ஹீரோக்களின் சரக்காட்டம்! கதறியழும் தயாரிப்பாளர்கள்!
இதுவரை கிட்டத்தட்ட 140 படங்களுக்கும் மேல் வினியோகம் பண்ணியவர் ‘ராக்போர்ட்’ முருகானந்தம். அதர்வா,-ப்ரியா பவானிசங்கர் ஜோடியில் 2019-ல் ’குருதி ஆட்டம்’ படத்தை ஆரம்பித்தார் முருகானந்தம். மூன்று ஆண்டுகள் கழித்து 2022 ஆகஸ்ட் முதல் வாரம் ரிலீசானது ‘குருதி ஆட்டம்’. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல படம் முழுக்க ரத்த வெறியாட்டம் தான். படமும் மூன்றே நாளில் பப்படம் தான்.
இதனால் முருகானந்தத்திற்கு பத்து பதினைந்து கோடி குருதி ஆட்டத்தில் கரைந்தது தான் மிச்சம். இந்த ‘குருதி ஆட்டம்’ ஷூட்டிங் முடியும் கண்டிஷனில் மிஷ்கின் -ஆண்ட்ரியா காம்பினேஷனில் ‘பிசாசு-2’வை ஆரம்பித்து முடித்துள்ள முருகானந்தம் இந்தப்படத்தை எப்படி விற்கிறது என திகைத்துப் போயுள்ளாராம். தலைவலி போய் திருகு வலி வந்த கதையாக அதர்வாவிடமிருந்து தப்பி மிஷ்கினிடம் மாட்டியுள்ளார் முருகானந்தம்.
முருகானந்தம் கதறியழுத அதே ஆகஸ்ட் முதல் வாரத்தில் சுரேஷ் சுப்பிரமணியன், ஸ்ரீதரன் மாரிதாசன் என்ற இரண்டு தயாரிப்பாளர்கள் கதறியழுத கதையும் நடந்தது. இவர்கள் கதறியழக் காரணம் ஜெய் நடிப்பில் ரிலீசான ‘எண்ணித்துணிக’ என்ற படம் தான்.
ஆக.5-ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசான ‘எண்ணித்துணிக’ படத்தை ஞாயிற்றுக் கிழமையே பல தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டார்கள். ஆனால் ஜெய்யோ கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் ‘எண்ணித்துணிக’வின் சக்சஸ் மீட்டை ஹீரோயின் அதுல்யா ரவி, மற்றும் சிலருடன் கேக் வெட்டி கொண்டா டினார். ‘எண்ணித்துணிக’ன்னு டைட்டில் வச்சு, அதையும் துணிச்சலா ஜெய்யை வைத்து எடுத்த தைரியசாலிகளான தயாரிப்பாளர்கள் இருவரும் ஏழெட்டு கோடிக்கு நஷ்டாதிபதிகளாகி கதறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அதர்வா, ஜெய், விமல், ஸ்ரீகாந்த், சிபி சத்யராஜ் எல்லாருமே ஒரே டிசைன் தான். மாலை நேரத்து மயக்கத்தை இவர்கள் பகலிலும் விடாத டிசைன். இவர்களை வைத்து படம் தயாரித்த யாரும் நாலு காசு பார்த்து நல்லாயிருந்ததா நமக்குத் தெரியல.
-மதுரை மாறன்