இலால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் “மங்கல இசை மன்னர்” விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா
இலால்குடி அருள்மிகு பெருந்திருப்பிராட்டியார் உடனுறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் திரு ஆதிரைப் பெருவிழாவை முன்னிட்டு பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் பணிமன்றம் சார்பாக 50 இசைக்கலைஞர்கள் பங்குபெறும் மங்கல இசை விழா,
“மங்கல இசை மன்னர்” விருது வழங்கும் விழா’ மற்றும் லால்குடி பா.எழில்செல்வன் இயற்றி சிவாலயம் வெளியிடும் “சண்டேசுவரரும் வள்ளலாரும்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, பழனி ஆதீனம் திருப்பெருந் தவத்திரு சாது சண்முக அடிகளார் தலைமை தாங்கினார்கள். இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.அ. சௌந்தரபாண்டியன் மற்றும் இலால்குடி நகர்மன்றத் தலைவர் திரு. பி.துரைமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
பழனியாதீனம் அவர்கள் “சண்டேசுவரும் வள்ளலாரும்” என்னும் நூலினை வெளியிட்டும் மங்கள இசை மன்னர் என்ற விருதை நாதஸ்வர இசைச்செல்வர்
M.S.ராஜரெத்தினம், தவில் இசை முரசு இலால்குடி L.S.பழனிவேல் அவர்களுக்கு வழங்கியும், இறை அலங்காரச் சிரோண்மணி விருதினை தே.சிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் அவர்களுக்கும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நூலின் முதல் பிரதியை சீகம்பட்டி இராமலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். நூல் குறித்த திறனாய்வை கோ.மணி அவர்கள் வழங்கினார்கள்.
தவில் மற்றும் நாதஸ்வர இசையின் தொன்மை மற்றும் அதன் சிறப்பு குறித்து கலைச்சுடர்மணி ஆண்டாங்கோவில் AVS.குருமூர்த்தி அவர்களும் , கலைமாமணி மன்னார்குடி MSK. சங்கரநாராயணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிறப்பு அழைப்பாளராக சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் ம.நித்யா, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் பெரியசாமி, தவத்திரு ஊரன் அடிகளாரின் செயலாளர் குறிஞ்சி ஞானசெல்வநாதன், அருட்பா நா.வெங்கடேச பெருமாள், அரிமா க.ஜெயகிருஷ்ணன், நாடுகண் குழுவின் பொருளாளர் த. முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— அங்குசம் செய்திகள்.