ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம்!
வாழ்நாள் பயனை அனுபவித்த மனமகிழ்ச்சி என்பார்களே. அப்படி ஒரு மனநிறைவு. ஜூன்-31, ஞாயிற்றுக்கிழமை தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மறவர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு தந்த பெருமகிழ்ச்சி அது.
பொதுவில் திருமணம் என்றாலே, மகிழ்வானதுதான் மறுப்பதற்கில்லை. ஆனாலும், இந்த திருமணம் அப்படிப்பட்டதல்ல. கலீலூர் ரஹ்மான் – நசீபா பானு தம்பதியினரின் மகன் உ.க.முகம்மது அனஸ் என்பவருக்கும்; ஞா.அ.ராஜா – ஸ்டெல்லா மேரி தம்பதியினரின் மகள் அ.லில்லி சினேகா ஆகியோரின் திருமண நிகழ்வு அது.
மாப்பிள்ளை முஸ்லீம். பொண்ணு கிறிஸ்டியன். இருவேறு மதங்கள் சங்கமிக்குமிடத்தில், அவர்கள் இருவரும் என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை. மாப்பிள்ளை வீட்டில் அச்சடித்த திருமண பத்திரிகையில் நிக்காஹ் என்றோ பொண்ணு வீட்டில் “தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கடவன்” என்ற பைபிள் வசனத்திற்கோ இடமில்லை. ”யாயும் ஞாயும் யாராகியரோ?”. – என்ற குறுந்தொகை பாடலும்; ”அன்பும் அறனும்” எனத்தொடங்கும் வள்ளுவரின் குறளும்தான் இடம்பெற்றிருந்தது.
மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண். மணமகனின் பட்டு வேட்டி சட்டையைத்தவிர மேடையில், காதில், கையில், கழுத்தில் எவையும் மின்னவில்லை. மணமக்களின் பெற்றோர்களும்கூட எந்தவித ஆடம்பர உடையலங்காரங்கள் இன்றி எளிமையாகவே இருந்தார்கள். இதைவிட, நிகழ்வில் பங்கேற்றவர்களும் அப்படியேத்தான் இருந்தார்கள். இதெல்லாம், இதுவரை நான் நேரில் கண்ட திருமண நிகழ்வுகளில் கண்டிராத பேரதிசயங்கள்.
திருமண நிகழ்வுக்கு பேணர் கட்டிக்கொட்டிருந்த தோழர் கார்க்கியிடம் மண்டபத்தார்கள் கேட்டிருக்கிறார்கள். “மண்டபத்துல டெக்ரேஷன் கூட வேண்டானு சொல்லிட்டாங்க. பையன் முஸ்லிம். பொண்ணு கிறிஸ்டியன். ஃபாதர் வருவரா? இல்ல, ஜமாத்காரங்க வந்து கல்யாணம் செஞ்சி வைப்பாங்களா?” என்று.
என்னதான் திருமண ஏற்பாடுகள் இறுதிநேரத்தை எட்டியிருந்தாலும், முதல்நாள் இரவு வரையில் மணமகனின் தந்தை கலீலூர் ரஹ்மானுக்கு ஒருவித பதட்டம். “சொந்த காரங்கவுங்கள பகைச்சி, ஜமாத்தாரின் எதிர்ப்பையும் மீறித்தான் இந்த கல்யாணத்தை நடத்துறேன். எத்தனை பேரு கல்யாணத்துக்கு வர்ற போறாங்கனுதான் தெரியல” என்ற கவலை அவருக்கு.
மறுநாள் ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம். கலீலூர் ரஹ்மான் கவலைப்பட்டதற்கு நேர்மாறாக, அரங்கத்தின் சரிபாதிக்கும் மேலான இருக்கைகளை ஆக்கிரமித்திருந்தார்கள் அவரது இசுலாமிய மார்க்க சொந்தங்கள். கட்டுக்கோப்பான மார்க்க நெறி கொண்டது இசுலாமிய மதம் என்றால், அந்த கட்டுக்கோப்பை கச்சிதமாக பராமரித்து வரும் மார்க்க நெறிக்கு பெயர்போன ஊரான கடையநல்லூரில்தான் இந்த ஆச்சர்யமும் அரங்கேறியிருக்கிறது. ஆகச்சிறந்த திருமண பந்தத்தின் அடையாளமாக மட்டுமின்றி, தமிழகத்தின் மதநல்லிணக்கத்தின் எடுப்பான உதாரணமாகவும் அமைந்துபோனது இத்திருமண நிகழ்வு.
முன்னொரு காலத்தில், 1930 களில் தந்தை பெரியார் பார்ப்பனர்களை வைத்துத் திருமணச் செய்யும் முறையை மறுத்து, சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்து, தொடர்ந்து பல திருமணங்களைக் கிராமங்களிலும் நடத்தினார். இந்திய விடுதலைக்குப் பின்னும் தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை வேகங்கொண்டு நடத்தினார். நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்க்காமல், திராவிட இயக்க முன்னணி தலைவர்கள் தலைமையில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வார்கள். தாலி பெண்ணுக்கான அடிமைச் சின்னம் என்பதால் சுயமரியாதை திருமணத்தில் தாலி அணிவிக்கும் பழக்கம் மேற்கொள்ளப்படவில்லை.
1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்பதற்கு இந்து மதச் சட்டத்தில் உள்ள திருமண முறையில் சிறு திருத்தமாக, திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் பார்ப்பனர்களைக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல், உற்றார், உறவினர் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டும், தாலி அணிவித்தும் செய்துகொள்ளும் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது என்று சட்டம் நிறைவேற்றினார் என்பதெல்லாம் தமிழகத்தின் சுயமரியாதை உணர்வுக்கான சான்றுகள்.
ஆனாலும், சாதி ஆணவப்படுகொலைகளின் காலகட்டத்தில் இவையெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டனவா? என்ற வேதனையிலும் ஆற்றாமையிலும் உழன்று கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு இத்திருமண நிகழ்வு பெருமருந்து.
மணமக்களின் பெற்றோர்கள் கலீலூர் ரஹ்மானும், அ.ஞா.ராஜாவும் ம.க.இ.க. தோழர்கள் என்பதால் மட்டும் இது சாத்தியமாகிவிடவில்லை. மிக முக்கியமாக, இருவருமே அந்தஸ்தில் சமமானவர்கள். நல்ல கல்வி புலத்தோடு வசதியும் படைத்தவர்கள். ஆனாலும், கவினை வெட்டி சாய்க்க அவனது சாதி தான் காரணமாகியிருந்தது. இன்னும் சில நேர்வுகளில், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட, அந்தஸ்து தடையாக இருக்கிறது. இவ்வாறு, ஆணவப்படுகொலைகளின் வரையறைகள் உருமாறியிருக்கும் காலகட்டத்தில்தான், சாதி கடந்து, மதம் கடந்து, மனிதமாக சங்கமித்திருக்கும் இந்த எளிய திருமண நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. இன்ஸ்டாகிராம் கழிசடை காதல் ரகங்கள் ஒருபுறமும் சாதிய ஆணவப் படுகொலைகளின் காலமாகவும் மாறிவிட்ட தமிழகத்தில்தான் இப்படி ஒரு திருமணமும் நிகழ்ந்திருக்கிறது.
இதுபோன்ற திருமணங்கள் தமிழகத்தின் வீதிகள் தோறும் நிகழ்த்தப்பட வேண்டுமென்ற உந்துதலை தருகிறது. இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; அடுத்தடுத்த ஆணவப்படு கொலைகளால் சாதிய கவுச்சி வீசும் தமிழகத்துக்கு அவசியமான ஒன்று.
இத்திருமண விழாவுக்கு மக்கள் அதிகாரம், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் எழில் மாறன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநிலச் செயலாளர் தோழர் கோவன், ஆவணப்பட இயக்குநர் கோம்பை எஸ்.அன்வர், இடதுசாரி செயற்பாட்டாளர் தோழர் மருதையன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திச் சாதி, மத மறுப்பு திருமணங்கள் பெருகி மனிதம் போற்றப்படும் சமூகமாக மலரவேண்டும் என்று உரையாற்றினர். தமுஎசக கவிஞர் ப.மகாலட்சுமி மணவிழாவிற்கு வருகை தர இயலாத நிலையில் அவர் அனுப்பி வைத்த கவிதையைத் தோழர் கார்க்கி வாசித்தார்.
— ஆதவன்





Comments are closed, but trackbacks and pingbacks are open.