கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி
கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறிப்பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் நூதன மோசடி செய்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
கல்வி உதவித்தொகை
திருவெறும்பூர் எழில்நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 42). இவர் திருச்சி மாவட்ட சைபர்கி ரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், எனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்தது.
எதிர் முனையில் பேசிய நபர், எனது மகளின் பெயரை கூறி, அவரது பெற் றோரா? என தெளிவுப்படுத்தி கொண்டார். பின்னர் எனது மகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகையாக ரூ.28,500 வழங்குவதாக கூறினார்.
பின்னர் எனது மனைவியின் ஜிபே எண்ணுக்கு ஒரு பார்கோடு அனுப்பி, அதை ஸ்கேன் செய்ய கூறினார். எனது மனைவி சந்தேகத்துடன் அவரிடம் கேட்ட போது, கல்வித்துறையில் இருந்து தான் பேசுவதாக கூறி, ரூ.19,890-ஐ வங்கி கணக்கில் இருந்து மோசடியாக ஆன்லைன் மூலம் பெற்று கொண்டார்.
மோசடி
அதன்பிறகு அவா் செல்போன் எண்ணை துண்டித்துவிட்டார். ஆகவே எனது மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இது குறித்து சைபா்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.