திருச்சி SRM TRP கல்லூரியில் தமிழ் வளா்ச்சி துறை சார்பாக தமிழ் ஆட்சிமொழி பட்டிமன்றம் !
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கிய ஆட்சி மொழி சட்ட வார நிகழ்வுகள் 27 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இதன் ஒரு நிகழ்வாக ஆட்சி மொழி விழிப்புணர்வு குறித்த பட்டிமன்றமானது திருச்சி SRM TRP பொறியியல் கல்லூரியில் 23.12.2024 அன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. திருச்சி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையும் SRM TRP பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்தப் பட்டிமன்றத்தை SRM TRP பொறியியல் கல்லூரியின் முதல்வர், டாக்டர் M.சிவக்குமார் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் திரு. மு. சுந்தரேஸ்வரன் அவர்கள் நிகழ்வினை வரவேற்று நெறிப்படுத்தினார். இன்றைய இளம் தலைமுறையிடம் தமிழ் உணர்வு தழைக்கிறதா, தளர்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கலைக் காவேரி நுண் கலைக்கல்லூரியின் இசைப் பேராசிரியர் கலைச்செம்மல் முனைவர். கி.சதீஷ்குமார் அவர்கள் பட்டிமன்றத்திற்கு நடுவராக பொறுப்பேற்றிருந்தார்.
தமிழ் தழைக்கிறதே! என்ற அணியில் SRM IST கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் முனைவர். நா.அனிதா அவர்களும், தூய வளனார் கல்லூரியின் மாணவரும் வளரும் இளம் பேச்சாளராகிய செல்வன் சுஜாதா சஞ்சய்குமார் அவர்களும், SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவர் திரு. ந.இரா.சக்திவேல் அவர்களும் உரையாற்றினர்.
தமிழ் தளர்கிறதே! என்ற அணியில் SRM IST கல்லூரியின் உதவி ஆசிரியர் திரு. செ.நித்திங்குமார் அவர்களும், SRM IST கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ரவி ராகுல் அவர்களும், SRM TRP பொறியியல் கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் அவர்களும் உரையாற்றினர்.
நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அனைவருக்கும் திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிகழ்வின் நிறைவாக திருச்சி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் பணியாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் SRM TRP பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று சிறப்புச் செய்தனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.