உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் !
உறக்கத்தை கெடுத்த வெண்ணிற இரவுகள் ! காதலை மையமாக வைத்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்று வரை உலக புத்தக வாசகர்களால் கொண்டாடப்படும் ஒரு காதல் காவியம் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவஸ்கி எழுதிய, ‘வெண்ணிற இரவுகள்’ என்னும் குறு நாவல். 1848 இல் ரஷ்ய நாட்டின் ஏதோ ஒரு மூலையில் எழுதப்பட்ட இக்குறுநாவல் 2024 இல் தமிழ்நாட்டில் என் கையில் தவழ்கிறது.
கதையில் வெறும் மூன்று கதாபாத்திரங்கள்தான். அதுவும், நான்கு இரவுகள் மற்றும் ஒரு பகலுக்குள் மொத்தக் கதையும் முடிந்துவிடுகிறது. ஒற்றை வரியில் சொல்வதென்றால், “ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். பிறகு, பிரிந்து சென்று விடுகிறார்கள். அவ்வளவுதான்”.
பொதுவில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் சந்தித்து கொள்வார்கள். காதலில் விழுவார்கள். இல்லை. காதல் அவர்கள் மீது விழும். இறுதியில் ஒன்று சேருவார்கள். இல்லை. பிரிந்து சென்றுவிடுவார்கள்.
வெண்ணிற இரவுகளின் காதல் கதை இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இங்கே, ஒரு பெண்ணை இரு ஆண்கள் காதலிக்கிறார்கள். பொதுவில், அந்த இருவருள் திறமையான, அழகான ஒரு ஆண்மகனை அவள் தேர்வு செய்வாள் என எளிதாக நம்மை கடந்து போகவிடாமல், அந்த இருவருமே திறமையானவர்கள் என்பதாக, யாரை தேர்வு செய்வது என்ற சிக்கலான நகர்வுகளோடு கதையை கட்டமைத்திருக்கிறார் தாஸ்தாவெஸ்கி.
எல்லோரும் இருந்தும் இல்லாமல் இருப்பதான தனிமையில் வாடும் இளைஞன் ஒருவன், அந்த முதல் நாள் இரவு ஒன்றில், அவளை – நாஸ்தென்காவை – முதன் முதலாய் சந்திக்கிறான். பேச முற்பட்டு உளறுகிறான்.
இரண்டாம்நாள் இரவில் இருவருக்கிடையில், தங்களைப் பற்றி தங்களது கடந்த காலத்தைப் பற்றி விரிகிறது உரையாடல். அப்போது, மூன்றாவது கதாபாத்திரமான நாஸ்தென்காவின் முன்னாள் காதலனையும் கதைக்குள் கொண்டு வந்து விடுகிறாள்.
மூன்றாம் நாள் இரவில், நாஸ்தென்கா மீதிருந்த நட்பு காதலாக மாறுகிறது. ஆனால், காதலை சொல்ல தைரியம் இல்லை. நாஸ்தென்காவின் முன்னாள் காதலன் செய்து கொடுத்த சத்தியத்தை சொல்லி, காதல் நினைவுகளை சொல்லி கலங்கி நிற்கிறாள். அவனுக்கே அவள்தான் ஆறுதலாக இருக்கிறாள் என்ற சூழலிலும்; அவளுக்கு இவன் ஆறுதல் கூறுகிறான்.
நான்காம் நாள் இரவில், தன்னைத் தன் முன்னாள் காதலன் ஏமாற்றிவிட்டதாக நாஸ்தென்கா நினைக்கிறாள்.
பிறகு அவளுக்கும் அவன் மீது காதல் அரும்புகிறது. அந்தக் காதல் துளிர்விட்டதா? நாஸ்தென்காவின் முன்னாள் காதலன் அவளுக்குச் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆயிற்று? அவர்கள் இருவரும் காதலில் வென்றார்களா? அல்லது அவர்களின் காதல் இவர்களை வென்றதா? … சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லாமல் எல்லா வினாக்களுக்குமான பதிலை தனக்குள் பொதித்து வைத்திருக்கிறது நான்காம் இரவு.
வெண்ணிற இரவுகளை தழுவி உலகு முழுவதும் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு விட்டன. தமிழில் இயக்குநர் ஜெகநாதனின் இயக்கத்தில் வெளியான “இயற்கை” திரைப்படமும் அதில் ஒன்று. அதுவரை, ஆண்களே முடிவு எடுக்கும் உரிமை உள்ளவனாக, ஆணாதிக்கச் சிந்தனை கோலோச்சிய 1848 – களின் காலத்தில், நாஸ்தென்கா என்ற இளம்பெண் தன் காதல் குறித்து முடிவை தீர்மானிப்பவளாக கதையை கட்டமைத்ததுதான் தஸ்தயேவஸ்கியின் சிறப்பு. அடுத்து, இதுவரை காதல் கொள்ளாதவனையும் காதல் கொள்ள வைத்த அந்த வெண்ணிற இரவுகளுடையது.
இறுதியில், அவளின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கக்கூடாதா? என்ற சிந்தனையில் ஆழ்த்தி, பல இரவுகளின் தூக்கத்தை கலைத்து, கண்ணீர் விட்டு அழவும் வைத்திருக்கிறது, வெண்ணிற இரவுகள்.
ஆனாலும், அந்தப் பெண்ணின் துணிச்சலான அந்த முடிவால் தான் இன்று வரை வெண்ணிற இரவுகள் என்ற காவியம் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகிறது.
– சுஜாதா.சஞ்சய் குமார், இயற்பியல் துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி.