திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பணிமுறை இரண்டு பொன்விழா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி 180 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் அக்கல்லூரியின் பணிமுறை இரண்டு பொன்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் வரவேற்புரையாற்றினார். கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் வாழ்த்துரையாற்றினார். விமான் எனிக்ஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் ஜி.ஆர்.ராம்பிரகாஷ் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் தம் உரையில், கல்லூரியில் படிக்கிற காலத்தில் இந்தக் கண்டிப்பும், வழிநடத்துதலும் வாழ்வின் பல நிலைகளில் உடன் வரும் என்பதை அப்போது நானும் என் நண்பர்களும் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. வரலாற்றுச் சிறப்புமிக்க வளனார் கல்லூரியின் பணிமுறை இரண்டில் கற்றுக்கொண்ட ஒழுக்கம், திறமை வாய்ப்புகளை பயன்படுத்தும் ஆற்றல் ஆகியனவே வாழ்வின் பல நிலைகளில் உடனிருந்து தனித்துவம்மிக்க பணிகளைத் துணிந்து செய்வதற்குத் துணையாக அமைந்ததன என்பதே உண்மை. அந்த வகையில் இயேசு சபை அருள்தந்தையர்களும், இக்கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களும் எங்களை வழிநடத்தி சமூகத்தைத் தாங்குவதற்கான தூண்களாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதற்கு நன்றி சொல்வதற்கான மேடையாக இந்த மேடைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அதே வேளையில் இப்போது இங்கு படிக்கிற இளைஞர்களும் இந்தப் புரிதலை உள்வாங்கி சிறந்த ஆளுமைமிக்கவர்களாக உருவாகிட வேண்டும் என்கிறத் தம் ஆவலையும் பதிவு செய்தார். கடந்த 50 ஆண்டுகளில் பணிமுறை இரண்டு பிரிவில் இணை முதல்வர்களாக, துணை முதல்வர்களாக பணியாற்றிய அருள்தந்தையர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், நீண்ட காலமாகப் பணியாற்றுகிற பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிறைவில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் பா.ராஜேந்திரன் நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து பேராசிரியர்கள் கல்லூரியின் வரலாறை மையப்படுத்தி நடத்திய பேராசிரியர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி, மற்றும் மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இணை முதல்வர் முனைவர் பா.ராஜேந்திரன், துணை முதல்வர்கள் அகஸ்டின் ஆரோக்கியராஜ் மற்றும் பாக்கிய செல்வரதி ஆகியோரின் ஒருங்கிணைப்பிலான பொன்விழாக்குழு பொன்விழா நிகழ்ச்சிகளை சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆதன்