அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தில் நடந்த ரெய்டும் – மணல் அரசியல் ! பின்னணி ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தில் நடந்த ரெய்டும் – மணல் அரசிய ! பின்னணி ?

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான துரைமுருகனின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் ரெய்டு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் ஆறு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, அவரது வீட்டின் உள்ளே நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 11 மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வுகளை நடத்தி முடித்துவிட்டு கிளம்பிச் சென்றிருக்கிறார்கள். எதற்காக வந்தார்கள்? என்ன ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ? என்பது குறித்து, இதுவரையில் அமலாக்கத்துறையின் சார்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் திடீர் பயணமாக புதுதில்லி கிளம்பி சென்றிருப்பதும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்த ரெய்டுக்கு பின்னணியில் ”மணல் அரசியல்” இருப்பதாக சிலர் கிசுகிசுக்கிறார்கள். தமிழகத்தில் மணல் குவாரிகளை மீண்டும் எஸ்.ஆர். குரூப்புக்கே கொடுப்பதென முடிவாகியிருக்கும் நிலையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 16 மாதங்களாக, அதாவது மணல் காண்டிராக்டர் எஸ்.ஆர். குரூப் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நாளில் மூடப்பட்ட மணல் குவாரிகள் இன்று வரையில் மீண்டும் திறக்கப்படாமல் இருக்கிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

துரைமுருகன் வீட்டில் ரைடு
துரைமுருகன் வீட்டில் ரைடு

அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருந்துவரும் எஸ்.ஆர். குரூப்புக்கே மீண்டும் ஒப்படைத்தால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதாக கருதிய ஆட்சி மேலிடம், அவருக்கு மாற்றாக வேறொருவரிடம் ஒப்படைப்பதற்கான தேடலை தொடங்கியது. வருடங்கள்தான் ஓடியது. ஆட்சி மேலிடம் திருப்தியாகும் வகையில் எவரும் சிக்கவில்லை. இறுதியாக, பொன்னர்-சங்கர் சகோதர்கள், கரூர் கே.சி.பி. மற்றும் மயிலாடுதுறை ராஜப்பா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

மணல் ராஜப்பா -
மணல் ராஜப்பா –

அரசிடம் இருந்து மணலுக்கான உரிமத்தை பெறுவதற்கு முன்பாகவே, அடுத்த மணல் காண்ட்ராக்டர் நான் தான் என்று மாவட்ட வாரியாக பலரிடமிருந்து பணத்தை வசூலித்தார் என்பதாக சர்ச்சையில் சிக்கினார் ராஜப்பா. இது குறித்த விரிவான பதிவை நமது அங்குசம் இதழில் ”ஆற்றுமணல் உரிமம் பெற்றுத்தருவதாக பல கோடி வசூல் ! சர்ச்சையில் சிக்கிய ராஜப்பா ! பின்னணி என்ன ?” என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறோம்.

இந்நிலையில், எஸ்.ஆர். குரூப்பை தமிழகத்திலிருந்து முற்றிலும் புறக்கணித்துவிட முடியாது என்று, குறைந்தபட்சம் சென்னை மண்டலத்தை மட்டுமாவது அவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தரப்பிலிருந்தும் மேலிடத்துக்கு நெருக்கமான ஒரு பவர்ஃபுல் நபரிடமிருந்தும் சிபாரிசுகள் சென்றிருக்கின்றன.

மணல் ராமசந்திரன் - மணல் கரிகாலன்
மணல் ராமசந்திரன் – மணல் கரிகாலன்

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மயிலாடுதுறை ராஜப்பா கழட்டிவிடப்பட்டு, மீண்டும் எஸ்.ஆர்.குரூப்புக்கே மீண்டும் மணல் அள்ளும் உரிமையை வழங்குவது என்றும்; கரூர் மாவட்டத்தை மட்டும் பொன்னர்சங்கர் குரூப்புக்கு கொடுப்பது என்றும் அரசு முடிவெடுத்ததாக சொல்கிறார்கள்.

