“அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள் உருவாகிட உறுதியேற்போம்” – புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின பவள விழாவில் செயிண்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் பேச்சு
“அசோகச் சக்கரம் குறிக்கும் 24 மதிப்பீடுகளுடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக மாணவர்கள் உருவாகிட உறுதியேற்போம்” – புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின பவள விழாவில் செயிண்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர் பேச்சு
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினப் பெருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்குப் பள்ளியின் தாளாளர் அருள்தந்தை ம.ஆ.இஞ்ஞாசி தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்தந்தை செ. ஜோசப் கென்னடி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். சுதந்திர தினச் சிறப்பையும், எதிர்பார்ப்பையும் மையப்படுத்திய மாணவர் கஹைல் அவர்களின் உரையும், ஆசிரியர் எட்வின் அலெக்சாண்டர் அவர்களின் கவிதை வாசிக்கும் பாராட்டுக்குரியதாக அமைந்தன.
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் சிறப்பு விருந்தினராக் பங்கேற்றச் சுதந்திர தினச் சிறப்புரை வழங்கினார். அவர் தம் சிறப்புரையில், உலக அரங்கில் இந்தியா வியப்போடு நோக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் இளையோர் வளமே. அந்த இளையோர் வளத்தை சரியாகப் பண்படுத்தி உருவாக்கினால் நாளைய சமூகத்தைத் தாங்குவதற்கு நமக்கு எண்ணற்ற தூண்கள் கிடைக்கும். ஆறாம் வகுப்பில் இந்தப் பள்ளிக்குள் நுழைகிற மாணவர்கள், தேசிய கொடியின் நடுவிலே இருக்கிற அசோக சக்கரத்தின் 24 ஆரங்கள் சொல்லித் தருகிற 24 மதிப்பீடுகளையும் வாழ்க்கைக்கான மதிப்பீடுகளாக உள்வாங்கி மெருகேறப் பழக வேண்டும்.
அப்படி பண்பட்ட, வளம்மிக்க இளைஞர்களாக பள்ளியை விட்டு வெளியே வந்தால் தேசத்திற்கு அது பலமிக்க சக்தியாக மாறும். மாணவர்கள் தங்கள் பலவீனத்தைப் பலமாக்கி, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அறத்தின் வழி இயங்கி வெற்றியடையவும், இங்கு இருக்கிற ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதற்குத் துணையாக இருக்கவும் சுதந்திர தினப் பவள விழாவாகிய இந்த நாளில் நீங்கள் உறுதி எடுக்க வேண்டும் என்றஉ பேசினார். முன்னதாக மாணவர் அப்துல் ஹக்கீம் வரவேற்புரையாற்றினார். நிறைவில் மாணவர் விஷ்ணு பிரியன் நன்றியுரை வழங்கினார். மாணவர்கள் சித்தார்த் மற்றும் விஷ்ணு ரூபன் தொகுத்து வழங்கினர்.
தேச தலைவர்களின் வேடம் அணிந்த மாணவர்கள், தேசிய மாணவர் படை நாட்டு நலப்படுத்திட்டம், செஞ்சிலுவைச் சங்கத்தைச் சார்ந்த மாணவர் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள், தேசத் தலைவர்களின் முகமூடி அணிந்த மாணவர்கள், பள்ளியின் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினப் பவள விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.