சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை -33
பெண்களுக்குச் சொத்தில் 50% சட்டம் – சுயமரியாதை இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி!
அங்குசம் சமூக நல அறக்கட்டளை நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 34 ஆம் நிகழ்வு, 08.11.2025 அன்று “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவில் மாரக்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் தி.துரைசித்தார்த்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையாளருக்குக் கீழைக்காற்று நூல் விற்பனையகத்தின் பொறுப்பாளர் தோழர் இராஜா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். ஒருங்கிணைப்பாளர் தி.நெடுஞ்செழியன் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
தொடக்க உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி குறிப்பிட்டவர், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை யாவரும் கேளீர் சார்பில் முன்னெடுப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். மேலும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைசித்தார்த்தன் இளைய தலைமுறையைச் சார்ந்தவர் என்பதாக குறிப்பிட்டவர், இக்கட்சியின் முன்னையப் பொதுச்செயலாளர் அறிஞர் ஆனைமுத்து இயற்கை எய்தியதைத் தொடர்ந்து துரைசித்தார்த்தன் இந்த அமைப்பின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருவதாக அறிமுகம் செய்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, சிறப்புரையாற்றிய துரைசித்தார்த்தன், “ சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் வெகுமக்களின் விடுதலையை முன்னெடுப்பது என்பதாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீரோட்டத்தின் வேகத்தில் நீச்சல் அடித்து இலகுவாக கரை சேர்ந்தது. சுயமரியாதை இயக்கம் நீரின் வேகத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டது. பல இன்னல்களைச் சந்தித்து, பல போராட்டங்களை நடத்தியது என்பது வரலாறாகும்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் துரை சித்தார்த்தான் பெருமிதம்.
இந்தியாவில் கி.மு.183 ஆண்டில் புஷ்யமித்திரன் என்பவரால் தொடங்கப்பட்ட பார்ப்பன ஆட்சியில்தான் நாம் பிறப்பு முதல் இறப்பு வரை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் மநுஷ்மிருதி என்னும் மநுநீதி தொகுக்கப்பட்டது. மத சடங்குகள், வேள்வி வளர்ப்பது போன்ற முறைமைகள் மக்களிடம் பரவலாக்கப்பட்டது.
பார்ப்பனர்கள் கற்பித்த வேதங்களை மறுத்தே இங்கே பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றின. இந்த வேத மறுப்பைத்தான் சுயமரியாதை இயக்கமும் கைகொண்டு பார்ப்பனர்களை எதிர்த்து வந்தது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் நிலவுடமை இல்லாத ஆண்களுக்கும், பட்டியலின ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. 1921 இல் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் அறிவுரைப்படி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், நிலஉரிமை இல்லாத பெண்களுக்கும்; இதைத் தொடர்ந்து நிலஉரிமை இல்லாத ஆண்களுக்கும், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 1951-இல்தான் வழங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
1925 இல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கியபோது அதில் மூவலூர் இராமமிருதம் அம்மையார் அதில் சேர்ந்தார். 1930 இல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார். 1947 இல் தேவதாசி ஒழிப்பு சுயமரியாதை இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் நீட்சியாகத் தொடங்கப்பட்ட நீதிக் கட்சி ஆட்சியில்தான் மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி அகற்றப்பட்டது, என்பதை நினைக்கும்போது சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் எவ்வளவு வீரியம் பெற்றதாக இருந்தது என்பதை அறியமுடிகின்றது.
நீதிக் கட்சி ஆட்சியில்தான் வகுப்புவாரி பிரதிநித்துவ அடிப்படையில் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியதும் சுயமரியாதை இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.
பின்னர் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளுமே திராவிடர் கழகத்தில் பின்பற்றப்பட்டது. தந்தை பெரியார் 1942-இல் பார்ப்பன புரோகிதம் முறையில் நடத்தப்படும் திருமண முறைக்கு மாற்றாக சுயமரியாதை திருமணத்தை அறிமுகம் செய்தார்.
1967 இல் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்று இந்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து, சட்டத்தை நிறைவேற்றினார். ஏறத்தாழ 60 ஆண்டுகள் நிறைவுடையும் நிலையில் தமிழ்நாட்டைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் சுயமரியாதை திருமண முறை எங்கும் சட்டமாக்கப்படவில்லை என்பதில் சுயமரியாதை இயக்கத்தின் தனித்தன்மை போற்றுதலுக்குரியதாகவே உள்ளது.
1954 இல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்த இராஜஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார். விளைவு, முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து இராஜாஜி நீக்கப்பட்டார். அடுத்து முதல் அமைச்சராக வந்த காமராசர் தந்தை பெரியாரின் வழிகாட்டலில் மூடப்பட்ட 4000 பள்ளிகளோடு, மேலும் 2000 பள்ளிகள் கூடுதலாகத் திறக்கப்பட்டன.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது, பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு, வேலை வாய்ப்பில் 50%, இலவச கல்வி போன்ற சுயமரியாதை சிந்தனைக் கொண்ட கொள்கைகளை பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள் ஆட்சியில் இருந்து நிறைவேற்றினர். 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சுயமரியாதை இயக்கத்தின் தேவை நமக்கு இன்றும் உள்ளது. மனித இனம் சமத்துவத்துடன் வாழ சுயமரியாதை சிந்தனையை நாம் பின்பற்றவேண்டும்” என்று உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாளர் துரைசித்தார்த்தனுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் இதழ்களைப் பரிசாக வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகளைக் குறிப்பிட்டு நன்றி கூறினார். விழா இனிதே நிறைவடைந்தது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.