இதற்கு முன்னர், மணல் குவாரிகளை நடத்த அனுமதித்துவிட்டு பின்னர் அதற்குரிய கட்டணம் வசூலிப்பது என்ற நடைமுறையை மாற்றி, இந்த முறை முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்பதாக நிபந்தணை விதித்திருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த நிபந்தனையும், பொதுவில் கடந்த ஆண்டைவிட கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும் எஸ்.ஆர். குரூப்புக்கு உவப்பாக படவில்லை என்கிறார்கள். இதனால், இன்னும் அந்த தொகையை கட்டி மணல் குவாரிகளை திறக்காமல் காலம் கடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.

இவற்றையெல்லாம்விட, முக்கியமாக, மீண்டும் மணல் குவாரிகளை திறந்தால் அமலாக்கத்துறையின் ரெய்டுக்கு ஆளாக நேரிடுமோ என்ற தயக்கமும் இந்த கால தாமதத்துக்கான காரணங்களாக சொல்கிறார்கள்.

எஸ்.ஆர்.குரூப் - சி.கே.ராஜப்பா - பொன்னர் சங்கர்
எஸ்.ஆர்.குரூப் – சி.கே.ராஜப்பா – பொன்னர் சங்கர்

சோதனை அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராவல் மண் எடுப்பதற்கான முயற்சியை எடுத்திருக்கிறது, எஸ்.ஆர்.குரூப். அதற்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் அளவில் செயல்படும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எஸ்.ஆர். குரூப்பும் மல்லுக்கு நிற்க, கை கலப்பாகியிருக்கிறது.

இந்த பஞ்சாயத்தை பேசி தீர்க்க, அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் சம்பந்தியை பிடித்து எஸ்.ஆரே. நேரில் சென்று பேசி முடித்திருக்கிறார் என்கிறார்கள். ஆனாலும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. உள்ளூரில் எஸ்.ஆர். குரூப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். இந்த தடங்கலும், எஸ்.ஆர். தரப்பின் தயக்கத்திற்கும் காலதாமதத்திற்கும் முக்கியமான காரணம் என்கிறார்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கே.சி.பழனிச்சாமி
கே.சி.பழனிச்சாமி

இந்த பின்னணியிலிருந்துதான், எஸ்.ஆர். குரூப்புக்கே மீண்டும் மணல் அள்ளும் உரிமையை வழங்க வேண்டும் என்று சிபாரிசு செய்த அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இவர்களுக்காக ஆட்சி மேலிடத்தில் சிபாரிசு செய்யும் அந்த இருவரும் எஸ்.ஆர். குரூப்பின் மறைமுக பங்குதாரர்களாக இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுந்ததால்தான், அமலாக்கத்துறை இந்த ரெய்டை நடத்தியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் !

இதுஒருபுறமிருக்க, ”மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையுடன் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து ஒருவர் ஆதங்கத்துடன் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த ஆடியோவில், மணல் குவாரிகளை திறப்பது தள்ளிக்கொண்டே போவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார். அதிலும் முக்கியமாக, இன்னும் ஓராண்டு தள்ளிப்போனாலும் பரவாயில்லை; காத்திருக்கிறோம். அவசரகதியில் எவருக்கும் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். மீண்டும் திறந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கி மீண்டும் மணல் குவாரியை மூடுவதற்கு பதிலாக, அரசே தனி அதிகாரியை நியமித்து மணல் குவாரிகளை திறப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மணல் ராமச்சந்திரன் -திண்டுக்கல் ரத்னம்
மணல் ராமச்சந்திரன் -திண்டுக்கல் ரத்னம்

தமிழகத்தில் எப்படியும் ஒரு இலட்சத்திற்கும் குறைவில்லாத டிப்பர் லாரிகள் இருப்பதாக சொல்கிறார்கள். இவையனைத்தும், மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றி இறக்குவதற்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. மற்ற லாரிகளை போல, சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சவாரி பார்க்க முடியாது என்கிறார்கள். ஆற்று மணலுக்கு மாற்றாக, தற்போது எம்.சாண்ட் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் நிலையில், கிரஷர் வைத்திருப்பவர்களே ஒவ்வொரு கிரஷருக்கும் பத்து டிப்பர் லாரிகளை கைவசம் வைத்திருக்கிறார்கள். அந்த நடையும் கிடைப்பதில்லை என்கிறார்கள்.

