தஞ்சை பல்கலையில் சிலை… புதுச்சேரி பூங்காவுக்கு இவரது பெயர்… கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா!
தஞ்சை பல்கலையில் சிலை… புதுச்சேரி பூங்காவுக்கு இவரது பெயர்… கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா!
கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். புதுச்சேரி கருவடிக்குப்பம் பூங்காவுக்கு அவரது பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்திருக்கிறார், புதுச்சேரி முதல்வர் என்.ரெங்கசாமி.
சென்னைப் பல்கலைக்ழகத் தமிழ் இலக்கியத் துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவினர் இணைந்து செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாள் நிகழ்வாக சென்னை பல்கலை கழக பவளவிழாக் கலையரங்கத்தில், “கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புலகம்” கருத்தரங் கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.சாமிநாதன் அவர்கள் பங்கேற்று ”கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புலகம் ” கட்டுரை தொகுப்பு நூலை வெளியிட்டு உரை யாற்றியிருக்கிறார்.
யார் இந்த தமிழ்ஒளி? தமிழ் மொழியின் பல்துறை வித்தகராய் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. பாவேந்தர் பாரதிதாசனின் சீடர். விசயரங்கன் என்ற இயற்பெயரையுடைய தமிழ் ஒளி, 1924ல் சின்னையா & செங்கேணியம்மாள் இணையருக்கு பிறந்தவர். தமிழகத்தின் குறிஞ்சிப்பாடியை அடுத்த அடுர் கிராமத்தில் பிறந்து புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டத்தில் வாழ்ந்து 1965ல் புதுச்சேரியிலே மறைந்தவர்.
”பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சரி நிகர் சமத்துவ வாழ்வியல் என கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து அந்நோக்கிலேயே தம் படைப்புகளை இந்த சமூகத்திற்கு வழங்கிய படைப்பாளியின் மேன்மையை உலகறியச் செய்வதே நோக்கம்” என்கிறார்கள் விழாக்குழுவினர். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குவின் தலைவர்களாக ’சிகரம்’ ச.செந்தில்நாதன் மற்றும் முனைவர் கோ.பழனி ஆகியோரும் மதிப்புறு தலைவராக கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களும்; துணைத்தலைவர்களாக முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா, முனைவர் ஆ.ஏகாம்பரம், கவிஞர் சு. கிருபானந்தசாமி ஆகியோர்களும்; செயலாளராக தொல்லியல் ஆய்வாளர் முனைவர் தா.ஜான்சன் வெஸ்லி அவர்களும் பொருளாளராக வே.மணி அவர்களும் பொறுப்பெடுத்துக்கொண்டு இந்நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுமைக்கும் தமிழகம் முழுவதும் நடத்தவிருக்கின்றனர்.
– இளங்கதிர்