நிலக்கடலை இறக்குமதியை நிறுத்திய இந்தோனேசியா!
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து இந்தியா உட்பட பல அயல் நாடுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 27 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதியாகும், பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் இருந்து நிலக்கடலை இறக்குமதியை இந்தோனேசியா அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் நிலக்கடலையை இறக்குமதி செய்யும் இந்திய வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27 ஆம் தேதி அன்று இந்தோனேசிய தனிமைப்படுத்தல் ஆணையம் (IQA) வெளியிடப்பட்ட அறிக்கையில், நிலக்கடலை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் உத்தரவு ஏழு நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 3 அமலுக்கு வரும் என்று, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 7 நாட்கள் வரை பில்களுடன் கூடிய சரக்குகள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், ஏற்றுமதிகள் இந்தோனேசியாவிற்குள் நுழையும்போது சில ஆய்வு மற்றும் மறு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இந்திய நிலக்கடலையில் அதிக அளவு “அஃபிளாடாக்ஸின்” என்ற விஷப்பொருள் இருப்பதால் இந்த தடையை விதிப்பதாகவும் இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது. அஃபிளாடாக்ஸின் B1 என்பது கல்லீரல் புற்றுநோய் (liver cancer) உண்டாக்கும் ஒரு முக்கிய ரசாயனம் என்று கூறப்படுகிறது.
— மு. குபேரன்