வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் – பெரியார் கல்லூரி பேராசிரியர் பேச்சு
வள்ளுவரும், ஒளவையாரும் இன்று பேசினாலும் நம்மால் அதை உணர்ந்துகொள்ள முடியும் – பெரியார் கல்லூரி பேராசிரியர் பேச்சு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் பணிமுறை இரண்டு தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. பணிமுறை இரண்டு தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி செயலர் அருள் முனைவர் கு.அமல் ஆசியுரை வழங்கினார். அவர் தம் ஆசியுரையில், தமிழ் கற்பவர்களும் தமிழ் கற்பிப்பவர்களும் இறைவனுக்கு ஒப்பானவர்கள், இறைமைக்கு நெருங்கிய தொடர்புடைய மொழி தமிழ் என்று தாய்மொழியின் மேன்மையைப் புகழ்ந்து உரையாற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவா் ஞா. பெஸ்கி தலைமை வகித்தார். பணிமுறை இரண்டு துணைமுதல்வர் பாக்கிய செல்வரதி முன்னிலை வகித்தார்.
தமிழும் உலகச் செம்மொழிகளும் என்னும் மையப்பொருளில் திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவா் வ. நாராயண நம்பி சிறப்புரையாற்றினார்.அவர் தம் சிறப்புரையில் உலகச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபி முதலிய மொழிகளோடு தமிழ்மொழியும் தனக்கான தகுதிப்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்றார்.
மேலும் தமிழ், சீனம், அரபி போன்ற மொழிகளே பழைமைக்கும் பழைமையாய், புதுமைக்குப் புதுமையாய் இன்றும் செழிப்புடன் வளர்ந்துகொண்டிருக்கின்றன. அன்றைய புலவர்களான வள்ளுவரும், ஒளவையாரும் இன்றைய காலத்தில் பேசியிருந்தாலும் அவற்றையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும் என்பதை இலக்கிய மேற்கோள்கள் காட்டி உரையாற்றினார்.
இளங்கலை வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவன் த.கிஷோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியா்கள், இளநிலை வகுப்பு மாணவா்கள் உள்பட 202 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் பேராசிரியர் மு. ஆரோக்கிய தனராஜ் நன்றியுரையாற்றினார். தொடக்க விழா நிகழ்வுகளைத் தமிழ்ப்பேரவைப் பொறுப்பாளா்கள் முனைவா் இரா.முரளிகிருட்டிணன் மற்றும் முனைவர் போ. ஜான்சன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
– ஆதன்