கும்பகர்ண உறக்கத்தில் திருச்சி நெடுஞ்சாலை துறை – பரிதவிக்கும் குண்டூர் மக்கள் !
கும்பகர்ண உறக்கத்தில் திருச்சி நெடுஞ்சாலை துறை – பரிதவிக்கும் மக்கள் ! திருச்சி நெடுஞ்சாலை துறை மக்கள் நலப் பணி செய்யாமல், கும்பகர்ண உறக்கத்தில் உள்ளதுபோல் உள்ளது. திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்துவிட்டது.
ஆனால் மையத்தடுப்பு சுவரில் விளக்குகள் பொருத்தப்படவில்லை. பொதுமக்கள் பயன்அடையும் வகையில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. சாலைகளின் இரு ஓரங்களில் அலுமினிய தடுகள் வைக்கப்படவில்லை. இதனால் நெடுஞ்சாலைகள் வணிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.
டிவிஎஸ் டோல்கேட் தொடங்கி திருச்சி எல்லையான மாத்தூர் இரவுண்டா வரை சாலையின் இருபுறங்களில் தள்ளுவண்டி கடைகளில் உணவு, வாழைப்பழம், இளநீர், சிற்றுண்டி சாலைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனால் நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில், குண்டூர் வடக்கு மற்றும் கிழக்கு கிராமக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில், கடந்த 08.07.2024ஆம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு,“திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பேருந்து பயணிகளுக்கு நிழற்குடை அமைத்தல், நடுவில் உள்ள தடுப்பரண்களில் மின்விளக்குகள் அமைத்தல், புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து ஐடி பார்க் 336 நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 25 அடி சர்வீஸ் சாலைகள் அமைத்தல்” வேண்டி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதுவரை நெடுஞ்சாலை துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்புடைய அதிகாரிகள் நலச் சங்கத்தின் செயலாளரைத் தொடர்பு கொள்வார்கள் என்று ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனுவைப் பெற்றுக்கொண்ட நெடுஞ்சாலை துறை அலுவலர் தெரிவித்தார்.
அதன்படி இதுவரை நலச் சங்கத்தின் செயலாளரை இதுவரை எந்த அதிகாரியும் தொடர்பு கொள்ளவில்லை என்று நலச் சங்கத்தின் செயலாளர் தி.நெடுஞ்செழியன் அங்குசம் செய்தி இதழிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, 18.07.2024ஆம் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் மக்கள் குறைத்தீர்க்கும் சிறப்புக் கூட்டம் குண்டூர் ஊராட்சியில் நடைபெற்றது. அதில் நலச் சங்கத்தின் சார்பில், “திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள MIET பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்குச் சென்று மக்கள் பேருந்தில் ஏறவேண்டியுள்ளது. மேலும் அந்த மேற்குப் பகுதியில்தான் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தியன் வங்கியும் உள்ளது. அதிகவேகத்தில் வாகனங்கள் செல்வதால் மூத்தக்குடிமக்கள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இப் பகுதியில் உயிரிப்பும் ஏற்பட்டு வருகின்றது என்பதால் கீழ்மட்ட பாலம் (சுரங்கம்) அமைக்கவேண்டி ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது” என்றும், “இந்த மனு நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அரசின் தரப்பில் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நெடுஞ்சாலைத் துறையால் சம்பந்தப்பட்ட இடம் ஆய்வு செய்யப்படவில்லை. மனுகொடுத்தோரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை“ என்று நலச் சங்கச் செயலாளர் தி.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, மக்கள் பயனுரும் வகையில் உடனுக்குடன் செயல்படுத்திவரும் நிலையில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை – திருச்சி, கும்பகர்ண உறக்கத்தில் இருப்பது வேதனையாக இருக்கின்றது என்று பொதுமக்கள் குறைகூறுகின்றனர்.
உறக்கம் கலைத்து, நெடுஞ்சாலைத்துறை மக்கள் நலப் பணிகளை செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். நெடுஞ்சாலைத் துறை நிறைவேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
– ஆதவன்
நன்றி…. வாழ்த்துகள்