மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 14 பதக்கங்களை அள்ளிய மத்திய மண்டல போலீசார் !
தமிழ்நாடு காவல்துறையினருக்கான (ஆண் மற்றும் பெண்) மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி – 2025 யில் பங்கேற்று பதக்கங்களை பெற்று மத்திய மண்டலத்திற்கு பெருமை தேடி தந்த போலீசார்களை மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 24.07.2025 முதல் 27.07.2025 வரை சென்னை ஒத்திவாக்கதில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில், தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 9 மண்டலங்களிலிருந்து சுமார் 300 ஆண், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டனர். மேலே கண்ட மாநில அளவிலான போட்டியில் மத்திய மண்டல காவல்துறை சார்பாக மொத்தம் 30 ஆண் மற்றும் பெண் காவல் ஆளினர்கள் கலந்துகொண்டார்கள். இதில் ஒட்டுமொத்த மண்டலங்களில் திருச்சி மத்திய மண்டலம் 4வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் மத்திய மண்டல காவல் ஆளிநர்கள் 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்கள். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த SSI முருகானந்தம் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களும், Gr.I 2198 சுந்தரலிங்கம் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களும், PC 2343, ரஞ்சித்குமார் ஒரு வெள்ளி பதக்கமும், திருச்சி மாவட்டம் WHC 262 சோபியா லாரன்ஸ் ஒரு தங்க பதக்கமும், திருவாரூர் மாவட்டம் HC 500 ஆனந்தன் ஒரு வெள்ளி பதக்கமும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த HC 737, சங்கீதா ஒரு வெள்ளி பதக்கமும், WPC 592 கீர்த்தனா 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களும் & கரூர் மாவட்டம் PC 1938, சிவசக்திக்குமார் ஒரு வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்கள்.
மேலும், ஆண்கள் carbine துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2வது இடமும், பெண்கள் carbine துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதலிடமும், மற்றும் ஆண்கள் revolver துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 2வது இடமும் பெற்று 3 கேடயங்களும் பரிசாக வென்றுள்ளார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு