பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?
ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) மூலம் தனியார் பள்ளி வாகனங்களைச் சோதனை செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.
அதே வேளையில், கிராமப்புற மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி, பின்வரும் மிக முக்கியமான கோரிக்கைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
1. அரசுப் பேருந்துகள் மற்றும் அரசுப் பள்ளிகள் சமமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களைப் போலவே, கிராமப்புறங்களில் இருந்து இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளையும் (TNSTC) முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
அரசுப் பேருந்துகளின் பிரேக் வசதி, அவசரக் கால கதவுகள் மற்றும் படியின் தரம் போன்றவற்றைத் தீவிரமாகச் சோதித்து, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே இயக்க அனுமதிக்க வேண்டும்.
அதே போல் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளாகப் பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும்.
2. கிராமப்புற மாணவர்களின் வருகை விகிதம் (டேட்டா ஆய்வு):
கிராமங்களில் இருந்து 15 முதல் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்துப் பள்ளிகளுக்குச் செல்லும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை மாவட்ட கல்வித் துறை (CEO) துல்லியமாகக் கணக்கெடுக்க வேண்டும். இதன் மூலம் போக்குவரத்துத் தேவை உள்ள கிராமங்களை அடையாளம் காண முடியும்.
3. வழித்தட வாரியான மாணவர்கள் கணக்கெடுப்பு (Route-wise Mapping):
ஒவ்வொரு தனியார் பள்ளியும் தங்கள் நிறுவனத்திற்கு எந்தெந்த கிராமத்துச் சாலைகள் (Routes) வழியாக, எவ்வளவு மாணவர்கள் வருகிறார்கள் என்ற பட்டியலை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தேவையில்லாத போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கூட்டு வாகனப் பயன்பாட்டிற்கும் உதவும்.
4. பள்ளி நேர மேலாண்மை மற்றும் நேர மாற்றம்:
15 அல்லது 18 கி.மீ தள்ளியிருக்கும் கிராமத்து மாணவர்கள், அதிகாலையிலேயே எழும் கட்டாயத்தில் உள்ளனர். இது குழந்தைகளின் தூக்கத்தையும் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிடாமல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சிரமமின்றி வரும் வகையில் பள்ளி நேரங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. ஒப்பந்த அடிப்படையிலான சிறப்புப் பேருந்துகள் (Contract Basis):
பகுதிக்குச் செல்லும் வெவ்வேறு தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து, அந்த குறிப்பிட்ட வழித்தடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) தனியாகப் பேருந்துகளை இயக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தலாம். இது பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும்
.
6. கூடுதல் அரசுப் பேருந்துகள் மற்றும் மாணவர் சிறப்புப் பேருந்துகள்:
பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கிராமப்புற வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் படியில் தொங்கியபடி (Footboard Travel) ஆபத்தான பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படும். மாணவர்கள் நிம்மதியாக அமர்ந்து, புத்துணர்ச்சியோடு பள்ளிக்கு வர, காலையிலும் மாலையிலும் “மாணவர் சிறப்புப் பேருந்துகளை” (Student Special) இயக்க வேண்டும்.
எனவே, தாங்கள் இக்கோரிக்கைகளை உன்னிப்பாகப் பரிசீலித்து, பள்ளி கல்வித் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டு ஆய்வு நடத்தி, கிராமப்புற மாணவர்களின் பாதுகாப்பான பள்ளிப் பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனா்.
(திருவேங்கடம்)
சமூக ஆர்வலர், அல்லூர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.