மரியநிவாஸ் முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா கொண்டாட்டங்கள்
முதுமை என்பது வயது முதிர்வு மட்டுமல்ல-பக்குவம், ஆளுமை, அனுபவம் ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தங்களது அனுபவங்களாலும் அறிவாலும் சமூகத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் முதியோர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதியோர் தினத்தையொட்டி , ஈரோடு லக்காபுரத்தில் உள்ள மரியநிவாஸ் முதியோர் இல்லத்தில் அக்டோ 4 அன்று முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவினை ஈரோடு செல்வா அறக்கட்டளை முன்னெடுத்து நடத்தியது.
விழாவில் ஈரோடு ஆதித்யா மருத்துவமனை Dr. ரகுநாத் தலைமை தாங்கினார். ஈரோடு டவுன் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கே. முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முதியோர்களின் ஆசீர்வாதம்
விழாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கே. முத்துக்குமார் சிறப்புரை பேசுகையில், “முதியோர்களின் ஆசீர்வாதம் இருந்தால் யார் ஒருவராக இருந்தாலும் வாழ்க்கையில் சிகரம் தொட முடியும்” என்றார்.
மேலும், தாம் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையையும், தனது வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பையும் தனது அனுபவங்களுடன் பகிர்ந்து கொண்டார். குடும்பங்களின் தாய்மார்களின் தியாகங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
“நீங்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறோம் என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு பிள்ளைகளாக நாங்கள் இருக்கிறோம். கடவுள் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் கவலைப்பட வேண்டாம்” என்று அவர் கூறினார்.
மேலும், மரியநிவாஸ் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களிடம், “எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். உதவியை நான் செய்து தருகிறேன்” என கூறினார். பின்னர் செல்வா அறக்கட்டளையின் நிறுவனர் ஜே.ஜே. பாரதி வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், “செல்வா அறக்கட்டளையின் 14-வது ஆண்டு இது. தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். இதுவரை செல்வா அறக்கட்டளை மூலம் 154 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சையும், 3000 க்கு மேற்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சையும், 250 பேருக்கு காது, மூக்கு, தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைகளும் செய்து கொடுத்துள்ளோம்” என்றார்.
மேலும், மரியநிவாஸ் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மருத்துவ ரீதியாக எந்த உதவி தேவைப்பட்டாலும் செல்வா அறக்கட்டளை முன்னின்று உதவும் என்று தெரிவித்தார்.
“மரணம் என்பது அனைவருக்கும் இயற்கையானது. மரியநிவாஸ் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களின் இறுதிச்சடங்குகளையும் செல்வா அறக்கட்டளை முன்னின்று நடத்தி வருகிறது” என்று ஜே.ஜே. பாரதி தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர்களுக்கு மனநம்பிக்கையான வார்த்தைகளை கூறி, முதியோர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். இது செல்வா அறக்கட்டளையின் 336-வது செயல்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.
போட்டியும், நலத்திட்டங்களும்
முதியோர் தினத்தை முன்னிட்டு மரியநிவாஸ் இல்ல பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், நலத்திட்ட உதவிகளாக பாட்டிகளுக்கு பெட்ஷீட்டுகள், புத்தாடைகள் மற்றும் அடிப்படைத் தேவையான பொருட்கள் சிறப்பு விருந்தினர்களின் கரங்களால் வழங்கப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள்
மரியநிவாஸ் இல்ல பாட்டிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொப்பி நடனம், குத்து நடனம், தனிப்பாடல், குழுப்பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அரங்கேற்றி பாட்டிகள் அசத்தினர்.
மாணவிகளுக்கு பாராட்டு விருது
ஆதித்யா மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் மாணவிகளாக பணியாற்றி வரும் ஜாக் சஜினி, ஸ்டாலின் ஜெர்ஷா, ரக்ஷனா ஆகியோருக்கு, படிக்கும் காலத்திலேயே சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டு விருது வழங்கப்பட்டது.டாக்டர் ரகுநாத் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் கே. முத்துக்குமார் ஆகியோர் விருதுகளை வழங்கி மாணவிகளை பாராட்டினர்.
மரியநிவாஸ் சகோதரிகளுக்கு சிறப்பித்தல்
மரியநிவாஸ் முதியோர் இல்லத்தையும், அங்கு வசிக்கும் பாட்டிகளையும் தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் சகோதரி நிஷா, சகோதரி பாத்திமா, சகோதரி தேன்மொழி, சகோதரி சங்கீதா, சகோதரி ஜெர்சா ஆகியோருக்கு செல்வா அறக்கட்டளை சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
பங்கேற்பு
விழாவில் ஈரோடு மலர் சில்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தங்கவேல், எல்.ஐ.சி. நிறுவனத்தின் மூத்த வணிக இணைய அலுவலர் ஈரோடு எஸ். ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செல்வா அறக்கட்டளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
— மு.வசீர் அகமத்






Comments are closed, but trackbacks and pingbacks are open.