அங்குசம் பார்வையில் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’
தயாரிப்பு : தேவி பிரசாத் ஷெட்டி & சாத்விக் ஹெப்பார், இணைத் தயாரிப்பு : அரவிந்த் ஷெட்டி, டைரக்ஷன் : தேவிபிரசாத் ஷெட்டி. தமிழ்நாடு ரிலீஸ் : பவன் வடேயர் & ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ஆர்ட்டிஸ்ட் : விஜய ராகவேந்திரா, கோபால கிருஷ்ணதேஷ்பாண்டே, உஷா பண்டாரி. ஒளிப்பதிவு : ஹேமந்த், இசை : நவனீத் ஷாம், எடிட்டிங் : ஷஷாங் நாராயணா, பி.ஆர்.ஓ.: ஸ்ரீவெங்கடேஷ்.
கர்நாடகத்தின் மலைப்பகுதி கிராமம் அது. “ஆண்கள் யாரும் துணையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்” என ஆட்டோவில் மைக்செட் கட்டி காவல்துறை அறிவிக்கும் அளவுக்கு அங்கே வரிசையாக சில ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். அதுவும் உடல் முழுவதும் முள் கம்பியைச் சுற்றியும் மார்பில் ஆணி அடித்தும் கொல்லப்படுகிறார்கள். இந்த மாதிரி கொடூரக் கொலைகளைச் செய்பவன், கண்டிப்பாக சைக்கோவாகத் தான் இருக்க வேண்டும் என போஸ்ட்மார்டம் பண்ணிய டாக்டர் சொல்கிறார்.
இதே பாணியில் இரண்டாவது கொலையும் நடக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் சீத்தாராம் [ விஜய ராகவேந்திரா]. கொலையாளி யார்? ஏன் இப்படி கொடூரமான முறையில் கொன்றான்? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’.
முழுக்க முழுக்க கன்னடத்தில் எடுத்து தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் வசனத்திற்கேற்றவாறு கச்சிதமாக லிப் சிங்காகி நேரடித் தமிழ்ப்படம் பார்த்தது போலவே இருக்கிறது. லொக்கேஷன்களில் வரும் எழுத்துகள் கன்னடத்தில் தான் இருக்கு. இதில் தமிழையும் காண்பிக்கிறேன் என உட்டாலங்கடி வேலையெல்லாம் செய்யாமல் சபாஷ் பெறுகிறார் டைரக்டர் தேவி பிரசாத் ஷெட்டி. காரணம் இரண்டு மணி நேரக் கதைக்களமும் திரைக்கதையும் தான்.
இரண்டு கொலைகள் நடந்ததும் விஜய ராகவேந்திரா விசாரணையில் இறங்கியதும் முதலில் செபாஸ்டியன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவன் சிக்குகிறான். ஆனாலும் அடுத்தடுத்து சில கொலைகள் நடக்கின்றன. அதில் விஜய ராகவேந்திரா டீமில் இருக்கும் போலீசும் ஒருவர். போலீசையே கொல்லும் அளவுக்கு அந்த சைக்கோவிற்கு அப்படி என்ன வெறி? இந்தப் பொறி தான் ஸ்கிரிப்ட்டுக்கு பெரிய சப்போர்ட். கன்னட ஹீரோக்களான ஷிவராஜ்குமார், உபேந்திரா, யாஷ், போன்றவர்களை தமிழ்ப்படங்கள் மூலம் பார்த்திருக்கிறோம். இந்த விஜய ராகவேந்திராவை கன்னட டப்பிங் மூலம் பார்க்கிறோம். போலீசுக்கேற்ற கம்பீரம், மிடுக்கு, கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் திண்டாட்டம், இதற்கிடையே அவரின் அக்கா ஃப்ளாஷ்பேக் செண்டிமெண்டில் உருக்கம் என எல்லா ஏரியாவிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு முயற்சித்தால் ஒரு ரவுண்ட் வரலாம் சகோதரா…
இடைவேளை வரை கொஞ்சம் ஸ்லோவாகப் போகும் படம், அதற்குப் பின் செம க்ரிப்பாகப் போகிறது. மஞ்சா என்ற இளைஞன் விஜய ராகவேந்திராவிடம் மாட்டிய பிறகு உண்மையான கொலைகாரனை நெருங்குவதற்கு போடும் ஸ்கெட்ச், மூளைக்குள் அடிக்கும் ஃப்ளாஷ்பேக் இதெல்லாம் செம அருமை. கொலையான ஆண்கள் எல்லோருமே பதினைந்து வயது இளம் பெண்கள் என்பதை ஸ்மெல் பண்ண, உண்மையான கொலைகாரன் சிக்க… பக்காவான் க்ளைமாக்ஸுடன் படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் தேவிபிரசாத் ஷெட்டி.
மினி சைஸ் வீணை தான் டைரக்டர் தேவிபிரசாத்தின் மெயின்கார்ட் என்பதால் பின்னணி இசையில் கச்சிதமாக வீணை இசையை வாசித்து கவனம் ஈர்க்கிறார் மியூசிக் டைரக்டர் நவனீத் ஷாம், கர்நாடக மாநிலத்தின் உட்புற லொக்கேஷன்களை அழகாக படம் பிடித்திருக்கிறார் கேமராமேன் ஹேமந்த். டைரக்டரின் ஸ்கிரிப்டை நேர்த்தியாக எடிட்டிங் பண்ணி விறுவிறுப்புக்கு க்யாரண்டி தருகிறார் எடிட்ட்டர் ஷஷாங் நாராயணா.
டூயட் இல்லை, கலர்ஃபுல் கனவுப் பாட்டு இல்லை, குரூப் டான்ஸர்களின் கும்தலக்கா சாங் இல்லை. இது எதுவுமே இல்லாமல் க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் இந்த ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’.
அங்குசம் பார்வையில் ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீத்தாராம்’ 45/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.