எளிமையும் வசதியும் கலந்த உடை ”கைலி (லுங்கி)”
கைலி என்பது முஸ்லிம்களுக்கான உடை என்று பொதுவாக நினைக்கப்பட்டு வந்த 1960களிலேயே திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் ஓய்வு நேரங்களில் கைலி (லுங்கி) உடுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். கைலி தயாரிப்பில் நூற்றாண்டு கொண்டாடும் சங்கு மார்க் நிறுவனத்தினர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு ஸ்பெஷலாகக் கைலி தயாரித்து தருவார்கள். அதன் பிறகு உருவான பல கைலி தயாரிப்பு நிறுவனங்களும் தரமான கைலிகளை திராவிடத் தலைவர்களுக்கு பரிசளித்தனர்.
ஆற்காடு உள்ளிட்ட நெசவாளர்கள் நிறைந்த பகுதிகளில் திராவிட இயக்கமும் வளர்ந்தது. கைலி நெசவும் உயர்ந்தது. கட்சிக் கரை நிறத்திலான கைலிகள் மாநாட்டுப் பந்தலின் வாசலில் விற்பனைக்கு கிடைத்தன. முஸ்லிம் அல்லாத மக்களும் கைலி உடுத்தும் பழக்கத்தை அதிகப்படுத்தி, உடைரீதியிலான நல்லிணக்கத்தை உருவாக்கியதில் திராவிட இயக்கத்திற்கு தனிப்பட்ட பங்கு உண்டு.
தந்தை பெரியாருக்கு ஓய்வு நேர உடை, வேலை நேர உடை என்ற வேறுபாடு கிடையாது. இருப்பிடத்தை விட்டு புறப்படும்போது, அதே உடையுடன் வெளியே வந்து, மேடையிலும் முழங்குவார். அவரது பழுத்த வயதில் கைலி என்பது வசதியான உடையாக அமைந்தது. பேரறிஞர் அண்ணா தனது உடையில் பெரியளவில் அக்கறை செலுத்த மாட்டார். ஓய்வு நேரத்தில் கைலி அணிவார். வெளியே வரும்போது வெள்ளைநிற உடை இருக்க வேண்டும் என்பதால் வேட்டியை கட்டிக்கொள்வார். அது பழுப்பேறி கைலி நிறத்தில் இருந்தாலும் கவலைப்பட மாட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் இடுப்புக்கு மேல் கைலியைக் கட்டிக் கொண்டு ‘வாங்கிங்’ போனதும், காலை நேரத்தில் அதே தோற்றத்தில் நிர்வாகிகளையும், சில நேரங்களில் பத்திரிகையாளர்களையும் சந்திப்பது வழக்கம். நிருபர்களுடன் வரும் ஃபோட்டோகிராபர்கள், தன்னைக் கைலியுடன் படம் எடுப்பதை விரும்பி அனுமதித்த நிகழ்வுகளும் நிறைய உண்டு. பொது நிகழ்வுகளில் பளிச்சென்ற வெள்ளை வேட்டி-சட்டைதான் கலைஞரின் உடை.
கலைஞர் மீது பொய் வழக்கு போட்ட ஜெயலலிதா அரசு, நள்ளிரவில் கதவை உடைத்து அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து கலைஞரைக் கைது செய்தபோது, அவர் உடுத்தியிருந்ததும் கைலிதான். அதே உடையில்தான் போலீசார் அவரது முதுமையைக் கூட பொருட்படுத்தாமல் வன்முறையைப் பிரயோகித்து இழுத்துச் சென்றார்கள். சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கைலியுடன் அவர் நடந்து சென்ற காட்சியின் வீடியோ இப்போதும் கலங்க வைக்கும். நீதிபதியின் உத்தரவுக்கு மாறாக, தன்னை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றபோது, அந்த வயதிலும் தன் போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில், அன்றைய மத்திய சிறைவாசலில் கைலியுடன் அவர் உட்கார்ந்தபோது, அருகிலுள்ள பாலத்தின் மீது நின்ற பத்திரிகை / போட்டோகிராபர்களும், டி.வி. கேமராமேன்களும், “ஐயா.. ஐயா.. இங்கே பாருங்க” என கத்திக் குரல் கொடுக்க, கலைஞர் திரும்பிப் பார்க்க, அவர்களின் கேமராக்களில் பதிவானது வெறும் படமல்ல. முக்கால் நூற்றாண்டு கால போராளியின் ஒட்டுமொத்த வரலாற்றின் சாட்சியம்.
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேண்ட்-சட்டை அணிந்த இளம் அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தியவர். அவருக்கும் ஓய்வு நேர உடை கைலிதான். அரசு முறையிலான-கட்சி ரீதியான சந்திப்புகள் இல்லாத நேரங்களில் அவர் கைலியையே விரும்பி அணிவார். அதுவே அவரது மருத்துவமனை உடையாகவும் அமைந்துவிட்டது. அந்த உடையிலேயே மருத்துவமனையில் இருந்தபடி அரசுப் பணிககளையும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
கைத்தறி நெசவாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, எதிர்காலத்தில் கைத்தறி நெசவு சந்திக்கக்கூடிய சிக்கல்களையும் நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் மாற வேண்டியதையும் வலியுறுத்தியவர் பெரியார். ஆனாலும், அவர் விரும்பி அணிந்தது கைலி உள்ளிட்ட கைத்தறி உடைகளைத்தான். கைத்தறி நெசவாளர்கள் துயர் துடைக்க தி.மு.க. சார்பில் துணி விற்பனை இயக்கம் 1953ல் நடத்தப்பட்டது. திருச்சியில் அண்ணாவும் சென்னையில் கலைஞரும் கூவிக்கூவி வேட்டி, சட்டைத்துணி, கைலி, துண்டு ஆகியவற்றை விற்றார்கள். அந்தப் பணத்தை கைத்தறி நெசவாளர்களுக்கு அளித்தார்கள்.
மேடை, வீடு, சிறை, மருத்துவமனை என திராவிட இயக்கத் தலைவர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் அடையாளமாகியிருக்கிறது அவர்கள் அணிந்திருந்த கைலி எனும் எளிமையும் வசதியுமான உடை.