ஈரோட்டில் மாயமான ஐந்து பள்ளி மாணவிகள் ! தகவலறிந்து மூன்றே மணிநேரத்தில் மீட்ட திருச்சி போலீசார் !
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த கையோடு, ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஐந்து மாணவிகள் மாயமான சம்பவம் தமிழகம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மாயமானதாக சொல்லப்பட்ட ஐந்து மாணவிகளையும் திருச்சி மாவட்ட சமயபுரம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோர்களையும் போலீசாரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, அந்த மாணவிகள் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னலை போலீசார் பின்தொடர்ந்து வந்த நிலையில், திருச்சி – முக்கொம்பு அருகில் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினத்தின் முன்முயற்சியில் தகவல் கிடைத்த மூன்றே மணி நேரத்தில் அம்மாணவிகளை மீட்டிருக்கிறார்கள்.

பள்ளி மாணவிகள் ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டது தொடர்பாக, திருச்சி மாவட்ட போலீசார் தெரிவிக்கையில், “ஈரோடு மாவட்டம், பவானி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (15.04.2025) 10-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்த 5 மாணவிகளை காணவில்லையென மாணவிகளின் பெற்றோர்கள் இரவு 0915 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி பவானி காவல் நிலைய குற்ற எண்:188/25 U/s Girl Missing-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி மாணவிகள் குறித்து விசாரித்த வகையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
உடனடியாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. சுஜாதா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., தொடர்பு கொண்டு மேற்படி தகவலை தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பகிர்ந்து காணமால் போன பள்ளி மாணவிகளை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, திருச்சி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அதி தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரவு 12.58 மணிக்கு சமயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மேற்கண்ட 5 பள்ளி மாணவிகளையும் இரவு ரோந்து அதிகாரி வீரமணி, காவல் ஆய்வாளர், சமயபுரம் அவர்கள் மீட்டு சமயபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று, அங்கு அலுவலில் இருந்த ஜெயசித்ரா, காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.

இது சம்மந்தமாக, உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் பகவதி அம்மாள், பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் இன்று (16.04.2025) காலை 0400 மணிக்கு மேற்படி 5 பள்ளி மாணவிகளையும் திருச்சி சமயபுரத்தில் நல்ல முறையில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
மேற்படி பள்ளி மாணவிகள் காணாமல் போனது சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு மேற்படி மாணவிகளை மீட்டுள்ளது பொதுமக்களிடம் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. சுஜாதா, அவர்களும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.