மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

இனிய ரமலான் வாழ்த்துகள்

மானுடராய் வாழ்ந்து மறைந்த பேச்சுக்கலைஞன் நந்தலாலா !

”காவிரியின் முகமே … கலை இலக்கிய முகமே … எமை விட்டு எங்கே போனாயோ … தந்தை பெரியாரை ஒரு தோளில் … மார்க்சியத்தை மறுதோளில் … நெஞ்சில் செந்தமிழைச் சுமந்து … செங்கொடியாய் வாழ்ந்த எம் தோழரே …. கண்களை குளமாக்கி நீ எங்கே போனாயோ …” கவிஞர் நந்தலாலாவின் புகழஞ்சலி நிகழ்வில், பின்னணி இசையேதுமின்றி ஒலித்த அந்த குரலிசை ஒட்டுமொத்த அரங்கையும் நிசப்தமாக்கியது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கவிஞரும் எழுத்தாளரும் தமிழகம் அறிந்த பேச்சாளரும் தமுஎகசவின் மாநில துணைத் தலைவருமான நந்தலாலாவின் மறைவையொட்டி, அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், திருச்சி மாவட்ட தமுஎகசவின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட புகழஞ்சலி கூட்டம், திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி அரங்கில் மார்ச்-09 அன்று நடைபெற்றது. நிகழ்வுகளை, தமுஎகசவின் நிர்வாகியும் வழக்கறிஞரும் நந்தலாலாவின் நெருங்கிய நண்பருமான ரெங்கராஜன் ஒருங்கிணைத்தார்.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஆளுமைகளால் நிரம்பியிருந்தது, கலைக்காவிரி அரங்கம். சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த அந்த நிகழ்வில், ஒருமுறைகூட ஒருவர்கூட கடைசிவரை கை தட்டவே இல்லை. ஆளுமைகள் பகிர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றுமே, கண்களை குளமாக்கின. மிக முக்கியமாக, ”அட இப்படிப்பட்ட மனிதரை இழந்துவிட்டோமே” என்ற  ஆதங்கத்தை காட்டிலும், “இப்படிப்பட்ட மனிதரை தமிழகம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட மறந்தது ஏனோ?” என்ற கேள்வியைத்தான் எழுப்பியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தோழராகவோ, அல்லது அவ்வமைப்பின் அரசியல் தலைமையான மார்க்சிஸ்டு கட்சியின் தோழராகவோ, நாத்திகராகவோ, திராவிட சிந்தனையாளராகவோ,  கவிஞராகவோ, எழுத்தாளராகவோ, ஆகச்சிறந்த பேச்சாளராகவோ மட்டும் அவர் அடையாளப்படுத்தப்படவில்லை. எந்த கூட்டுக்குள்ளும், எந்த வட்டத்திற்குள்ளும் சிக்கிடாத, எந்த நிறத்தையும் உள்வாங்கிடாத சராசரி மனிதராய் ஆகச்சிறந்த மானுடராய் வாழ்ந்து மறைந்திருக்கிறார், நந்தலாலா என்பதைத்தான் அந்த மூன்று மணி நேர நிகழ்வு குறிப்பால் உணர்த்திய செய்தி.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

புகழஞ்சலி நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றிய கலைக்காவிரி கல்லூரியின் அருட்தந்தை லூயிஸ் பிரிட்டோ, “கடவுள் மறுப்பாளர்களையும் கடவுளின்பால் நம்பிக்கை கொண்ட எங்கள் போன்றோரையும் ஒருங்கிணைத்திருப்பதுதான் நந்தலாலாவின் தனித்தன்மை. 2002 ஆம் ஆண்டு மதமாற்றத்தடை சட்டத்திற்கு எதிரான கூட்டம் ஒன்றில்தான் அவரது ஆற்றல்மிகு பேச்சை முதன்முதலாக கேட்டேன். குறிப்பிட்ட மேல்தட்டு மக்களுக்குமட்டுமேயானதாக இருந்த கலையை சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமானதாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் அருட்தந்தை ஜார்ஜ் அவர்களின் முனைப்பில் உருவானது இந்த கலைக்காவிரி. அதையொத்த சிந்தனை கொண்டவர்தான் நந்தலாலா. அவர் நிகழ்த்தும் அத்துனை கலை இலக்கிய நிகழ்வுகளிலும் எங்களது கல்லூரி மாணவர்களின் கலைத்திறனை அரங்கேற்றம் செய்ய வேண்டுமென்பதை விருப்பமாக கொண்டிருந்தவர். “ என்பதை பதிவு செய்தார்.

