மதிமுகவில் துரை வைகோவுக்கு முடிசூட்டுவிழா !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

அக்டோபர் புரட்சி என்பது திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்குப் புதிதல்ல. 1993 அக்டோபரில்தான் “விடுதலைப்புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து” என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தொடர்ந்து, வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். “வாரிசு அரசியலுக்கு நான் தடையாக இருப்பேன் என்றே நான் நீக்கப்பட்டேன்” என்று வைகோ திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

28ஆண்டுகள் கழித்து மதிமுகவில் ஓர் அக்டோபர் புரட்சி 20ஆம் நாள் நடைபெறவுள்ளது. திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ, புரட்சி நாயகன் என்று பட்டம் சூட்டப்பட்டுள்ள வைகோ தன் மகனை அரசியல் வாரிசாக அறிவிக்கவுள்ளார் என்பதுதான் சுவையான முரண்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

கடந்த ஓராண்டு காலமாகவே வைகோவின் மகன் அரசியலுக்கு வரவேண்டும். கட்சிக்கு இளம்ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். வைகோ உடல் நலம் கருதித் தன் மகனை அரசியலுக்குக் கொண்டு வரவேண்டும். அவருக்கு அதிகாரம் மிக்க பதவி தரப்படவேண்டும் – என்ற குரல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டபோது, வைகோ,“நான் வாரிசு அரசியலை எதிர்த்து இயக்கம் தொடங்கியவன். நான் ஒருபோதும் வாரிசு அரசியலைச் செய்யமாட்டேன்” என்று உறுதிபடக் கூறியே வந்தார். உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த 9ஆம் தேதி மாலை செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது,‘எனக்குத் தெரியாமல் என் மகன் வையாபுரி துரை வைகோ என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். என் அனுமதியில்லாமல் பல மாவட்டங்களில் இறப்பு நிகழ்வுகளிலும், திருமண நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார். சில மாவட்டச் செயலாளர்கள் என் மகனைத் தவறாக வழிநடத்துகிறார்கள். என் மகன் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் பெரிய சுவரொட்டிகளை நானே கிழிக்கச் சொல்லியிருக்கிறேன். துரை வைகோவிற்கு நான் துணைப் பொதுச்செயலாளர் பதவியை விட்டுத்தரத் தயார் எனக் கூறிய மல்லைச் சத்யாவைக் கண்டித்திருக்கிறேன். நான் பட்ட வேதனைகள், இன்னல்களை அரசியலில் என் மகன் படவேண்டாம் என்று விரும்புகிறேன். அரசியலுக்குத் துரை வையாபுரி வருவதை நான் விரும்பவில்லை. அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், துரை வையாபுரி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்துப் பெரும்பான்மை கருத்துப்படி முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறிய காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

 

3

கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில்தான் திருச்சி புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டது. வடக்கு மாவட்டத்திற்கு டிடிசி சேரன் செயலாளராகத் தொடர்ந்தார். தெற்கு மாவட்டத்திற்கு மணவை தமிழ்மாணிக்கம் நியமிக்கப்பட்டார். மணவைத் தமிழ்மாணிக்கம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்சியைச் சார்ந்த அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவர் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியைச் சந்தித்து, “மணவைத் தமிழ்மாணிக்கத்தைத் தலைவர் வைகோ யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக நியமனம் செய்துள்ளார். தெற்கு மாவட்டத்தில் உள்ள புலவர் முருகேசன் கோபித்துக் கொள்வார் என்று அவருக்கு மாநில விவசாய அணி செயலாளர் பொறுப்பைத் தந்திருக்கிறார்” தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் செய்தியைத் திருச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் வைகோ,“திருப்பூர் துரைசாமியைச் சந்தித்துக் கட்சியின் உள்விவகாரங்களை ஒருவர் பேசியிருக்கிறார். அவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை?” என்று பேச, வைகோவை அறையில் சந்தித்த அந்த அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் “நான்தான்” என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டதை அறிந்த வைகோ திகைத்துள்ளார். தமிழ் மாணிக்கம் நியமனம் குறித்த செய்தி திருச்சி மாவட்ட மதிமுகவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதை வைகோவும் உணர்ந்தார்.


