இரண்டு ஷிஃப்டுகளாக மாற்ற வேண்டும் ! கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் ! பேருந்தை சிறைப்பிடித்த மாணவர்கள் !
கல்லூரியை இரண்டு சுழற்சி முறையாக மாற்ற வலியுறுத்தியும் பேருந்துகள் கூடுதலாக இயக்க வலியுறுத்தியும் பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் கிட்டத்தட்ட 3000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், ஏழை நடுத்தர மாணவர்களின் கல்லூரி கனவுக்கு கை கொடுக்கும் அரசு கல்லூரிகளில் இதுவும் ஒன்று என்றே சொல்லலாம். திருச்சி மட்டுமின்றி அதனை சுற்றி அமைந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் இந்த கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்கள்.
கடந்த கல்வியாண்டு வரையில், காலை – மாலை என இரண்டு சுழற்சி முறையில் கல்லூரி இயங்கி வந்தது. கலைப்பாடப்பிரிவு மாணவர்கள் காலையிலும், அறிவியில் பாடப்பிரிவு மாணவர்கள் மாலையிலும் என்பதாக கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, இரண்டு சுழற்சி முறை என்றிருந்த நடைமுறையை மாற்றி ஒரே சுழற்சி முறை என்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துவிட்டது.
தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கும் குறிப்பாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கும் இந்த ஒரே சுழற்சி முறை பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சுமத்துகிறார்கள். குறிப்பாக, பழைய நடைமுறையில் மதியம் ஒரு மணிக்கு எல்லாம் காலை வகுப்புகள் முடிந்துவிடும் மதிய உணவுக்கு வீட்டிற்கோ அல்லது விடுதிக்கோ சென்றுவிட முடியும். அதேபோல, மாலை நேர வகுப்புக்கு வரும் மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பாகவே, மதிய உணவை முடித்துவிட்டுதான் உள்ளே நுழைவார்கள். மாலை கல்லூரி முடிந்து இரவு உணவுக்கு வீட்டிற்கோ, விடுதிக்கோ சென்றுவிடுவார்கள். இந்த நடைமுறையில் தற்போது சிக்கல் எழுந்திருக்கிறது. தற்போதைய நடைமுறையின்படி, இரண்டு மணிக்கு மேல்தான் வகுப்புகள் நிறைவடைகின்றன. இது, தொலைதூரங்களிலிருந்து வருகைதரும் மாணவர்களுக்கு குறிப்பாக, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்திவிடுகிறது.
அடுத்து, மிக முக்கியமாக ஒரே நேரத்தில் மூவாயிரம் மாணவர்களும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிக்கு வந்தாக வேண்டும். இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் சொந்த வாகனத்தில் கல்லூரிக்கு வந்து செல்லும் வாய்ப்பும் வசதியும் அற்றவர்கள். பொதுப்போக்குவரத்தை நம்பித்தான், அதுவும் மாணவிகள் அரசின் இலவச பேருந்து பயணத்தை நம்பிதான் தொலைதூரத்திலிருந்து அன்றாடம் கல்லூரி வந்து செல்கின்றனர். பள்ளி – கல்லூரி – வேலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப்படும் பேருந்துகளில் புளி மூட்டைகளைப்போல நெரிசலில் சிக்கித்தான் அன்றாடம் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், அதே பொதுப்போக்குவரத்தை நம்பி ஒரே நேரத்தில் மூவாயிரம் மாணவர்களும் பயணிக்க வேண்டிய சூழல் நிச்சயம் மாணவர்களுக்கு பெரும் போராட்டம்தான்.
இந்த பின்னணியில்தான், இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களையெல்லாம் மாணவர்கள் சார்பில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தும் பழையபடி இரண்டு சுழற்சி முறையாக மாற்ற முன்வராததையடுத்து, மாணவர்களை அணிதிரட்டி போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
பழையபடி, சுழற்சிமுறையை இரண்டாக மாற்ற வேண்டும் என்றும் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கல்லூரிக்கு எதிரே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சாலை மறியல் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள், இந்திய மாணவர் சங்கத்தினர்.
இந்திய மாணவர் சங்கத்தின், துவாக்குடி கிளை தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுன் ராஜேஷ், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், கிளை நிர்வாகிகள் சத்யா கீர்த்தனா, சபரி கருப்பன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
பிறகு, காவல்துறை மற்றும் போக்குவரத்து மேலாளர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் அளித்த வாக்குறுதியைடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
— அங்குசம் செய்திப்பிரிவு.