வந்தார்.. வாழ்வு தந்தார்..
காரைக்குடியிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் உள்ள ஒக்கூர், சங்க இலக்கிய காலத்திலிருந்தே சிறப்புக்குரியதாகும். ஒக்கூர் மாசாத்தியார் எழுதிய பாடல்கள் குறுந்தொகையிலும் அகநானூற்றிலும் இடம்பெற்றுள்ளன. தமிழ்ப் பெருமை கூறும் ஒக்கூரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 102 மறுவாழ்வு முகாம்களில் மேற்கொண்ட புனரமைப்பு பணிகளில் ஒக்கூர் முகாமிலும் புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டு, அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கானப் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.

சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக இரண்டு நாள் பயணமாகச் சென்ற மாண்புமிகு முதலமைச்சர், இன்று ஒக்கூர் முகாமிற்கும் சென்று பார்வையிட்டார். வண்ணக் கோலமிட்டு வரவேற்ற மக்களிடம் அடிப்படைத் தேவைகள் எந்தளவு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகள் மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
குடியுரிமை-வாக்குரிமை ஏதுமற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களை பஞ்சாயத்து தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள்கூட சந்திக்க மாட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் தங்களை நேரில் வந்து சந்தித்ததில் இலங்கைத் தமிழர்களுக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மறுவாழ்வு முகாம்களின் கட்டமைப்பிலும் அங்கு வாழும் மக்களின் மேம்பாட்டிலும் உண்மையான அக்கறையுடன் பல திட்டங்களை நிறைவேற்றி, நிரந்தரத் தீர்வாகக் குடியுரிமைக்கான சட்டவாய்ப்புகளையும் ஒன்றிய அரசின் மூலம் நிறைவேற்றுவதில் உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
அதனால்தான் முதலமைச்சரைக் கண்டதும் மகிழ்ச்சியும் நம்பிக்கையுமாக வரவேற்பளித்து, கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறார்கள் ஒக்கூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் மக்கள்.