தமிழ் மாணிக்கம் வடக்கு மாவட்டம், மாநகர் மாவட்டங்களைப் பந்தாடும் வகையில் அரசியல் பணிகளைப் புயல் வேகத்தில் செய்தார். புயல்வேக அரசியல் பணிக்கு முன்பு வைகோ மகன் வையாபுரியின் படத்தை மாவட்டக் கழக அலுவலகத்தில் வைத்தார். தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளின் சுவெராட்டிகளிலும், கைப்பிரதிகளிலும் வையாபுரி படம் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். “நான் வைகோ ஆள் இல்லை…. வையாபுரி ஆள்” என்று அறிவித்துவிட்டே அரசியல் களத்தில் இறங்கினார். வையாபுரி அளவுக்கு அதிகமாகத் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுவது கண்டு மாவட்ட நிர்வாகிகள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த நேரத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர்.“வையாபுரி கட்சியில் எந்தப் பதவியில் உள்ளார்? எதற்கு இத்தனை விளம்பரம்?” என்று கேட்க, பிரச்சனை பெரிதானது. திருச்சியில் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற மதிமுக சின்னப்பாவிற்குப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ரோவர் கல்லூரி தாளாளர் வரதராஜன்,“மதிமுக அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்க்கக்கூடாது; ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பைக் கைவிட்டிருக்கவேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கக்கூடாது; மீத்தேன் திட்டங்களை எதிர்க்கக்கூடாது; இனி வருங்காலங்களில் மதிமுக எதையும் எதிர்ப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்று பேசியவுடன், மதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் எழுந்து ரோவர் வரதராஜனுக்குக் கூட்டத்திலே எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய செயற்குழு உறுப்பினர்,“கட்சியில இல்லாத வையாபுரிய… சுவரொட்டியில் போடுறீங்க…… மதிமுக எடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் தவறு என்று பேசுறீங்க….. விட்டா அண்ணா இந்தி படிக்கவேண்டாம் என்பதை மறுபரிசீலனை செய்து படிக்கவேண்டும் என்று கூறுவீர்கள்போல” என்று கடுமையாகப் பேச, வரதராஜன் பேச்சை முடித்துக் கொண்டார்.

 

4

செப்டம்பர் 22ஆம் நாள் சென்னையில் வைகோ மகன் வையாபுரி, “இன்று வைகோ பிறந்தநாள். இனி ஒவ்வொரு ஆண்டும் ‘தமிழர் தலைநிமிர்வு நாளாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்து முதல்முறையாக வைகோவின் பிறந்தநாளைச் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை அழைத்துக் கொண்டாடினார். தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வைகோவிற்கு வாழ்த்து சொன்னார்கள் என்று சங்கொலியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், வைகோ இதுவரை தன் பிறந்தநாளைக் கொண்டாடியது இல்லை. யாரையும் கொண்டாட அனுமதித்தும் இல்லை. மகன் கொண்டாடியதைக் கண்டிக்கவும் இல்லை. மாறாக இதுநாள் வரை வைகோ அமைதி காத்தே வருகின்றார். இது குறித்து நம்மிடம் பேசிய பொன்மலை பகுதி கழக முன்னாள் செயலாளர் ஒருவர்,“வைகோவின் அனுமதியோடுதான் வையாபுரி பிறந்தநாளைக் கொண்டாடியிருக்க முடியும். காரணம் இதுவரை வைகோ தன் மகன் வையாபுரியைக் கண்டிக்கவில்லை.

கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் வையாபுரி சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்கிறார். இந்தச் செய்திகள் அனைத்தும் வைகோவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் கட்சியின் அதிகாரப்பூர்வ வார ஏடு சங்கொலியில் செய்திகள் வருகின்றன. ஆனால் வைகோ என்ன சொல்கிறார் என்றால் என் மகனைச் சில மாவட்டச் செயலாளர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை. வையாபுரி வைகோ பிறந்தநாள் உரையில் என் உள்ளத்தில் பெரியாரும் உள்ளார். பெருமாளும் உள்ளார் என்று கூறுகிறார். திமுகவில் வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டிய வைகோ தன் மகனுக்குத் திராவிட இயக்கக் கொள்கைகளைக் கற்றுத்தரவில்லை என்றுதானே பொருள்படுகின்றது. ஸ்டாலின் மகன் உதயநிதி சொல்கிறார்,“எனக்கும் எங்க அப்பாவிற்கும் கடவுள் நம்பிக்கையில்லை. எங்க அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. எங்கள் தலைவர் தந்தை பெரியார். எங்களின் வழிகாட்டி ஆசிரியர் ஐயா கி.வீரமணி” என்று கூறியுள்ளார். கலைஞர் தன் வாரிசுகளைக் கொள்கைகளைச் சொல்லிச் சரியாகவே வளர்த்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. வையாபுரிக்கு இந்தத் தெளிவு இல்லை என்பது வேதனையாகவே உள்ளது” என்று சீற்றத்துடன் பேசினார்.