எம்.பி. கதிர் ஆனந்த் - மணல் கரிகாலன் -அமைச்சர் துரைமுருகன்
எம்.பி. கதிர் ஆனந்த் – மணல் கரிகாலன் -அமைச்சர் துரைமுருகன்

இது தவிர, தமிழகம் முழுவதும் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்கள் எப்படியும் 50,000-க்கும் குறைவில்லாதவர்கள் இருக்கிறார்கள். இந்த வண்டிகளுக்கு லோடு அடிக்கும் தினக்கூலிகளை கணக்கிட்டால், அவர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள். தினக்கூலிகளாவது கிடைக்கும் வேலைக்கு சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சொந்தமாக மாட்டையும் வண்டியையும் சேர்த்து வைத்திருப்பவர்கள் அந்த மாடுகளை பராமரித்தாக வேண்டும். இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இரு நூறு ரூபாயாவது அந்த மாடுகளின் தீவனத்திற்காக செலவு செய்தே ஆக வேண்டுமென்ற நெருக்கடியையும் சேர்த்தே சந்திக்கிறார்கள் என்கிறார்கள்.

எம் சாண்ட் Vs ஆற்று மணல்
எம் சாண்ட் Vs ஆற்று மணல்

பாதிக்கப்படும் கட்டுமான தொழில் !

இன்னொருபுறம், ஆற்றுமணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளின் குடியிருப்பு திட்டங்கள் முழுவீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில், குவாரிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிப்போடுவது எம்.சாண்ட் உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிட்டது என்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 5 யூனிட் எம்.சாண்டின் விலை ரூ15,000-லிருந்து இப்போது அப்படியே இருமடங்காக உயர்ந்து ரூ.30,000-ஐ தொட்டுவிட்டது என்கிறார்கள்.

அப்படி இருமடங்கு தொகை கொடுத்தாலும் உருப்படியான எம்.சாண்ட் கிடைக்கிறதா, என்றால் அதுவும் இல்லை என்கிறார்கள். பெரும் கல்லை உடைத்து தூளாக்கி, தூளாக்கியதை அதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் வாஷிங் மெஷின் போன்ற இயந்திரத்தில் போட்டு குறைந்தது மூன்று முறையாவது அந்த மணலை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும் என்கிறார்கள். மூன்று முறை தண்ணீரில் கரைந்து, சலித்து எடுக்கப்படும் மணல்தான் அரசு நியதிகளின்படி தரமான எம்.சாண்ட். ஆனால், பெரும்பாலான குவாரிகளில், இவ்வாறு மூன்று முறை தண்ணீரில் கழுவப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள்.

மணல் குவாரி
மணல் குவாரி

இவ்வாறு முறையாக மூன்று முறை கழுவிய பின்னர் பயன்படுத்தாமல், தவிர்க்கப்படுவதால், அந்த நுண் தூசுகளுடன் உள்ள எம்.சாண்டை பயன்படுத்தி எழுப்பப்படும் கட்டுமானத்தின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்கிறார்கள். சிமெண்டுடன் ஒன்றுடன் ஒன்று கலந்து கெட்டியான பிடிமானத்தை அந்த கட்டுமானம் பெற முடியாத நிலை ஏற்படும் என்கிறார்கள்.

மூன்று முறை கழுவி எடுத்த மணலை காட்டி ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு லோடுக்கும் அதுபோலவே, மூன்றுமுறை கழுவித்தான் ஏற்றுகிறார்களா? என்பதை எந்தஒரு நுகர்வோரும் உறுதிபடுத்தப்பட முடியாத நிலையில்தான் எம்.சாண்ட்களின் பயன்பாடு பரவலாக இருந்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தேவை அரசின் உடனடி தலையீடு !

ஆற்றுமணலை நம்பியிருக்கும் குடும்பங்களின் நலனில் இருந்தும்; கட்டுமானத் தொழிலின் தேவை உணர்ந்தும் உடனடியாக ஆற்றுமணல் குவாரிகள் திறப்பது குறித்து அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.