கல்வியாளரின் மூத்திர அரசியல் !
மாட்டு மூத்திரம் குடித்தால் நோய்கள் குணமாகும் என ஒரு கிராமத்து பாட்டி சொன்னால் பரவாயில்லை; அதை பாட்டி வைத்தியம் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஏனென்றால் நம் தமிழகத்தில் பாட்டி வைத்தியம் என்பது பாரம்பரிய சிறப்பு கொண்டது ; மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்திலும் கூட இன்னமும் கிராமங்களில் தேள் கடி, பாம்புக்கடி, மற்றும் வேறு சில நோய்களுக்குப் பாட்டி வைத்தியம் கடைபிடிக்கப்படுகிறது.
இதைச் சொல்வதற்கு ஐஐடி எனப்படும் மிக உயர் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தேவையா? அம்மி கொத்த சிற்பி ஏன் என்பதைப் போல், நாட்டு வைத்திய குறிப்பு சொல்வதற்கு ஐஐடி தொழில் நுட்ப இயக்குனர் பதவியைப் பயன்படுத்துவதா என நாமும் கேள்வி கேட்கலாம்.
சென்னையில் நடந்த மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய காமகோடி என்ற ஐஐடி இயக்குனர், கோமியத்தின் சிறப்பு என்ற பெயரில் அங்கிருந்த மக்கள் முன்பு ஒரு சித்தாந்த அரசியலை பேசியிருக்கிறார். “என் தந்தை கடுமையான காய்ச்சலில் இருந்தபோது சன்னியாசி ஒருவர் கூறியபடி கோமியம் குடித்தார்; 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமானது; இந்தக் கோமியத்தில் கிருமி நாசினிகள் மற்றும் ஜீரண மண்டலத்திற்கு தேவையான பல நன்மை தரும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் ஐஐடி இயக்குனர் காமகோடி.

மாட்டு மூத்திரம் எனப்படும் கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வளர்ச்சி எதிர்ப்புப் பண்புகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் சிறந்த பத்திரிகைகள் கூட இது தொடர்பான அறிவியல் சான்றுகளை வெளியிட்டுள்ளன என்றும் அவர் பேசியிருக்கிறார்.
விவசாயத்திலும், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை வேளாண்மை மற்றும் உள்நாட்டு கால்நடை இனங்களின் பாதுகாப்பு அதிகரிக்கும் சூழலில் எனது கருத்துக்கள் கூறப்பட்டு இருக்கின்றன; இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பேசிய அவர், ஒரு பசு வைக்கோல், புல் போன்ற எளிய உணவுகளை உட்கொண்டு பால், தயிர், நெய் போன்ற உயர்ந்த பொருட்களைத் தருகிறது; இயற்கை விவசாயத்தின் அடிப்படையே மாட்டுச் சாணமும், மாட்டுக்கோமியமும்தான் என அறிவு ததும்ப பேசி இருக்கிறார்.
வயலுக்கு மாட்டு சாணம் கலந்த குப்பைகளை உரமாக இடுவதும், உழவுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளைக் கொண்டாடுவதும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் தமிழ் இனம் கடைபிடித்து வரக்கூடிய பாரம்பரிய வழக்கம்தான் என்பது அவருக்குத் தெரியாதோ?
மாட்டுச் சாணம் மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால் தான் அதைத் தண்ணீரில் கரைத்து வாசல் முன்பு தெளிப்பதை ஆண்டாண்டு காலமாக நம் தமிழினம் கடை பிடிக்கிறது என்பதும் அவருக்குத் தெரியாதா?
இதை அவர் இயல்பாகப் பேசியிருந்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இந்தப் பேச்சின் உள் நோக்கம் தான் நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது; இதே கருத்தை வட மாநிலங்களில் உள்ள டெல்லி ஐஐடி இயக்குனர் பேசவில்லை; கான்பூர் ஐஐடி இயக்குனர் பேசவில்லை; கோரக்பூர் ஐஐடி இயக்குனர் பேசவில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏனென்றால் அங்கு எல்லாம் காவி சித்தாந்ததம் பேசும் பாஜக வளர்ந்து இருக்கிறது. ஆகையால் வளர வேண்டிய இடத்தில் இதை பேச வேண்டும்; இது ஒரு மறைமுகமான அரசியல் பணி; இனி வரப்போவது தேர்தல் காலம் என்பதால் அதைக் கருத்தில் கொண்டு பேச வேண்டும் போன்ற கட்டளைகளுக்கு ஏற்ப தான் காமகோடி இயக்குனர் காமகோடி கோமிய அரசியலை பேசியிருக்கிறார்…
நமக்கெல்லாம் நன்கு தெரியும்; கடந்த மூன்று ஆண்டு காலமாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்கம் என்ற பெயரில் நடைபெறும் பிற நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து சித்தாந்த அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். அது அவருக்கு இடப்பட்ட பணி என்பது போல், தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு சார்ந்த எல்லா நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் அப்படி ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அங்கே ஒருவன் ஆட்டுவிக்கிறான்; இங்கே இவர்கள் ஆடுகிறார்கள்; அதுதான் காமகோடியின் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியில் மூத்திரமாய் நாறிக்கொண்டு இருக்கிறது.