என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையை சீண்டிய அஜீத் ட்ரெயிலர்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிஸத்தை தடுக்க, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரையை களத்தில் இறக்கியிருக்கிறது தமிழக அரசு.
இவரது தலைமையிலான காவல்துறை சிறப்புப் படையானது, கட்டப் பஞ்சாயத்துகளை கண்காணித்து ஒடுக்குவது மட்டுமின்றி, தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை கொடுக்கும் ரவுடிகளையும் கண்காணிக்கும் என கூறப்படுகிறது.
கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டவர். கடந்த, 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இடமாற்றம் செய்யப்பட்டாலே என்கவுண்டர் பயத்தில் ரவுடிகள் உயிர் பயத்தில் அலறுவது வழக்கம்.
தமிழகத்தில் நடந்த பல்வேறு என்கவுண்டர்களில் வெள்ளதுரைக்கு தொடர்பு உண்டு என்பது காவல்துறை வட்டாரத்தில் அறியப்பட்ட ஒன்று.
வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், இவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிஸத்தை தடுக்கும் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதால், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை ஒடுக்கும் என்வுண்டர்கள் தொடருமோ என்ற அச்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது.
அதேநேரத்தில், குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்கமுடியாத, காவல்துறையின் இயலாமையும் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை காப்பாற்றவும்தான் என்கவுண்டர்கள் செய்யப்படுகின்றன. இது, போலீஸின் தோல்வி. அவர்களே தண்டனைக் கொடுத்துவிட்டால் பிறகு, எதற்கு வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் என்பது சட்ட நிபுணர்கள்-சமூக செயற்பாட்டாளர்களின் கேள்வி.
இந்நிலையில், இக்கருத்திற்கு வலுவூட்டும் விதமாக இன்று வெளியான ‘வலிமை’ ட்ரெயிலரில் காவல்துறை அதிகாரியான அஜீத்தைப் பார்த்து இன்னொரு போலீஸ், “இவனுங்கள என்கவுண்டர்ல தூக்கியிருக்கணும் சார்” என்று சொல்ல “உயிரை எடுக்கிற உரிமை நமக்கில்ல” என்று கூறுவதுபோல் வசனம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.