சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல் பொதுமேடை)-29
“பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஐயா ஆனைமுத்து”பேராசிரியர் சோம.இராசேந்திரன் புகழுரை !
அங்குசம் சமூக நல அறக்கட்டளை – யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சோம.இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்புரையாளரை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் நெ.நல்லமுத்து பயனடை அணிவித்துச் சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் தொடக்க உரையாற்றும்போது, “சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து இந்தியச் சமூகநீதி வரலாற்றில் அழியாத இடம் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருப்பவர். அவரைப் பற்றிய வரலாற்று தகவல்களோடு நம்மிடையை உரையாற்ற வருகை தந்திருக்கும், முனைவர் சோம ராசேந்திரன் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஆய்வு கட்டுரைகளை வழங்கிய பெருமைக்குரியவர். எல்லாவற்றையும் தாண்டி 2010 ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் பொறுப்பில் கலைஞர் இருந்தபோது, ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈவெராவின் சிந்தனைகள் என்ற 20 நூல்களினுடைய பதிப்பு குழுவில் முதன்மை உறுப்பினராக இரண்டு ஆண்டு காலம் முழுமையாகப் பணியாற்றியவர். ஆனைமுத்தோடு அவருடைய கொள்கை சார்ந்த பணிகளில் மிக நெருக்கமாக அவரோடு உடனிருந்த ஒரு இளைஞர் முனைவர் சோம ராசேந்திரன்” என்பதாக குறிப்பிட்டார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் சோம.இராசேந்திரன், “பெரியாரைப் படிக்காதவர்கள் பெரியாரைப் புரியாதவர்கள் பெரியார் கொள்கைகளின் வழி நடக்க இயலாதவர்கள் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதாகப் பேசுகிற ஒரு மிக நெருக்கடியான காலகட்டத்தில் இன்றைய தமிழகம் இருக்கிறது. பெரியார் என்பவர் இன்னுமும் தமிழர்களால் சரியாகவே புரிந்து கொள்ளப்படாமல் போய்விட்டார். அதை ஆனைமுத்து – 100 என்ற இந்த நிகழ்வில் நாம் ஈவேரா சிந்தனைகளை அறிஞர் ஆனைமுத்து தொகுத்து வெளியிட்ட செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

என்னிடம் பயின்ற மாணவர் முத்தமிழ்ச் செல்வன் தான் என்னை ஆனைமுத்து ஐயாவிடம் அழைத்துக்கொண்டு போய் அறிமுகப்படுத்தினார். பெரியார் உரைகளைப் பெரியார் சிந்தனைகள் என்னும் பெயரில் தொகுத்துக் கொண்டு இருக்கிறேன். இந்தப் பணியில் நீங்கள் இணைந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.
சென்னை சென்றபோது ஐயா ஆனைமுத்து அவர்கள் ஒரு பக்கக் கட்டுரையைக் கொடுத்து மெய்ப்பு திருத்தம் செய்து கொடுங்கள் தோழர் என்று சொன்னார். பெரியார் சிந்தனைகள் கிட்டத்தட்ட 12000 பக்கங்கள் வந்தது. ஐயா ஆனைமுத்து அவர்களின் கனவு என்பதை நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள். ஆசியன் இன்ஸ்டிடியூட் புத்தகத்தைப் பார்த்துவிட்டு இது மாதிரி கெட்டி அட்டை வேண்டும் என்றார். அந்தப் புத்தகம் எங்கே அச்சடிக்கப்பட்டது என்றும் அறிந்து அங்கே சென்று விசாரித்தபோது, தாள்கள் பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பதை அறிந்தோம்.
அப்போது, ”பெரியார் சிந்தனை புத்தகத்தைப் பார்த்தால் அதை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, இதை யாருக்கும் நான் கொடுக்கமாட்டேன் அப்படி என்று சொல்கிற அளவுக்கு அது அழகாக இருக்கவேண்டும்” என்றார் ஆனைமுத்து. ஒரு பொருளை என் உயிர். எனக்கு விருப்பமானதாகக் கருதுகிறேன். அது கருத்துக்காக மட்டுமல்ல வடிவத்திற்காகவும் உள்ளடக்கத்திற்காகவும் மெனக்கெட்டு நூலாக்கத்தை மிகச் செம்மையாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆனைமுத்து எண்ணினார்.
பெரியார் உயிரோடு இருந்த பொழுது முதல் வரிசையை மூன்று நூல்களாக வெளியிட்டார். அந்த மூன்று நூல்களாக 2000 பக்கத்துக்கு உருவாக்கிப் பெரியாரிடம் கொண்டு போய்க் கொடுக்கிறார். அதை வாங்கிப் பார்த்துவிட்டு நான் இவ்வளவா எழுதிட்டேன் பேசிட்டேன் என்றாராம். பிறகு, பக்கத்துக்குப் பக்கம் திருச்சி சிந்தனையாளர் கழகத்துக்கு உரிமை என்று கையொப்பம் போட்டுக் கொடுத்தார். அந்த அளவுக்கு அவரை ஈர்த்த பதிப்பு. அவருடைய எழுத்துக்கள் பதிப்பாகிறது என்பதற்காக அல்ல, என் சிந்தனைகள் எதிர்காலத்துக்கும் போய்ச் சேரப்போகிறது என்பதற்காக.

அதனால்தான் இன்னைக்கு பெரியாரைத் திருத்தி பேசுகிறவர்கள், நடுவில் இருக்கிற ரெண்டு வரியை மட்டும் எடுத்துக்காட்டிப் பெரியார் அதைச் சொன்னார் இதைச் சொன்னார் என்று களங்கப்படுத்த முயல்கிறார்கள். இதை நான் ஆனைமுத்து பதிப்பில் இருந்து எடுத்தேன் என்கிறார்கள். இது மிகப்பெரிய கொடுமைதான். ஆனைமுத்து அந்தப் புத்தகங்களைப் போட்டதற்கான நோக்கம் இவர்கள் எடுத்து இப்படிப் பேசுவதற்கு அல்ல. பெரியாரை முழுமையாகச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக.
பெரியார் இறப்பதற்கு ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னால் அப்பொழுதுதான் முதல் முதலாகக் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லை என்ற முழக்கத்தை வெளியிடுகிறார். அந்தக் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு அரசியல் செய்தவர் அல்ல தந்தை பெரியார்.
இப்படி ஒரு கடவுள் தேவைதானா? இப்படி ஒரு கடவுள் இருக்க முடியுமா? இப்படிக் கடவுளை அசிங்கப்படுத்தலாமா? கடவுள் பேரில் அசிங்கமான கதைகளைச் சொல்லலாமா? என்றெல்லாம் கேட்டாரே தவிர, நான் உறுதியாகக் கடவுள் இல்லை இல்லை என்று சொன்னது இத்தனை ஆண்டுகள் கழித்து. இதுபோன்ற தகவல்களையெல்லாம் ஆனைமுத்துவினுடைய நூல்கள் கொண்டு சேர்த்தன” என்பதாக விரிவானதொரு உரையாற்றினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சதீஷ்குமரன் பேராசிரியர் சோம இராசேந்திரனின் செறிவான உரைக்கு நன்றி தெரிவித்தார். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்புரையாளருக்கு இதழ்களைப் பரிசாக வழங்கினார்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.