அங்குசம் பார்வையில் ‘சீதா பயணம்’
ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கதை-திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்திருக்கும் படம். இதில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நிரஞ்சன் சுதிந்த்ரா, கோவை சரளா இவர்களுடன் கெளரத் தோற்றத்தில் அர்ஜுனும் கன்னட ஹீரோ துருவ் சார்ஜாவும் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ஜி.பாலமுருகன், இசை : அனூப்ரூபென்ஸ், எடிட்டிங் : அயூப்கான், பி.ஆர்.ஓ.சதீஷ் [ எய்ம்]
கோடீஸ்வரர் சத்யராஜின் மகள் சீதா [ஐஸ்வர்யா அர்ஜுன்] கேட்டரிங் படிப்பு முடித்து அது தொடர்பாக மதுரையில் நடக்கும் அகில உலக கேட்டரிங் ஒர்க்ஷாப்பிற்காக காரில் பயணிக்கிறார். போகும் வழியில் கிடார் இசைக் கலைஞர் நிரஞ்சனின் கார் ரிப்பேரானதால், ஐஸ்வர்யாவிடம் லிப்ட் கேட்க, ஆதார் அட்டையுடன் இன்னபிற கண்டிஷன்களையும் சொல்லி காரில் ஏற அனுமதிக்கிறார்.

அவருடன் பயணிக்கும் போது மதுரையில் ரவுடியாக இருக்கும் கிரி [அர்ஜுன்]க்கும் இன்னொருவருக்கும் தகறாரு நடந்து பயணம் சில நிமிடங்கள் தடைபடுகிறது. அதைக் கடந்து செல்லும் சில பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளி பள்ளிக்குழந்தைகள் இவர்களிடம் தேசியக் கொடியைக் கொடுத்து [ இதான் அர்ஜுன் டச்சாம்] வாழ்த்துகிறார்கள். அதற்கடுத்து ஒரு சிறுவன் மாடு ஒன்றுடன் குறுக்கிடுகிறான். அதற்கடுத்து சாலையில் பழம் விற்கும் சிறுமி குறுக்கிடுகிறாள். அதற்கடுத்து கோவை சரளாவிடன் டீக்கடையில் சில நிமிடங்கள் காரை நிறுத்துகிறார் ஐஸ்வர்யா. எல்லாம் முடிந்து போகும் வழியில் இருக்கும் நிரஞ்சனின் ஊரானா சீதாபுரத்தில் காரை நிறுத்தி அவரை இறக்கிவிட்டு மதுரைக்கு கிளம்புகிறார் ஐஸ்வர்யா.
ஒர்க் ஷாப் நடக்கும் பில்டிங்கிறகுள் ஐஸ்வர்யா நுழைய சில வினாடிகள் இருக்கும் போது தீடீரென கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பில்டிங்கே தரைமட்டமாகிறது. உள்ளே இருக்கும் அனைவரும் பலியாகிறார்கள். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளாகிறார் ஐஸ்வர்யா. தான் உயிர் பிழைத்தற்கு வரும் வழியில் தான் சந்தித்த நபர்களும் அங்கே ஏற்பட்ட சில நிமிட தாமதமும் தான் காரணம் என்பதை உணர்ந்து… திரும்பி போகும் வழியில் அவர்களையெல்லாம் சந்தித்து நன்றி சொல்ல புறப்படுகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
இதான் சீதா பயணத்தின் கதை. படிக்கவும் நல்லாத்தான் இருக்கு. தன் மகளுக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அப்பா அர்ஜுனின் ஆசை நியாயமானது தான். அதுக்காக ரசிகர்களை இம்சித்தது எந்த வகையில் நியாமம்னு தெரியல. முழுக்க கர்நாடக மாநிலத்திலும் ஆந்திராவின் சில பகுதிகளிலும் எடுத்துவிட்டு… அதில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கோவை சரளா ஆகியோரிடம் மொத்தமாக நான்கு நாட்கள் கால்ஷீட் வாங்கி நடிக்க வைத்துவிட்டால் அதை தமிழ்ப்படமாக்கிவிடலாம் என கணக்குப் போட்டிருப்பார் போல. ஆனா ஆக்ஷன் கிங்கின் கணக்கு தப்பாகி எல்லாமே ராங்காகிப் போனது தான் மிச்சம்.
ஹீரோ நிரஞ்சனின் தாத்தா அனுமந்தாச்சார்யாவாக ஆந்திரா ஸ்டைல் வேட்டிக்கட்டுடன் வரும் பிரகாஷ்ராஜ் “அவய்ங்க…இவயங்க..ஏத்தா இம்புட்டு அழகா இருக்கீயே ஆத்தா, நீ தான் எங்க வீட்டு மகாலட்சுமித்தா என பேசுனாமட்டும் தமிழ்ப்படமா ஆகிருமா என்ன? அனுமந்தாச்சாரிக்கும் மதுரை பாஷைக்கும் என்னய்யா சம்பந்தம்?
எப்பத்தான் இடைவேளை விடுவாய்ங்களோ என கதறும் அளவுக்கு முதல்பாதி ரொம்ப கடுப்பேத்திருச்சு. இடைவேளைக்குப் பிறகு ஐஸ்வர்யா நன்றி சொல்லக் கிளம்பிய பிறகும் நமக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படலை. இதுக்கிடையே ஆக்ஷன் கிங்கிற்கு ஒரு சண்டை, துருவ் சார்ஜாவுக்கு ஒரு சண்டை, ஹீரோ நிரஞ்சனுக்கு ஒரு சண்டைன்னு வச்சு ஃபில் பண்ணிருக்காய்ங்க.
ஐஸ்வர்யா அர்ஜுனின் நடிப்பு கொஞ்சம் டெவலப் ஆகிருக்கு. ஆனா ஹீரோ நிரஞ்சன் மைதா மாவை பிசைஞ்சு வச்சது போல அப்படியே இருக்காரு. இதைவிட பெரிய கொடுமை என்னன்னா… தான் அனுமாரின் தீவிர சிஷ்யன் என்பதால் ஐஸ்வர்யா அதாவது நம்ம சீதா பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பத்து கிலோமீட்டருக்கு ஒரு ஆஞ்சநேயர் பிளக்ஸ் போர்டு, ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு ராமர் பிளக்ஸ் போர்டுன்னு வச்சு… போதாக்குறைக்கு துருவ் சார்ஜா மூலம் “ஜெய் பஜ்ரங் காளி”ன்னு கோஷம் போடவச்சு முழு சங்கியா சண்டியர்த்தனம் பண்ணிட்டாரு ஆக்ஷன் கிங். ஊர் பேர்கள் கூட சீதாபுரம், ராமாபுரம், லட்சுமிபுரம்… எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது உங்களால?
சீதா பயணம்…. அட போங்கப்பா நீங்களும் உங்க பயணமும் படமும்.
அங்குசம் பார்வையில் ‘சீதா பயணம்’ 30/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.