மருத்துவப் பணியில் 50 ஆண்டுகள் – தமிழ்ப் பணியில் 32 ஆண்டுகள் – மக்கள் மருத்துவர் கோபால் !
அரும்பாவூர் மருத்துவர் க.கோபால் பவழ விழா – அகவையில் 75 – மருத்துவப் பணியில் 50 ஆண்டுகள் – தமிழ்ப் பணியில் 32 ஆண்டுகள் – முப்பெரும் விழா – மக்கள் மருத்துவர் பட்டம் பெற்றார் மருத்துவர் கோபால். பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் இருக்கும் வயலும் வயல் சார்ந்த மருதநிலம் சூழ்ந்த அழகிய சிற்றூர் அரும்பாவூர். இவ்வூரில் 50 ஆண்டுகள் மருத்துவப் பணியை மருத்துவர் க.கோபால் நிறைவு செய்துள்ளார்.
அகவை 75 தொடக்கம். தமிழ்ப் பணியில் 32 ஆண்டுகளையும் நிறைவு செய்துள்ளார். மருத்துவர் கோபால் அவர்களுக்குப் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் 25.08.2024ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஜே.பி.எஸ். திருமண மண்டபத்தில் மக்கள் சார்பில் முப்பெரும்விழா நடைபெற்றது.
பவழவிழா மலரைச் செந்தலை ந.கவுதமன் வெளியிட்டார்.
இவ்விழாவிற்கு முனைவர் கு.திருமாறன் தலைமை தாங்கினார். மருத்துவர் அரும்பாவூர் மருத்துவர் க.கோபால் பவழவிழா சிறப்பு மலரைத் திராவிட இயக்க வரலாற்று ஆய்வு அறிஞர் புலவர் செந்தலை ந.கவுதமன் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். முதற்படியைப் பெற்றுக்கொண்டு தஞ்சை மருத்துவர் முனைவர் சு.நரேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
இவ் விழாவில் வெண்பாப்பாவலர் சுந்தரம். மு.இராசேந்திரன், சி.பாண்டியன், மு.செல்லப்பன், மருத்துவர்கள் தி.ப.மல்லிகா, சுப.திருப்பதி, செ.வல்லபன், வய்.மு.கும்பலிங்கனார், கடவூர் மணிமாறன், ஓவியர் கி.முகுந்தன், அ.க.விநாயகமூர்த்தி, மருத்துவர் கு.இசையமுது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையை மக்கள் மருத்துவர் பட்டம் பெற்ற க.கோபால் வழங்கினார். இந் நிகழ்வில் முனைவர் ம.செல்வபாண்டியன் வரவேற்புரையாற்றினார். மருத்துவர் கோ.இரேவதி நன்றியுரையாற்றினார். விழாவின் நிகழ்ச்சிகளைப் புலவர் ப.இராமதாசு, இ.தாகீர்பாட்சா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
விழாவில் குறித்த நேரத்தில் தொடங்கி நிறைவு பெற்றது
முப்பெரும் விழா அழைப்பிதழில் நிகழ்ச்சி நிரல் வெளியிட்ட வண்ணம் காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கிப் பிற்பகல் 1.30 மணிக்குச் சரியாக நிறைவுற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சூடான, சுவையான அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஒரு சணல் பையில் பவழவிழா மலர் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்குப் பெரம்பலூர் மாவட்டம் சார்ந்த பல கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் மருத்துவர்கள் வந்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் சார்ந்த தமிழ் அமைப்புகள் சார்ந்த சான்றோரும் வருகை தந்திருந்தனர். விழாவில் அரும்பாவூர் சார்ந்து 10 ஆம் வகுப்பு +2 தேர்வுகளில் முதல் இடம் பெற்ற 4 மாணவ, மாணவியருக்குத் தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.1 இலட்சத்தைப் பவழவிழா நாயகர் மக்கள் மருத்துவர் க.கோபால் வழங்கினார். மேலும் விழாவில் அரும்பாவூர்ப் பேரூராட்சித் தூய்மைப் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் சிறப்பிக்கப்பட்டனர் என்பது விழாவின் சிறப்பு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
மருத்துவர் க.கோபால் – சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பும் – பெற்ற கல்வியும்
சோழ வளநாட்டில் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் சமயபுரத்திற்கு 5 கல் வடக்கில் அமைந்துள்ள மேலவங்காரம் என்னும் சிற்றூரில் கந்தசாமி – அழகம்மாள் இணையருக்கு மூன்றாவது மகவாகக் க.கோபால் 1949இல் பிறந்தார். ஊரில் இருந்த கணேஷ்ராம் தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்றார். தமிழில் பிழையின்றி எழுதவும், படிக்கவும் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் போன்ற அடிப்படை அறிவுகளைப் பெற்றார். பின்னர்த் திருச்சி உருமு தனலெட்சுமி வித்தியாலயம் என்னும் உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். 1966ஆம் ஆண்டு திருச்சி தூய வளனார் கல்லூரியில் PUC என்னும் புகுமுக வகுப்பில் படித்து, தேர்ச்சி பெற்று, 16.081967ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார். 6 1/2 ஆண்டுகள் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தார்.
அரும்பாவூரின் அருமை மருத்துவர்
அரும்பாவூரின் நண்பர் மருத்துவர் பக்தவத்சலத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த ஊரிலே சிறிய மருத்துவச் சிகிச்சையகத்தை 22.04.1974ஆம் ஆண்டு தொடங்கினார். மருத்துவப் பணியில் ஏழை மக்களின் மீது அன்பும் இரக்கமும் கொண்டு செயல்பட்டார். பச்சிளங் குழந்தைகளுக்கு மகப்பேற்றுக்குப் பின்னர் 6-8 நாளில் தாக்கிய வில்வாத சன்னி கண்ட 8 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றியது இவரின் மருத்துவசாதனைகளில் முதன்மையானது.
