பேன். ஆனால், இன்று…அரங்கை அதிர வைத்த செஃப் தாமு – சங்கு சக்ரா ஹோட்டலின் 50வது கொண்டாட்ட சுவாரஸ்யம் !
நாங்க யூத் மாதிரி … எங்க வேவ்லென்த் ஒன்று போல் தான் இருக்கும் … நெகிழ வைத்த செஃப் தாமு –விருந்தோம்பல் கல்வியாளர் பொன்னிளங்கோ !
சங்கு சக்ரா ஹோட்டலின் 50வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், இவர்களின் அனைத்து ஹோட்டல்களில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
1975-ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கப்பட்ட சங்கம் ஹோட்டல், இன்று தஞ்சாவூர், காரைக்குடி, மதுரை ஆகிய இடங்களிலும் கிளை பரப்பியிருக்கிறது. திருச்சி மற்றும் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவையை வழங்கும் வகையில், “கோர்ட்யார்ட மாரியட்” நிறுவனத்துடன் இணைந்து சேவையை வழங்கி வருகிறார்கள். அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400கோடி ரூபாய் முதலீட்டை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தனது அறை எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரிக்க நோக்கமாக கொண்டுள்ளது.
திருச்சி சங்கம் ஹோட்டலின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, செஃப் தாமு மற்றும் செஃப் பொன் இளங்கோ ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஜன-04 அன்று சங்கம் ஹோட்டல் விழா அரங்கில் நடைபெற்றது.
“தன் மேசையின் முன்பாக சுழன்று கொண்டிருக்கும் உலக உருண்டையை நிறுத்தி எங்கே கை வைத்தாலும், அங்கே அந்த நாட்டில் என்னுடைய மாணவன் ஒருவன் பணியாற்றிக் கொண்டிருப்பான். அதுபோலவே, கடலின் எந்த இடத்தை தொட்டாலும் அவ்விடத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு கப்பலிலும் என் மாணவன் ஒருவன் செஃபாக பணியாற்றிக் கொண்டிருப்பான்.” என்பதாக அவரே பெருமையுடன் சொல்லும் அளவுக்கு அன்று முதல் இன்று வரையில் பல்லாயிரக்கணக்கான கேட்டரிங் துறை மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் என்பதாக செஃப் பொன் இளங்கோ-வை பற்றி கபிலன் அறிமுகம் செய்த அந்த தருணத்தில் அரங்கமே மெய்சிலிர்த்துப் போனது.
“24 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் தொடர்ந்து சமையல் செய்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான செஃப் தாமு, கேட்டரிங் துறையில் உலகு அறிந்த தமிழராய் திகழ்கிறார். இந்த துறையில் பி.எச்.டி. முடித்த ஒரே செஃப் இவர் ஒருவராகத்தான் இருப்பார். திருப்பதி தேவஸ்தான பிரசாத தயாரிப்புக்குழுவின் தரக்கட்டுப்பாட்டு உறுப்பினராக பங்காற்றி வருகிறார்.” என்பதாக செஃப் தாமு குறித்த அறிமுகத்தோடு, கலந்துரையாடல் நிகழ்வை தொடர்ந்தார் தொகுப்பாளர் கபிலன்.
“என் மூத்த மகன் பாண்டியனுக்கு நடக்க கத்துக் கொடுத்ததே தாமு தான். 1976 வாக்கில், கன்னியாகுமரியில் தொடங்கிய எங்களது நட்பு இன்று வரையில் தொடர்கிறது. கன்னியாகுமரியில் காலை 4 மணிக்கெல்லாம் அந்த பகவதியம்மனையே செஃப் தாமுதான் தினமும் எழுப்பிவிடுவார்.” என்பதாக செஃப் பொன் இளங்கோ பேச, “எங்கள் இருவருக்கிடையிலும் இப்போதும்கூட வேவ்லென்த் ஒன்றுபோல்தான் இருக்கும். அதுவும் யூத் மாதிரிதான் நாங்கள் இருவரும். நாங்கள் எங்கே இருந்தாலும், எங்களது அரட்டை சத்தம் ஹாலுக்கும் வெளியேயும் கேட்கும். கள்ளம் கபடமில்லாத குழந்தை அவர்” என்பதாக செஃப் பொன் இளங்கோவுடனான நட்பை நெகிழ்ச்சி பொங்க பகிர்ந்தார் செஃப் தாமு.
