மகனை எம்.பி. தேர்தலில் களமிறக்கும் எடப்பாடி?
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும்போதுகூட திரும்பிப் பார்க்காத கெங்கவல்லி தொகுதியில் மாலை நான்கு மணி முதல் ஆறரை மணி வரை செலவு செய்தது ஏன்? குறிப்பாக… அவர் சென்றுவிட்டாலும் சமூகநலத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் எல்லாம் ஒட்டுமொத்த நலத்திட்ட உதவிகளையும் முடித்துவிட்டு வீரகனூரில் இருந்து புறப்படும்போது மணி நள்ளிரவு 12 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது.
சும்மாவா? 27,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள். ஒவ்வொருவரது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு சரிபார்த்து யாரையும் விட்டுவிடாமல் எந்தப் போராட்டமும் முளைத்துவிடாமல் பார்த்துப் பார்த்து உதவிகளை வழங்கினார்கள் அதிகாரிகள்.
இந்த விழா என்பது ஒரு வேட்டைக்கான அச்சாரம்தான் என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிகாரிகள் வட்டாரத்தில்.
என்ன வேட்டை, என்ன அச்சாரம்?
“எடப்பாடி அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல கண் வெச்சிட்டாருங்கறது உண்மைதான். அதுவும் சேலம், கள்ளக்குறிச்சி இது ரெண்டையும்தான் முக்கியமா குறி வெச்சிருக்காரு. சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக – காங்கிரஸ் அணியில் அநேகமாக காங்கிரஸ் வேட்பாளரா இருக்கலாம். அடுத்து கள்ளக்குறிச்சியில திமுகதான் போட்டியிடும்னு நினைக்கிறாரு. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி சேலம், விழுப்புரம் ரெண்டு மாவட்டத்துலயும் வருது. இதுல சேலம் மாவட்டத்துலேர்ந்து கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகள் இருக்கு. விழுப்புரம் மாவட்டத்துலேர்ந்து ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிள் இருக்கு. ஆக நான்கு, மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகள். ஏற்காடு எஸ்டி தொகுதி. இங்க அதிமுகவுக்கு கணிசமான பலம் இருக்கு.
ஏற்கெனவே எடப்பாடி 98-ல எம்.பி.யா இருந்திருக்காரு. அப்போது தமிழ்நாட்ல அதிமுக ஆட்சியில இல்லை. தமிழ்நாட்ல ஆட்சியில இல்லாத நேரத்துல டெல்லி பிடிமானம் எப்படிப்பட்ட அவசியம்னு எடப்பாடிக்குத் தெரியும், அதனாலதான் வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல எப்படியாவது 10 முதல் 15 சீட்டாவது அதிமுக ஜெயிச்சிடணும்னு நினைக்கிறார். அந்த நோக்கத்துல அவர் சேலம் இல்லேன்னா கள்ளக்குறிச்சிங்குற முடிவோட இருக்காரு. அதுவும் கள்ளக்குறிச்சியில தனக்கு நம்பிக்கையான ஒருத்தரை களமிறக்க முடிவு பண்ணிதான் அவரே இப்படி களமிறங்கியிருக்காரு. சில பேர் தனது நெடுநாள் விசுவாசியான உளுந்தூர்பேட்டை குமரகுருவின் பையனுக்குக் கள்ளக்குறிச்சியை எடப்பாடி தரப்போவதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், முதலமைச்சர் இவ்வளவு சீக்கிரம், இவ்வளவு வேகமா களமிறங்கியிருப்பதைப் பார்த்தா அவரோட இன்னொரு திட்டம் தெரியவருது. அதாவது எதிர்காலத்துல தமிழகத்தில ஆட்சியில இல்லைன்னாலும் டெல்லியில தனக்கு நம்பிக்கையான சில பேர் இருந்தால்தான் பாதுகாப்புனு நினைக்கிறார். அந்த வகையில கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தனது மகன் மிதுன் நிக்க வைக்கலாம்னும் ஒரு திட்டமிட்டிருக்கார் எடப்பாடி பழனிசாமினும் சொல்றாங்க. அடுத்தடுத்த சேலம் விசிட்டுகள்ல அந்தப் பக்கமே போயிக்கிட்டிருந்தார்னா இது இன்னும் உறுதியா தெரிஞ்சிடும்.
ஏன்னா ஆலோசனையின்போது அம்மா இருக்கும்போதே (அமைச்சர்) ஜெயக்குமார் மகனுக்கு எம்.பி சீட் கொடுத்திருக்காங்க. நம்ம தம்பி கள்ளக்குறிச்சியில நின்னா என்னன்னு சில பேர் முதல்வரிடம் கேட்டிருக்காங்க. அதுக்கு அவர் சிரிச்சு வச்சிருக்காரு. அவரோட திட்டம் தெரிஞ்சுதான் சிலர் இப்படிக் கேட்டிருக்காங்க” என்கிறார்கள்.
ஆக இந்த நான்கு நாள் விசிட்டில் முதல்வர் எடப்பாடியின் அரசியல் அஜெண்டா எம்.பி தேர்தல்தான் என்பது தெளிவாகிறது.