பச்சை மலை பகுதி வாழ் மக்களின் பால்வினை நோய், நஞ்சருந்துதல், விஷபாம்பு கடி இவற்றிலிருந்து மக்களை உரிய நேரத்தில் காப்பாற்றி, அரும்பாவூர் மக்களின் பேரன்பைப் பெற்றவர் மருத்துவர் கோபால் என்றால் மிகையில்லா உண்மையாகும். அவர் தேன்மொழியை இல்வாழ்வின் துணைநலமாக 1977ஆம் ஆண்டில் பெற்று, அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று செம்மாந்த வாழ்க்கை வாழ்ந்து இரேவதி, பாரதி என்னும் இரு பெண்மக்களைப் பெற்றனர்.
தமிழ்ப் பணி
1990களுக்குப் பின் மருத்துவர் பிறதுறைகளிலும் ஆர்வம் கொண்டார். தமிழின் மீது மருத்துவர் ஆர்வம் கொள்ளக் காரணமாக இருந்தவர் அவருடைய நண்பர் குறளன்பன். அவர்தான் மருத்துவருக்குப் பாரதிதாசன் படைப்புகளை அறிமுகம் செய்துவைத்தார். ஆனைமுத்து ஐயா தொகுத்த ஈ.வே.ரா.வின் சிந்தனைகள் 3 தொகுப்புகளையும் மருத்துவர் வாசித்து முடித்தார். வாசிப்பின் வழியாக மானுட விடுதலைக்குப் பாடுபாட வேண்டும் என்ற உணர்வு கொண்டார்.
பின்னர்த் தனித்தமிழில் எழுதவும், பேசவும் முயன்று தேர்ச்சி பெற்றார். திருச்சி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருக்குறளில் ஒரு குறளுக்கு ஒருமணி நேரம் தந்த விளக்கம் கேட்டுத் திருக்குறள் மீது ஆர்வம் கொண்டார். பின்னர்ப் பல்வேறு அமைப்புகள் நடத்தும் திருக்குறள் போட்டிகளில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிப் பரிசுகளைப் பெற்றுள்ளார். திருக்குறள் குறித்து அறிவியல் நோக்கில் பல நூல்களை இயற்றியுள்ளார். இவரின் நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட விருதுகளைத் தமிழ் அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளார். பல அமைப்புகளில் பங்கெடுத்துச் செயலாற்றி வருகிறார்.
சமூகப் பணிகள்
அரும்பாவூரில் க.கோ. மருத்துவமனை உருவாயிற்று. அதனைத் தொடர்ந்து மருத்துவரின் பல கனவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அரும்பாவூர் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு திங்களும் முழுநிலவு இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. வள்ளுவர் அறிவியல் மையம் தொடங்கப்பட்டது. மாணவர் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது. திருக்குறள் தொடர்பான பல நூல்களை அறிவியல் நோக்கில் மருத்துவர் படைக்கத் தொடங்கினார்.
மேலும், அரும்பாவூர் சார்ந்த மாணவர்களுக்கு 10 வகுப்பு +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றோருக்கு ஆண்டுதோறும் பொற்கிழிகள் வழங்கி மாணவர்களைச் சிறப்பித்து, கல்வியில் ஊக்கம் கொள்ளவைத்தார் என்பதும் மருத்துவரின் தனிச்சிறப்பாகும்.
அகவை 75ஐ தொட்டும் 50 ஆண்டு கால மருத்துவப் பணியை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். மக்கள் நலமே தன் நலன் என்ற பெருநோக்கோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மருத்துவருக்கு அரும்பாவூர் மக்கள் இணைந்து “மக்கள் மருத்துவர்” என்னும் பொருத்தமான பட்டத்தைப் பவழவிழா நிகழ்வில் வழங்கியது பொருத்தமுடையதாகவே இருந்தது.
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஊரின் பெயரை வைத்தே சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் என்ற அழைக்கப்பட்டார். தமிழிசைக்கு உயிர் கொடுத்த கோவிந்தராசன் சீர்காழி கோவிந்தராசன் என்றே அழைக்கப்பட்டார். திராவிட இயக்கத் தலைவர் தருமலிங்கம் அன்பில் என்ற தன் ஊரின் பெயரால் அன்பில் தருமலிங்கம் என்று அழைக்கப்பட்டுப் பின்னர் அன்பில் என்றோலே அது தருமலிங்கத்தைக் குறிப்பதாக அமைந்தது.
இந்த வரிசையில் மருத்துவர் கோபால் மேலவங்காரத்தில் பிறந்திருந்தாலும், 50 ஆண்டு காலமாக மருத்துவப் பணியைச் செய்துவருவதால் அரும்பாவூர் க.கோபால் என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகின்றார். எதிர்காலத்தில் அரும்பாவூரார் என்றாலே அது மருத்துவர் க.கோபாலைக் குறிப்பதாகவே அமையும் காலம் விரைவில் கனியும் என்ற நம்பிக்கையோடு பவழவிழா நிகழ்விலிருந்து மீண்டு திருச்சி வந்தடைந்தோம்.
மருத்துவர் க.கோபால் எழுதிய நூல்கள்
1992 – வள்ளுவத்தில் அறிவியல்
2007 – வருமுன் காப்போம் – கருவறையிலிருந்தே
2012 – இல்லறமே இன்ப நிலையம்
2015 – திருக்குறள் பன்மணிமாலை
2017 – The Multigemmed Garland of Thirukkural (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் திரு.கலைவாணிகுமார்)