”அவர் பெரியாரை பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாத கூட்டங்கள் எதுவுமில்லை” என்றார், திராவிடர் கழகத்தின் தோழர்கள் சுட்டிக்காட்டினார்கள். ”பாரதியின் மீது தீரா காதல் கொண்டு தன் மகள்கள் இருவருக்கும் அதன் தாக்கத்தில் பெயர்களை சூட்டியவர்; அதற்கு நேர் எதிரான பாரதியை ஏற்றுக்கொள்ளாத திராவிட இயக்கத்தினருடனும் நட்பு பாராட்டியவர், நந்தலாலா. இதுதான் அவரது தனிச்சிறப்பு” என்பதாக குறிப்பிட்டார், தோழர் ஒருவர்.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், ஒருகாலத்தில் தமுஎகச அமைப்பில்  தோழர் நந்தலாலாவுடன் பயணித்து பின் அரசியல் முரண் காரணமாக, பிரிந்து செயல்பட்டாக வேண்டிய சூழலை எதிர்கொண்ட தோழர் பாட்டாளி உள்ளிட்ட பல தோழர்களும் பகிர்ந்த ஒரு தகவல். “அவர் யாரையும் ஒதுக்கி வைத்ததே இல்லை. அமைப்பு ரீதியாக பிரிந்து சென்றாலும், பாசம் குறையாமல் பழகியவர். ஒவ்வொரு கூட்டம் முடிந்து மேடையை விட்டு கீழே இறங்கும்போதும் அவரை சூழ்ந்து நிற்கும் பெருங்கூட்டத்திலும் தனி உரையாடலை நடத்துபவர். அவரைப் போல நட்பு வட்டங்களை பராமரிப்பது கடினம்.” ”முரண்களை ஒத்துப்போக வைப்பது” என்பதாக, இதன் சாரத்தை ஒற்றை வரியில் முத்தாய்ப்பாக குறிப்பிட்டார், தோழர் ராஜா.

ஓவியக்கலைஞன், சிற்பக்கலைஞன் என்பதைப்போல, நந்தலாலா ஒரு பேச்சுக்கலைஞன் என்றார், ராஜா. ”அவரது வியத்தகு பேச்சைக் கேட்டுத்தான் பி.சீனிவாசராவை பற்றி … உ.வே.சாமிநாதரைப் பற்றி அறிந்து கொண்டேன். எனது வாசிப்பு பழக்கத்தையும் சமூகம் சார்ந்து இயங்க வேண்டுமென்ற சிந்தனையையும் விதைத்தது, அவரது பேச்சுத்தான்.” என்பதை பலரும் அவர்களது பல்வேறு அனுபவங்களின் வழியே எடுத்துரைத்தனர். ”மரபுவழியாகவே பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போயிருந்த குடும்பப் பின்னணியை கொண்ட அந்த பெண் தோழர் பேசும்போது, ”கணவர் வழியாக நந்தலாலாவின் அறிமுகம் கிடைத்தபிறகுதான் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கினேன். இன்று என் பேரப்பிள்ளைகளிடத்திலும் அதை கடத்தியிருக்கிறேன்.” என்ற செய்தி அரங்கை நெகிழ்வில் ஆழ்த்தியது.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

கடந்த நாற்பதாண்டுகால அவரது இலக்கிய வாழ்வில், அவர் கால்படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கும் தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணப்பட்டிருக்கிறார், நந்தலாலா. பலரும் அவரை முதன் முதலாக சந்தித்தது என்பதாக பதிவு செய்தது, தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் நள்ளிரவையும் தாண்டி நிகழ்ந்த இலக்கிய இரவொன்றில்தான் என்பதுதான். அதனை கவித்துவமாகவே ஒருவர் குறிப்பிட்டார், “இலக்கிய இரவொன்றில், நிலவாக தூரத்திலிருந்து ரசித்திருக்கிறேன்”.

”சுவர் ஓவியரான என்னை, வெளியில் என் தொழிலை பெருமையாக சொல்லும் நிலையை உருவாக்கியவர் நந்தலாலா. மாநாட்டு பணிகளின்போது, உடனிருந்து உற்சாகம் தந்து இயக்கியவர். ஒருமுறை ஒட்டுமொத்த அணியும் சோர்ந்திருந்தபோது, அனைவரையும் ஒன்றாக அமரச்செய்து குட்டிக்கதை சொல்லி உற்சாகமூட்டி உத்வேகத்தோடு இயங்க வைத்தவர்.” என்பதாக, ஓவியர் வீராச்சாமி தனது அனுபவங்களை பகிர்ந்தபோது, ஓவியக்கலைஞரையும்கூட இலக்கியவாதியாக மாற்றிய நந்தலாலாவின் செய்நேர்த்தி மிளிர்ந்தது.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

அவரிடம் வெளிப்பட்ட செய்நேர்த்தி, செயல்பாங்கு எல்லாவற்றையும் நுட்பமாக பதிவு செய்தார்கள். ”இந்தக் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தால்கூட, முதலில் மைக் அமைப்பைத்தான் சரிபார்த்திருப்பார். அதற்கேற்ப சில அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பார். யார் எப்போது பேசவேண்டும்? எவ்வளவு மணித்துளிகள் பேச வேண்டும்? என்பதையெல்லாம் அவ்வளவு நுட்பமாக பகுத்து திட்டம் போட்டு அந்நிகழ்வை அவர் ஒருங்கிணைப்பார். திருச்சி புத்தகக் கண்காட்சியை அவர் நடத்திக் காட்டிய விதம் ஒரு நிகழ்வை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்கான பாடமாக திகழ்கிறது.” என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்
கவிஞர் நந்தலாலா புகழஞ்சலி கூட்டம்

“தமிழகத்தின் சிறந்த ஆளுமையாக இருந்தபோதிலும், துளியும் கர்வம் கொள்ளாதவர். எல்லோரிடமும் அன்பாகவும், சகஜமாகவும் பழகக்கூடியவர். தோளில் கைப்போட்டு பேசக்கூடியவர். திறமைகள் எங்கு இருந்தாலும், அது எவர் இடத்து இருந்தாலும், அதை அடையாளம் கண்டு சமயம் பார்த்து பயன்படுத்திக் கொள்பவர். பலரை பல மேடைகளில் பேச்சாளராக, கவிஞராக மேடையேற்றியிருக்கிறார். அவர் ஒரு அறிவுஜீவி என்பதால் அல்ல; மனதுக்கு நெருக்கமானவர் என்பதால்தான் இங்கே அரங்கம் நிரம்பியிருக்கிறது.” என்பதை பதிவு செய்தார் தோழர் ஒருவர்.

நந்தலாலாவின் அழிக்கமுடியாத அடையாளமாகவே மாறிப்போன, அவரது ”ஊரும் வரலாறும்” என்ற  தலைப்பில் வெளியான நூலில், கவிஞர் நந்தலாலாவை பற்றிய குறிப்புகளை சேர்த்து வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையும்; அவர் வாழ்ந்து மறைந்த கருமண்டபம் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்; கலைமாமணி விருது வழங்கி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த அரங்கத்திலிருந்து எழுந்திருக்கிறது.

கட்சி வேறுபாடுகள் கடந்து, இலக்கிய அமைப்புகள் என்ற அடையாளம் கடந்து நந்தலாலாவை போலவே, அன்பால் ஈர்க்கப்பட்ட, அவரது ஆகச்சிறந்த பேச்சுக்கலையால் உத்வேகம் கொண்ட, அவரது எழுத்துக்களால் தாக்கம் கண்ட தோழமைகளின் இதயங்களிலிருந்து வெளியான உருக்கமான கோரிக்கையும்கூட !

–   இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.