குறும்படம் திரையிட்டு குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய எஸ்.பி. !
கரூர் மாவட்டத்தில் 79 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரவப்படுத்தும் விதமாக கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தேசிய இராணுவத்தில் (IndianNational Army) பணியாற்றிய வீரர்களைப் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவில் பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் டாக்டர் ராமசுப்ரமணியன், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தியாகிகளின் வாரிசுகள், ஆயுதப்படை காவலர்களின் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும், ஆவணப்படுத்தபட வேண்டும் என்ற நோக்கத்திலும் விழாவை நடத்தியிருந்தார்கள்.
இவ்விழாவில் கரூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகள் இந்திய தேசிய இராணுவத்தில்பணியாற்றிய தியாகிகளின் வாரிசுகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
— அங்குசம் செய்திப்பிரிவு.