திமுகவிலிருந்து மதிமுகவிற்கு வந்து, மாவட்டச் செயலாளராக உள்ள பலர் வைகோ மகன் வையாபுரியை அரசியலில் ஏற்கத் தயங்குகின்றனர். மதிமுகவிலே வளர்ந்த இளைய தலைமுறை மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வையாபுரியை வரவேற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றிச் செய்திகளை ஊடகங்கள் வழியாகப் பரப்பி வருகின்றனர். வையாபுரியை ஏற்கத் தயங்கும் மூத்த மாவட்டச் செயலாளர்களுடன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தொலைபேசியில் பேசிவருகிறார். “வைகோவுக்கு மகன் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை. ஆனாலும் பல மாவட்டச் செயலாளர்கள் வைகோவை மீறி வையாபுரி அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வைகோ இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவார். வைகோவை மீறி நடந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். வைகோவுக்கு ஆதரவாக இருங்கள்” என்ற வகையில் துரைசாமி பேசிவருகிறார். திருச்சியில் உள்ள அரசியல் அனுபவமும் அரசியல் முதிர்ச்சியும் மிக்க ஒருவரிடம் மதிமுக அவைத்தலைவரும் தலைமைநிலைய செயலாளர் ஒருவரும் மிக அண்மையில் பேசியுள்ளனர்.

அப்போது,“திராவிட இயக்கச் சிந்தனையில்லாத மகனின் அரசியல் நுழைவை வைகோ விரும்பவில்லை. மாவட்டச் செயலாளர்கள் வையாபுரியின் அரசியல் நுழைவை வரவேற்றால், நீங்கள்தான் நிலைமையை அறிந்து உரையாற்றவேண்டும்” என்றதற்கு,“நிலைமைக்குத் தக்கவாறு முடிவெடுத்துப் பேசுவேன்” என்று பதில் கூறியுள்ளார்.

வைகோ மகன் வையாபுரியின் கருத்துகள் “பாஜக சிந்தனையோட்டத்தோடு உள்ளது” என்று அண்மையில் ஒரு முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அரியலூர் சட்டமன்ற மதிமுக (சட்டப்படி திமுக) உறுப்பினர் சின்னப்பா பெரியார், அண்ணா, வைகோ, துரை வைகோ படம் போட்டு ஆயுதப் பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவித்த பதாகை முகநூலில் வெளியிடப்பட்டது. அதற்கு மதிமுகவினர் பலரும் கடும் கண்டனம் தெரிவிக்கவே அந்தப் பதிவு சில நாள்களில் நீக்கம் செய்யப்பட்டது. துரை வையாபுரி என்னும் துரை வைகோவின் அரசியல் நுழைவு பெரும்பான்மை இந்துக்களைக் குறித்து நகரத் தொடங்கும் என்ற சிந்தனையோட்டம் தெளிவாகவே உள்ளது. மதிமுகவின் அடிநாதமாக இருந்த ஈழப்பிரச்சினை அமைதியாகிவிட்டது.

தமிழ்நாட்டின் போராட்டக் களமாக இருந்த மீத்தேன், நியூட்ரினோ போன்ற பல திட்டங்களுக்குத் திமுக அரசு நிர்வாக ரீதியாக அனுமதி மறுத்து வருகின்றது. மதிமுக வளருவதற்கான களங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றியத்தை மதிமுக கைப்பற்றியுள்ளது. 8 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி துரைவைகோவின் அரசியல் சாணக்கியத்திற்குச் சான்றாக உள்ளது. அண்ணன் துரை வைகோவின் ஆட்டம் தொடங்கிவிட்டது என்ற வகையில் முகநூலில் விதவிதமாகச் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அக்டோபர் 20 தன் மகன் அரசியல் நுழைவை வைகோ தடுத்து நிறுத்துவாரா? பெரும்பான்மை மாவட்டச் செயலாளர்கள் எண்ணப்படி வாரிசு அரசியலுக்குத் தலைசாய்த்து, இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தந்து முடிசூட்டுவிழா செய்வாரா? என்ற கேள்விகளுக்குப் பதில், வைகோ மகன் மாவட்டச் செயலாளர்களால் அரசியலுக்கு இழுத்து வரப்படுவார் என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

ஆதவன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.