உதிர்ந்ததொரு முதிர்ந்த கனி…!!! தோழர் என். சங்கரய்யா !!
உதிர்ந்ததொரு முதிர்ந்த கனி…!!! தோழர் என். சங்கரய்யா
தோழர் என். சங்கரய்யா மூத்த சுதந்திரப் போராட்ட வீரர். முது பெரும் கம்யூனிஸ்ட் பேரியக்கத் தலைவர். இந்தித் திணிப்பு எதிர்ப்புக் களப் போராளி. சமூகத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர். கழனி வாழ் விவசாயிகளின் நலன்களுக்காகத் தொடர்ந்து போராடியவர். அவருக்கு வயது நூற்றியிரண்டு. கோவில்பட்டியில் 15.07.1922 அன்று பிறந்தார். அவரது பூர்வீகம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் கிராமம். நூற்றியிரண்டாவது வயதில் அடியெடுத்து வைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த முதிர்ந்த கனியானது, 15.11.2023 அன்று உதிர்ந்து விட்டது.
அவரது அப்பா நரசிம்மலு, கோவில்பட்டியில் இயங்கி வந்த ஜப்பான் கம்பெனியில் மெக்கானிகல் இஞ்ஜினியர். அப்போது தான் சங்கரய்யா பிறக்கிறார். பெற்றோர்கள் அவருக்கு இட்ட பெயர் அதுவல்ல. பிறந்தவுடன் வீட்டில் பிரதாப சந்திரன் என்று தான் பெயர் சூட்டினார்கள். அவரது தாத்தா பேரனுக்கு தனது பெயர் தான் வைக்க வேண்டும் என்று கடுமையாக வற்புறுத்தியதால், அதன் பின்னரே சங்கரய்யா என்று பெயர் சூட்டப்பட்டது. சங்கரய்யாவின் உடன் பிறந்தவர்கள் ஆண்கள் நான்கு பேர், பெண்கள் நான்கு பேர். குடும்பத்தில் சங்கரய்யா சேர்த்து மொத்தம் ஒன்பது பிள்ளைகள்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட். பின்னர் இளங்கலை படிப்பின் போது கடைசி செமஸ்டர்க்கு முன்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவப் பருவத்திலேயே கைது செய்யப்படுகிறார் சங்கரய்யா. இந்த நிலையில் அவரது வாழ்வில் இறுதி வரை பட்டம் பெற்றிட இயலவில்லை. ஒரு பத்திரிகை நேர்காணலில் வருத்தமாக அதனைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பத்திரிகையாளரும் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, அவரது அந்த முதுமை வயதிலுமாவது சங்கரய்யாவுக்கு ஏதேனும் ஒரு தமிழகப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிட முடிவு செய்தது. தமிழ்நாடு அரசு அதற்கான முன்மொழிவினை மாநில கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதனை வழிமொழிந்திடாமல் மறுத்து திருப்பி அனுப்பி வைத்து விட்டார் தமிழக கவர்னர்.
கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச் சாமியின் மகள் நவமணியை 1947ல் திருமணம் செய்து கொள்கிறார் சங்கரய்யா. அதற்கு குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. நவமணி கிறிஸ்த வர் என்பதால் வீட்டார்கள் சம்மதிக்க வில்லை. அதனையும் கடந்து தனது மனதுக்குப் பிடித்த நவமணியைக் கரம் பற்றித் திருமணம் செய்து கொள்கிறார் சங்கரய்யா. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் “ஜனசக்தி” இதழுக்கு பொறுப்பாசிரியராகப் பணியாற்றி யுள்ளார். அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியின் “தீக்கதிர்” இதழுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார். 1957 மற்றும் 1962களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியுள்ளார். 1967ல் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி, 1977, 1980களில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகு திகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டம், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் போன்ற பல போராட்டங்களில் ஈடுபட்டுக் கைதாகி பல்வேறு காலங்களில் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைகளில் வாழ்வினைக் கழித்துள்ளார். 1948 முதல் 1951 வரை என மொத்தம் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அப்போதும் மாறுவேடங்களில் ஆங்காங்கு வந்து சென்று மறைமுக மாகக் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளும் திறம்பட ஆற்றியுள்ளார்.
மார்க்சிம் கார்க்கி எழுதிய உலகப் புகழ் பெற்ற ரஷ்ய மொழி நாவல் தாய். அதனைக் கவிதை வடிவில் தமிழில் எழிலுற ஆக்கம் செய்தார் கலைஞர். “தாய் காவியம்” என்கிற பெயரில் அந்தக் கவிதை நூல் உருவாகிக் கொண்டிருந்தது. அதற்கு முந்தைய காலக்கட்டங்களில் கலைஞருக்கும் சங்கரய்யாவுக்கும் இடையே நிறைய கருத்து முரண்பாடுகள். “சங்கரய்யா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருக்கும் வரை, திமுகழகம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தேர்தலில் எவ்வித உடன்பாடும் வைத்துக் கொள்ளாது.” என்று சற்று வெளிப்படையாகவே அறிவித்தார் கலைஞர். அத்தகைய முரண்பாடுகள் கலைஞருக்கும் சங்கரய்யாவுக்கும் இடையே நீடித்த போதிலும், கலைஞரின் “தாய் காவியம்” கவிதை நூலுக்கு முன்னுரையாக சங்கரய்யாவிடம் தான் கேட்டுப் பெற்று பிரசுரித்து, சங்கரய்யாவின் முன்னிலையில் அந்தக் கவிதை நூலினை வெளியிட்டார் கலைஞர்.
ஒருவரிடம் தனக்கு எத்தகைய முரண்பாடுகள் இருப்பினும் அவைகளைப் பெரிதாக எண்ணிடாமல், ஒரு தேர்ந்த செயல் பாட்டுக்காக அவர்களுடன் உடன்பாடு கொண்டாடக் கூடியவர்கள் கலைஞரும் சங்கரய்யாவும். 1972களில் சங்கரய்யாவை நாடி வந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பென்சனுக்கு விண்ணப்பிக்க வேண்டி வற்புறுத்தி கேட்டுக் கொண்டார்கள். “இந்திய மண்ணுக்குச் சுதந்திரம் வேண்டும் என்று தான் போராடினோமே தவிர, எனக்குப் பென்சன் வேண்டும் என்று நான் போராடியது இல்லை.” என்று மறுத்து விட்டார் சங்கரய்யா.
2021ல் தமிழக அரசு சங்கரய்யாவுக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கி கௌரவித்தது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் “தகைசால் தமிழர்” விருதினையும், அதன் ரொக்கத் தொகையினையும் அந்த விழா மேடையில் வழங்கினார். அந்த விருதினை மட்டும் பெற்றுக் கொண்டார். அதன் விருதுத் தொகையான ரூபாய் பத்து லட்சத்தை மேடை யிலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், “தமிழக முதல்வர் கோவிட் நிவாரண நிதி”க்காக வழங்கி விட்டார் சங்கரய்யா. நிறை வாழ்வும், மிக எளிய வாழ்வும் வாழ்ந்த சங்கரய்யா, பொதுவுடமைப் பெரு வனத்தினில் உதிர்ந்ததொரு முதிர்ந்த கனியாக உதிர்ந்து விட்டார்.
கட்டுரை – ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு