சசிகலாவிற்கு புதிய பட்டம் ; ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா விசிட் !
இன்று அக்டோபர் 16 ஜெயலலிதா சமாதிக்கு செல்வதற்காக காவல்துறையின் பாதுகாப்பை கேட்டிருந்தார் சசிகலா, இந்த நிலையில் இன்று அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ போகும் வழியில் எல்லாம் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்புக்கு மத்தியில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி சென்றடைந்தார்.
ஜெயலலிதா சமாதியின் வாயிலுக்குள் நுழையும் பொழுதும் ஆதரவாளர்கள் பலரும் சசிகலாவிடம் தனது முகத்தை காட்ட வேண்டும் என்று முண்டியடித்து முன்னே சென்றனர்.
ஒருவழியாக ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்ற சசிகலா தனது கர்ச்சீப்பை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டு ஐந்து வருடத்திற்குப் பிறகு தனது தோழியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு அண்ணா, எம்ஜிஆர் நினைவிடம் களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
அப்போது நிர்வாகிகள் பலரும் அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா என்று முழக்கங்கள் எழுப்பினர். அந்த சமயத்தில் முன்னாள் முதல்வரின் பெயரை பாதியாக கொண்ட தொலைக்காட்சியில் “புரட்சித் தாய் சின்னம்மா” என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அமமுக நிர்வாகிகளும், சசிகலா ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் புரட்சித் தாய் சின்னம்மா என்று தெறிக்க விட தொடங்கினர்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறி விட்டு வந்திருக்கிறேன். அதிமுகவை ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு புறப்பட்டுச் சென்றேன். இப்படி அதிமுகவையும் தொண்டர்களையும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். நிகழ்ச்சி அனைத்தையும் சசிகலாவின் உறவினரான விவேக் முன்னின்று செய்தார்.