மதுரை காமராஜர் பல்கலை : பாலியல் புகாரில் தேர்வாணையர் தர்மராஜ் ! புகார் அளித்த பெண்ணை மிரட்டிய கண்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனன் !
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில், தேர்வுத்துறை கண்காணிப்பாளராக பணியாற்று சுகன்யா சுபாஷினி என்பவருக்கு தேர்வாணையர் தர்மராஜ் பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார் என்பதாக குற்றஞ்சாட்டி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்த விவகாரத்தை பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில், இப்புகாரை வாபஸ் வாங்குமாறு கண்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனம் தன்னை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், பாதிக்கப்பட்ட சுகன்யா சுபாஷினி. இது தொடர்பாக, அவரை நாம் நேரில் சந்தித்து பேசியபோது, ”நான் கொடுத்த புகாரை எடுத்துக் கொண்ட கண்வீனர் கமிட்டி உறுப்பினர் மயில்வாகனம் புகாரை வாபஸ் வாங்கு இல்லை எனில் உன் வேலையை காலி செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் பல்கலைகழகத்தில் சமுதாய ரீதியாக பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்கிறார். எனக்கு ஆதரவாக இருந்த சக கண்காணிப்பாளர்கள் பார்த்தசாரதி மற்றும் சுரேஷ் ஆகியோரையும் அழைத்து மிரட்டியிருக்கிறார்.
இதற்கிடையில் பாலியல் தொல்லை கொடுத்த தர்மராஜ் எனது சொந்தக்காரர்கள் மற்றும் எனது சித்தப்பாவை தொடர்பு கொண்டு புகாரை வாபஸ் வாங்குங்கள். சுகன்யாவின் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன். என்று பேசியிருக்கிறார்.
மயில்வாகனன் என்னை துணைவேந்தர் அறைக்கு வரவழைத்து மிரட்டும் போது அவருடன் பி.ஏ. நாகசுந்தரம், சுந்தரமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகிய மூவரும் உடன் இருந்தனர். வேண்டுமென்றால் அவர்களிடமே நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.” என்றார்.
கண்காணிப்பாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம். “எனது மகள் படிப்பதற்காக வெளிநாடு அனுப்பி வைப்பதற்காக 20 நாட்கள் உரிய முன் அனுமதியுடன் விடுப்பு எடுத்திருந்தேன். அதை வைத்து, யாரை கேட்டு 20 நாட்கள் விடுமுறை எடுத்தாய் என்று மிரட்டல் தொனியில் கேட்கிறார். சுகன்யா பேச்சை கேட்காதே. அவருக்கு வக்காலத்து வாங்காதே. கமிட்டியில் நான் இருப்பதால் உன் வேலையை இல்லாமல் செய்துவிடுவேன். அதுபோலவே, சுரேஷ் என்பவரையும் அழைத்து, உனது வழக்கறிஞரிடம் வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்து கொள். உன் வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது. என்றெல்லாம் மிரட்டியிருக்கிறார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் தேர்வாணையர் தர்மராஜுக்கு ஆதரவாக, கண்வீனர் கமிட்டி உறுப்பினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு கண்காணிப்பாளர்களை மிரட்டுவதாக சர்ச்சையில் சிக்கியிருக்கும் கணிதத்துறை பேராசிரியர் மயில்வாகனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை ஏற்கவில்லை. பல்கலைகழகத்திற்கு நேரில் சென்றோம். துணைவேந்தர் அறையில் இருந்த மயில்வாகனத்தை சந்தித்து விளக்கம் கேட்க முயற்சித்தோம். துணைவேந்தரின் உதவியாளர் நாகசுந்தரத்தின் வாயிலாக, தங்களை பார்ப்பதற்கு விருப்பமில்லை என்பதாக தெரிவித்துவிட்டார்.
”கண்வீனர் கமிட்டியில் இடம்பெற்றுள்ள 4 பேரில் தற்போது இருவர் இல்லை. அப்படியே இருந்தாலும், எந்த ஒரு புகார் தொடர்பாகவும் தனியாக அழைத்து யாரையும் விசாரிக்கும் உரிமை கமிட்டி உறுப்பினர்களுக்கு கிடையாது. அடுத்து, துணைவேந்தர் இல்லாதபோது, அவரது அறையை யாரும் பயன்படுத்தக்கூடாது. ஆனாலும், இவர் அங்குதான் அமர்ந்து பணியாற்றுகிறார். இது முழுக்க அதிகார துஷ்பிரயோகம்.” என்கிறார்கள், பல்கலை வட்டாரத்தில்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்காக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது உயர் அதிகாரியின் பாலியல் சீண்டலுக்கு எதிராக புகார் கொடுத்த பெண் கண்காணிப்பாளரையும் அவருக்கு ஆதரவாக இருக்கும் சக கண்காணிப்பாளர்களையும் கண்வீனர் கமிட்டி உறுப்பினரான பேராசிரியர் மயில்வாகனன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் பல்கலையின் சக பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.