பொருளற்ற வேலைக்காக நமது வாழ்க்கையையே அடகு வைக்கிறோம் !

0

பொருளற்ற வேலைக்காக நமது வாழ்க்கையையே அடகு வைக்கிறோம் !

கடைவீதி -1
கடைவீதி -1

தொழில் நிமித்தமாக மும்பைக்குச் சென்றிருந்தேன். நினைத்தாற்போல வேலை எளிதில் முடியவில்லை. மேலும் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கும் எனத் தெரிந்தது. எதிர்பார்த்தபடி பணி நிறைவடையாததால் ஊரைச் சுற்றிப் பார்க்க வைத்திருந்த திட்டங்கள் பாழாகின. அந்த அதிகாலை வேளையில் சற்று சோர்வாக உணர்ந்தேன். நடை போகலாம் எனத் தோன்றியது. விடுதியில் இருந்து கிளம்பி இரண்டு மூன்று கிமீ சென்று மேற்கொண்டு எங்கு போவது எனத் தெரியாமல் பேருந்துநிலையம் அருகே நின்றுகொண்டேன்.

ரோஸ்மில்

மிதமான மஞ்சுமூட்டம் இருந்தது. சாலையில் மெல்ல மெல்லப் பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது. ‘ஒருநாள் மட்டும் உங்களுக்குப் பார்வை கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என ஹெலன் கெல்லரிடம் கேட்டபோது உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் காண்பேன் என்றோ அற்புதமான ஓவியங்கள், சிற்பங்களைத் தேடித் தேடி ரசிப்பேன் என்றோ அவர் பதிலளிக்கவில்லை. ஒரு சாலையில் நாள்முழுக்க நின்றபடி மனித முகங்களை உற்று நோக்குவேன் என்றார். நானும் அப்படிச் செய்ய நினைத்தேன்.

நான் வாழும் ஊரிலேயே அன்றாடம் காணக் கிடைக்கிற காட்சிகள்தான். ஆனால், புதிய நகரத்தில் அந்நிய முகங்களைக் கவனிப்பதை அப்போது மனம் விரும்பியது. எல்லோரும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்க, அந்தப் பரபரப்பில் ஐக்கியமாகாமல் விலகி நின்று அமைதியாக வேடிக்கை பார்ப்பது பெரும் ஆசுவாசமளித்தது. நேரத்தை விரட்டிச்செல்லும் மந்தைக் கூட்டத்தில் அன்றைக்கு நான் இல்லை என்பது என்னைத் தனியனாகவும் சுதந்திரமானவனாகவும் உணரச் செய்தது. ஓர் இணை ஸ்கூட்டரில் விரைந்தது. மனைவியைப் பணியிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு இன்னொரு இடத்திற்கு வேலைக்குச் செல்லவேண்டிய கணவனாக இருக்கவேண்டும்.

- Advertisement -

- Advertisement -

இன்னொருவர் பெரிய பெரிய பூமாலைகளை வண்டியில் ஏற்றி அதன் எடை தாளாமல் சிரமத்துடன் ஓட்டிக்கொண்டு கடந்தார். கூட்டம் பிதுங்கி வழிந்த பேருந்தில் ஏற முடியாமல் கல்லூரிப் பெண்கள் காத்திருந்தனர். அதன் பின்னால் காலியாக வந்த மற்றொரு பேருந்தில் மகிழ்ச்சியுடன் ஏறி, தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு அப்பேருந்து போகவில்லை என்றறிந்து வாடி, அவசர அவசரமாக இறங்கினர்.

பழுதான காரை இரண்டு பேர் தள்ளிக்கொண்டு வந்தனர். முகத்தில் பதற்றமும் அலுப்பும். நைந்துபோன வேட்டி சட்டையும் கலைந்த தலைமுடியுமாக ஒரு பெரியவர் வடை விற்றுக்கொண்டு வந்தார். எண்பது வயதாவது இருக்கும். போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியது.

4 bismi svs

எந்தப் பேருந்திலும் ஏற முயலாமல் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறவனைச் சில பேர் சந்தேகத்துடன் நோட்டம்விட்டனர். ஒரு காவலாளி என்னை நெருங்கிக் கடந்தபோது ஏன் என்றே தெரியாமல் தன்னிச்சையாகப் பின்வாங்கி நின்றுகொண்டேன். முதுகுப்பையுடன் ஒருவர் என்னை அணுகி, ஓரிடத்தைக் குறிப்பிட்டு, ‘அதுக்கு டிக்கெட் எவ்வளவு ஆகும்?’ என விசாரித்தார். ‘ஊருக்குப் புதுசு’ என்றேன்.

முப்பது வயது மதிக்கத்தக்கவர் சாவகாசமாக நடந்துவந்து பேருந்துநிலைய இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து எதையோ கொரிக்க ஆரம்பித்தார். எனக்குப் போட்டியாக யாரிவன் என்று ஒருகணம் பொறாமைப்பட்டேன். மனிதர்கள் கடும் பாடுகளுக்கிடையே உடலையும் மனத்தையும் வருத்தி உழைத்து வாழ்கிறார்கள்.

அவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் நாள்களைக் கடத்துவதற்குக் குடும்பமோ காதலோ லட்சியமோ இன்ஸ்டா குறுங்காணொளிகளோ கிளுகிளுப்போ திரையிசைப் பாடல்களோ நகைச்சுவையோ இரண்டாம்பட்சம்தான். பணிச்சுமை இல்லாமையே முதன்மைக் காரணியாக இருக்க முடியும். இவ்வுலகில் நாம் செய்கிற முக்கால்வாசி வேலைகளை ‘bullsh*t jobs’ என டேவிட் கிரேபர் வகைப்படுத்துகிறார்.

அந்தப் பணிகளை முற்றாக ஒழித்துவிட்டாலும் இவ்வுலக இயக்கத்தில் எந்தத் தடுமாற்றமோ சீர்குலைவோ ஏற்படாது என்கிறார். ஆம், நமக்கோ உலகுக்கோ எந்தவிதப் பயனுமற்ற பணிகளையே நம்மில் பெரும்பகுதியினர் செய்துகொண்டிருக்கிறோம். அந்தப் பொருளற்ற வேலைக்காக நமது வாழ்க்கையையே அடகு வைக்கிறோம். அதன் பின்னால் நாய் மாதிரி ஓடுகிறோம். ரத்தம் சுண்டிச் சாகிறோம். கொஞ்சம் பணத்துக்காகவும் நுகர்வு ஆசைக்காகவும் அற்ப மகிழ்ச்சிக்காகவும் ‘வேலை’ என்ற பெயரில் நாம் இழப்பது விலைமதிப்பிட முடியாத வாழ்க்கையை! குரூரமாகத் தோன்றலாம்.

ஆனால், நமது வேலையால் உலக ஒழுக்கு தடைபடாமல் நடக்கிறது என்பது பெரிய மாயை. இதை உணர்ந்து முடிந்தவரை பணிச்சுமையைக் குறைத்து இன்பமாக வாழ்வதே நமது கனவாக இருக்கவேண்டும். விருப்பமான வேலையோ, பிடிக்காத வேலையோ, ‘பணி’ என்கிற ஒன்றை முன்னிறுத்தித் தேவைக்கு அதிகமாகப் பிறருக்கு உழைப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். இதனை உயர் லட்சியமாகக் கைக்கொள்ளுங்கள். இதற்கான வாய்ப்பும் மனநிலையும் அனைவருக்கும் அமையட்டும் என்பதையே புத்தாண்டு வாழ்த்தாகவும் சொல்லிக்கொள்கிறேன்.

முகநூலில் : Gokul Prasad

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.