சிறு குழந்தைகளிடம் அவர்களின் பேரார்வத்தை தூண்டி பேச வைப்பது போலவே, அந்த அரங்கில் குழந்தையாகவே மாறிப்போயிருந்த அந்த இரு ஜாம்பவான்களிடமிருந்தும் கடந்த கால அனுபவங்களை பகிர செய்தார், கபிலன்.
“அர்ப்பணிப்பு, சிரத்தை, கற்றுக்கொள்ளும் ஆர்வம், செய்யும் வேலையை காதலிப்பது இவையின்றி ஹோட்டல் துறையில் தடம் பதிக்க முடியாது.” என்றார், செஃப் தாமு. “நம்மிடம் உள்ள பெரும் குறை எதையும் ஆவணப்படுத்துவதில்லை. சங்க கால கல்வெட்டுகளில் உணவு பதார்த்தங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
அவற்றுக்கான செய்முறை குறிப்புகளை காணமுடிவதில்லை. அதுபோல, கல்வெட்டின் வழி அறிந்த கும்மாயம் என்றொரு உணவுக்கான செய்முறையை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினேன். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான உணவு அது என்று குறிப்பு இருக்கிறது. ஆனால், ரெசிபி இல்லை.
ஒருவழியாக, கும்பகோணம் பார்த்தசாரதி கோயிலில் தினம் பிரசாதமாக படைக்கப்படுவதாக அறிந்து, அவர்களது உதவியுடன் அந்த உணவுக்கான ரெசிபியை கண்டறிந்தோம். பின்னர், செஃப் அசோசியேசனில் பகிர்ந்தோம். அந்தக் குறிப்பை வைத்து, எங்களது ஹோட்டல் மெனு கார்டில் சேர்த்திருக்கிறோம் என்று சொன்னபோது மனம் மகிழ்வாக இருந்தது. இந்த தேடல் எப்போதும் இருக்க வேண்டும்.” என்றவர், “இதுபோன்ற பல நூறு பழங்கால உணவுகளை மீட்டெடுத்திருக்கிறோம். அவற்றை ஆவணங்களாக தொகுத்திருக்கிறோம். அதில் எதிலும் எங்கள் பெயரை போட்டுக்கொண்டதில்லை. அந்த ரெசிபியை யார் கொடுக்கிறார்களோ, அவர்களது புகைப்படங்களோடு விவரங்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறோம்.” என்றார் விருந்தோம்பல் கல்வியாளர் பொன்னிளங்கோ .
மேலும், “பல ஊர் தண்ணீர் குடித்து வளர்ந்தவன் நான். 50 ஆண்டுகளுக்கு முன்பு, ரோட்டோரியனான மைக்கேல் ஞானதுரை என்பவரின் முன்முயற்சியில் தொடங்கப்பட்டது இந்த சங்கம் ஹோட்டல். இப்போதைய முரளி சாரின் தந்தை சின்னபாப்புவின் கடும் உழைப்பில் உருவானது. இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வோர் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் அனுபவங்களை உள்வாங்கி புதுமை கண்டு வருகிறது.” என்பதாக குறிப்பிட்டவர், ”கண்ணதாசனின் புகழ்பெற்ற கவிதைகளுள் ஒன்று. கடவுளிடம் கேள்வி கேட்பது போலவும் அதற்கு கடவுள் பதிலளிப்பது போலவும் அமைந்திருக்கும். அதில், குழந்தை நடப்பது எப்படி? என்ற கேள்விக்கு பிறந்து பார் தெரியும் என்பதாக பதிலளிப்பார். அதுபோலவே, ஒவ்வொன்றுக்கும், காதலித்துப்பார் தெரியும், மணந்துபார் தெரியும் என்பதாக தொடரும் அந்த கவிதை. அதுபோலவே, அனுபவமே இறைவன்.
”செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் / நல்வருந்து வானத் தவர்க்கு.”- என்ற குறளுக்கு ஏற்ப, ”வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.” என்ற அத்திருக்குறளின் பொருளுக்கேற்ப மாணவர்கள் இத்துறையின் அனுபவங்களை உள்வாங்க வேண்டும்.” என்பதாக செழுமையான கருத்துக்களை பதிவு செய்தார், விருந்தோம்பல் கல்வியாளர் பொன்னிளங்கோ .
“எங்களுக்கும் சங்கம் ஹோட்டலுக்கும் இடையிலான பிணைப்பு பாரம்பரியமானது. எங்கு பணியாற்றுகிறீர்கள் என்றால், சங்கம் ஹோட்டல் என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வேன். சங்கம் ஹோட்டல் என்று குறிப்பிடுவதை அவ்வளவு பெருமையாக நினைப்பேன். ஆனால், இன்று எங்கேயோ வலிக்கிறது. முகப்பில் சங்கம் என்ற பெயர் இல்லாமல் இருப்பதை கண்டு. தயவுசெய்து சங்கம் என்ற பெயரை மட்டும் யாரிடமும் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். விற்றுவிடாதீர்கள். ப்ளீஸ்..” என்பதாக செஃப் தாமு உணர்ச்சிவயப்பட்ட அந்த தருணம் அரங்கம் சற்றே அதிர்ந்துதான் போனது.
“அப்படி எப்போதும் நடக்காது. இது காலத்தின் தேவை. கோர்ட்யார்ட மாரியட்டுடன் இணைந்து உலகத்தரத்திலான சேவையை வழங்கி வருகிறோம். விருந்தோம்பல் துறையில், நம்மை போலவே அவர்களது எண்ணங்களும் ஒத்திருந்ததால்தான் இந்த ஒருங்கிணைப்பை நிகழ்த்தியிருக்கிறோம்.” என்பதாக, சங்கம் ஹோட்டல் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர்கள் பதிலுரைத்தார்கள்.
இயல்புக்கு மாறிய செஃப் தாமு, சங்கம் ஹோட்டலில் தான் பணியாற்றிய தருணங்கள் பலவற்றை நெகிழ்வோடு குறிப்பிட்டார். மிக முக்கியமாக, அன்று அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்களது பண்புகளை சொன்னவர், “அரசு துறை நிறுவனம் போல, ஒரே இடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றுபவர்களை சங்கம் ஹோட்டலில் மட்டும்தான் நீங்கள் பார்க்க முடியும். ஸ்தாபகர் சின்னபாப்பு ரொம்பவே ஸ்டிரிக்ட்டானவர். சைலண்ட் அப்சர்வர். முதலில் அமைதியாக எல்லாவற்றையும் உற்றுநோக்குவார். உடனே எதிர்வினையாற்ற மாட்டார். எல்லாம் முடிந்தபின்பு, அழைத்து இதில் இதில் இன்ன குறை என்று தொகுத்து சொல்வார். அவரை பொறுத்தவரையில் ஒரே தவறு மீண்டும் மீண்டும் நிகழக்கூடாது என்பதை கண்டிப்புடன் எதிர்பார்ப்பார்.” என்பதாக, கடந்த கால அனுபவங்களை பகிர்ந்தார்.
மேலும், “வீட்டுக்கும் வேலை செய்யும் இடத்துக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். எவ்வளவு துயர் இருந்தாலும், சிக்கல் இருந்தாலும் பணியிடத்தில் உள் நுழையும்போது இன்முகத்துடன் மாற வேண்டும். எங்களை பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும். எப்போதும் சிரிச்சிகிட்டேதான் இருப்போம். இந்த துறையில் அப்படித்தான் இருந்தாக வேண்டும். மறுநாள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பீர்கள். ஆனால், உங்களை மாற்றிவிட அடுத்த டூட்டிக்கு ஆள் வந்திருக்க மாட்டார்கள். அப்போது என்ன செய்வீர்கள். முகம் மாறிவிடக்கூடாது. எப்போதும் பாசிட்டிவ் சிந்தனைகளோடுதான் பயணிக்க வேண்டும்.” என்பதாக, விருந்தோம்பல் பண்பின் மேன்மையை எடுத்துரைத்தார், செஃப் தாமு.
”நாங்கள் படித்த காலத்தில், தமிழகத்தில் சென்னையில் ஒரு இடத்தில்தான் அதுவும் அரசு கல்லூரிதான் இருந்தது. இன்று பல வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கின்றன. இந்த வாய்ப்புகளை நீங்கள் திறம்பட பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.” என்றவர், சில குறிப்பிட்ட சமையல் பொருட்கள் அடங்கிய பெட்டி ஒன்றை கையில் கொடுத்து, இதை வைத்து உணவுப்பொருளை ஒரு மணிநேரத்தில் தயாரித்து காட்சிப்படுத்த வேண்டும் என்பதாக, கேட்டரிங் கல்லூரி மாணவர்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தார், செஃப் தாமு. துவாக்குடி அரசு கேட்டரிங் கல்லூரி, ஜென்னீஸ், எஸ்.ஆர்.எம்., ஆகிய 5 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் குழு ஆர்வத்தோடு பங்கேற்று தங்களது தனித்திறமைகளை காட்சிப்படுத்தினர். அவற்றை மதிப்பீடு செய்து, அவர்களின் நிறை குறைகளை செஃப் தாமு சுட்டிக்காட்டினார். இப்போட்டியில் முதல் பரிசை எஸ்.ஆர்.எம். கல்லூரி தட்டிச் சென்றது.
இதற்கிடையில், மேடையிலிருந்து கீழிறங்கிய செஃப் தாமு தானே நேரடியாக சமையல் செய்யத் தொடங்கினார். மூன்றே நிமிடத்தில் காளான் மிளகு வருவல், இரண்டே நிமிடத்தில் உருளைக்கிழங்கு கறி, ஏழே நிமிடத்தில் மீன் குழம்பு என மேஜிசியனாக மாறி அரங்கை அதிசயிக்க வைத்தார். சங்கம் ஹோட்டலின் ஸ்பெஷல் உணவாக கருதப்படும் தயிர்சாத ரெசிபியை அதன் ரகசியத்தை போட்டுடைக்கவும் அவர் தவறவில்லை.
”சமையல் செய்யும்போது பதட்டம் கூடவே கூடாது. எங்கும் தவறு நிகழ்வது இயல்பு. அதுபோல சமையல் செய்யும்போதும் சில தவறுகள் நடப்பது இயல்பு. அதை கண்டு பதட்டப்பட்டு, அந்த பதட்டத்தோடே சரிசெய்ய முனைந்தால் மொத்த உணவும் கெட்டுவிடும். அதற்கு பதில், நிதானமாக அந்த தவறை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.” என்றவர்,
பார்வையாளர்களை அழைத்து சற்று முன் அவரே செய்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மீன் குழம்பில் சிறிது உப்பை சேர்த்தார். பார்வையாளர்கள் சிலரை அழைத்து ருசிபார்க்க சொன்னார். உப்பு கரிக்கிறது என்றார்கள். சிறிது எலுமிச்சை பழச்சாறும் சிறிது சர்க்கரையும் சேர்த்தபின், மீண்டும் ருசிபார்க்க சொன்னார். முன்பு கரித்த உப்பு இப்போது சரியான அளவுக்கு வந்திருப்பதாக சொன்னார்கள். இதுபோல, வழக்கமாக ஏற்படும் சிறு தவறுகளை சரிசெய்வது எப்படி என்பதற்கான குறிப்புகளையும் வழங்கினார் செஃப் தாமு.
திருச்சி சங்கம் ஹோட்டலின் 50-ஆம் ஆண்டு விழாவாக நடைபெற்ற இந்நிகழ்வு, செஃப் தாமு மற்றும் விருந்தோம்பல் கல்வியாளர் பொன்னிளங்கோ ஆகிய இரு ஜாம்பவான்களின் அனுபவங்களின் வழியே ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறையின் அனுபவங்களை அங்கே குழுமியிருந்த கேட்டரிங் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களிடத்தே கடத்திய பயனுள்ள பயிலரங்கமாக மாறியிருந்தது.
வே.தினகரன்.