ஒன் மன்த் சேலரியை செலவு பண்ணி மேட்ச் பார்க்க முடியுமா மச்சான்? ஐ.பி.எல்.க்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (13)
“அடுத்த மேட்ச்சுக்கு டிக்கெட் இருந்தா சொல்லு மச்சான்.”
“ஒருத்தனும் காம்ப்ளிமென்ட் டிக்கெட் தர மாட்டேங்குறான்டா மச்சான்”
“ஆன்லைனில் வாங்க முடியுதான்னு பாரு. நான் பணம் கொடுத்து வாங்கிக்குறேன்”
“டிக்கெட்டெல்லாம் தாறுமாறா ரேட் சொல்றாங்க. ஒன் மன்த் சேலரியை செலவு பண்ணி மேட்ச் பார்க்க முடியுமா மச்சான்?”
ஐ.பி.எல். போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நாட்களுக்கு முன்பாகவே, இந்த டிக்கெட் ஃபீவர் அதிகமாகிவிடும். ஆயிரக்கணக்கில் பணத்தைப் போட்டு டிக்கெட் எடுக்க வேண்டும். அதற்கும் அலைய வேண்டும். ப்ளாக்கில் 4 பேருக்கு டிக்கெட் வாங்கினால் லட்ச ரூபாய் ஆகிவிடுகிறது என்று புலம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.
கிரிக்கெட்டைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு எப்போதும் செலவுதான். கிரிக்கெட் விளையாடுகிறவர்களுக்கும், அதை நடத்துகிறவர்களுக்கும் லாபம் நிச்சயம். கிரிக்கெட்டிற்கான ஸ்பான்சர், விளம்பரம், புரமோஷன் எல்லாமும் நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. அத்துடன் பெட்டிங் எனும் சூடாட்டமும்.
இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பத்திரிகை செய்திகளை வெளியிட அரசாங்கத்திடம் உரிமம் பெற வேண்டிய நிலை இருந்தது. 1695-இல் பத்திரிகை சுதந்திர சட்டம் நிறைவேறியது. எல்லா வகையான செய்திகளும் கவனம் பெற்றன. கிரிக்கெட் மைதானங்கள் மீதும் பத்திரிகையாளர்களின் கவனம் திரும்பியது. உள்ளூர் ஆட்டங்களில் பெரிய மனிதர்கள் விளையாடினர். அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது வாசகர்கள் ஆர்வமாகப் படித்தனர்.
பெரிய மனிதர்கள் எப்படி ஆடினார்கள், எத்தனை ரன்கள் எடுத்தார்கள், எவ்வளவு விக்கெட் விழுந்தது என்பதைவிட, கிரிக்கெட் பெட்டிங்கில் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் வாசகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்டிருப்பது, சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு என்பதுதான். எந்த பெரிய மனிதராக இருந்தாலும், அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதுதான் கவனம் பெறுகிறது. எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதன் அடிப்படையில்தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் மதிப்பிடப்படுகிறது. அந்தக் காலமும் இந்தக் காலம் மாதிரிதான்.
இங்கிலாந்து பண மதிப்பின்படி 100 பவுண்டு வரை சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது அப்போதைக்கு மதிப்பான தொகைதான். ‘மாபெரும் கிரிக்கெட் போட்டி’ என்ற அறிவிப்புடன் 1697ல் சஸ்ஸெக்ஸ் பகுதியில் இரண்டு அணிகள் மோதிய ஆட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட 50 நாணயங்களை இரு தரப்பும் பெட் கட்டி விளையாடின. அது பத்திரிகையில் செய்தியாக வெளியானதால், மற்ற பகுதிகளிலும் கிரிக்கெட் ஆட்டமும், அதற்கான பெட்டிங்கும் பரவத் தொடங்கின.
மேட்ச்சில் விளையாடுபவர்கள் மட்டுமல்ல, மேட்ச் பார்ப்பவர்களும் பெட் கட்டுவது என்ற நிலைமையை ஆட்டத்தை நடத்தும் நிர்வாகிகள் உருவாக்கினார்கள். சூதாட்டக்காரர்களின் களமானது கிரிக்கெட். பணம் புழங்கும்போது அதில் தனக்கும் ஒரு பங்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சிறு பங்கு கிடைத்தபிறகு, இது இன்னும் அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைக்க வைக்கும். கிரிக்கெட் போட்டிகளை நடத்தியவர்களுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் அப்படித்தான் தோன்றியது.
“பெரிய மனுசங்க ஆடுற ஆட்டத்தை நம்பி பெட் கட்டுறோம். ஆனா அவங்க விருப்பத்துக்குத்தான் ஆடுறாங்க. கட்டுன பணம் திரும்பக் கிடைக்குமா, பறிபோயிடுமான்னு ஆட்டம் முடியுற வரைக்கும் கெதக்..கெதக்னுதான் இருக்கு.”
“ஆமா.. நாம நினைக்கிற மாதிரி ஆட்டத்தின் போக்கு அமைந்தால்தான் பணத்தை அள்ள முடியும்.”
“நமக்குத் தகுந்த மாதிரியான டீம்களை உருவாக்கலாமே?”
சூதாட்டக்காரர்களும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் கூட்டணி அமைந்து அதுபோன்ற லோக்கல் அணிகளை உருவாக்கத் தொடங்கினர். நன்றாக விளையாடக் கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து அணிகளை உருவாக்கினார்கள். போட்டிகளை நடத்தினார்கள். ஒவ்வொரு அணியிலும் திறமையாக ஆடக்கூடிய பேட்ஸ்மென், பவுலர்கள் இருந்தனர். அதனால் சூதாட்டத் தொகை அதிகமானது.
விடுமுறை நாட்களில் விளையாடப்படும் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் சூதாட்டப் பணம், வார நாட்களில் முறையான தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இணையாக இருந்ததால் பிரபுக்களும் பிசினஸ்காரர்களும் தவறாமல் கிரவுண்டுக்கு வர ஆரம்பித்தார்கள். அவரவருக்கேற்ற கிரிக்கெட் டீம்களை உருவாக்கினார்கள்.
ஊரின் முக்கிய புள்ளிகள் பலரும் கிரிக்கெட் கிரவுண்டில்தான் இருக்கிறார்கள் என்றதும், பத்திரிகைகாரர்கள் இயல்பாக அங்கே குவிந்தனர். பிரபுவுடைய அணி வென்றது. பிசினஸ்மேன் அணி நன்றாக ஆடியது என்று பிரபலங்களை முன்னிறுத்தியே செய்திகள் வந்தன. 1730 இல் முதன்முதலாக ஒரு ப்ளேயரின் பெயர் கிரிக்கெட் செய்தியில் இடம்பெற்றது. அதுவும் எப்படி?
“ரிச்மன்ட் பிரபுவின் அணியின் தாமஸ் வேமார்க் என்ற ப்ளேயருக்கு உடல்நிலை சரியில்லாததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது”
(ஆட்டம் தொடரும்)
கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.