சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான முன்னெடுப்பின் தொடக்கமாக, விழிப்புணர்வு குறும்பட போட்டியை அறிவித்து இதற்கு மொத்த பரிசு தொகையாக 1,20,000 அறிவித்திருந்தோம்.
அங்குசம் சமூக நலஅறக்கட்டளையின் சார்பில் அறிவிக்கப்பட்ட ”அங்குசம் மீடியா சினிமா கார்னர் 2025, குறும்படத் திருவிழா” வில், பலரும் பேரார்வத்தோடு பங்கேற்றிருக்கிறார்கள். குறும்படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அடுத்தடுத்தகட்டங்களில், தேர்வான 15 குறும்படங்களிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் குறும்படங்களை சினிமாத்துறை இயக்குநர்கள் கொண்ட நடுவர்குழு பரிந்துரைக்கும். இதனைத்தொடர்ந்து, பரிசளிப்பு விழா டிசம்பர் – 03 புதன்கிழமை அன்று மாலை, திருச்சி கலையரங்கம் மேல்தள அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில், குறும்படங்களை தேர்வு செய்து பரிசுகளை வழங்க “மாமன்” திரைப்பட இயக்குநரும், விலங்கு வெப்சீரியஸ் இயக்குநருமான பிரசாந்த் பாண்டியராஜன் வருகைதர இருக்கிறார். பன்னாட்டு ரோட்டரியின் இயக்குநர்களுள் ஒருவரும் எக்ஸெல் குழுமங்களின் தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் மற்றும் ஊட்டி பிளாக்தண்டர் தீம் பார்க் நிர்வாக இயக்குநரும் தொழிலதிபரும் முன்னாள் எம்.பி. அடைக்கலராஜூவின் மகனுமான, அடைக்கலராஜ் ஜோசப் லூயிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குறும்பட விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள்.
தேர்வான படங்கள் ”குறும்படத் திருவிழா2025” அரங்கில் நேரடியாக திரையிடப்படும். குறும்படத் திருவிழாவில் பங்கேற்ற அனைத்து குறும்படங்களும், அங்குசம் சினிமா யூடியூப் தளத்தில் அடுத்தடுத்து வெளியாகும்.
– ஆசிரியர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.