”கேட்பாரின்றி தெருவில் நிற்கின்றோம்” – அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் வேதனை !
“கலைஞர் பள்ளியில் பயின்ற நாங்கள் கேட்பாரின்றி தெருவில் நிற்கின்றோம்” வேதனை வரிகளோடு, கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன்.
“கலைஞர் பள்ளியில் பயின்ற நாங்கள் கேட்பாரின்றி தெருவில் நிற்கின்றோம்” வேதனை வரிகளோடு, கலைஞரின் நூற்றாண்டு விழா குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன்.
கலைஞரின் முத்தான சாதனைகளுள் ஒன்றான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் இன்றைய அவலநிலையை சுட்டிக்காட்டி, நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அவர். அந்த அறிக்கையில், “ஒரு வரலாற்று சகாப்தமாக வாழ்ந்து, நூறாண்டு காணும் மாண்புமிகு கலைஞரின் சாதனைகள் அளப்பரியது. அதில் முத்தாய்ப்பாய் நிகழ்த்தப்பட்டது தான் அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம். ஈராயிரம் ஆண்டாய் கருவறையிலிருந்து விலக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் கருவறைக்குள் அழைத்துச் செல்ல அறிவாசான் தந்தை பெரியார் முயற்சிக்க , அவரது மாணவர் கலைஞர் 1971-ல் சட்டமாக்கினார்.
பார்ப்பனர்களின் தொடர் சட்ட, நீதிமன்ற முட்டுக்கட்டைகளைத் தாண்டி, 2007-ல் மீண்டும் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் திறந்து, உதவித் தொகை தந்து – ஆகமங்கள், மந்திரங்கள் கற்க வைத்து தீட்சையும் பெற வைத்தார். மீண்டும் பார்ப்பனர்கள் தடுக்க, தொடர்ந்து அதிமுக ஆட்சியின் வஞ்சனையும் சேர்ந்து உரிய கல்வித் தகுதி, பயிற்சி பெற்றும் இருளில் தள்ளப்பட்டோம். நாங்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் போது பார்ப்பன அர்ச்சகர்கள் சாதிரீதியாக எங்களை அவமானப்படுத்தி கோயில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கக்கூட அனுமதிக்கவில்லை. பள்ளு, பறை, சக்கிலி, ஈன சாதியெல்லாம் வந்துட்டாங்க போன்ற கொச்சையான வார்த்தைகளைச் சொல்லி எங்களை அவமானப்படுத்தினார்கள். இச்செய்தி கலைஞரை எட்டியவுடன் உடனே ஒரு ஆணை பிறப்பித்து அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் இறைவனை வழிபட அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதான் கலைஞர்.
அடுத்து அதிமுக ஆட்சி வந்தது.அர்ச்சகர் நியமனம் கிடப்பில் போடப்பட்டது.நம்பிக்கை இழந்தோம். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தினோம். தீர்ப்பு வந்தும், பயனில்லை, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது எடப்பாடி அரசு. மீண்டும் மலர்ந்தது கலைஞரின் கொள்கை அரசு மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் தலைமையில். பெற்றோம் அர்ச்சகர் பணியை. 2000 ஆண்டுகளாக இறைவனுக்கு பூசை செய்ய விடாமல் தமிழ் சமூகத்தின் பிள்ளை, யாதவர், தேவர், கவுண்டர், செட்டியார், வன்னியர், முதலியார், ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியரை தடுத்து வந்த பார்ப்பனீய சதியை வீழ்த்தி கருவறையில் எம்மை நுழையச் செய்து கருவறைத் தீண்டாமையை, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை, கலைஞரின் வாழ்நாள் கனவை , நனவாக்கினார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து வந்த சதி- சிக்கல்களை தகர்த்தெறிந்து கருவறையில் தமிழின் – தமிழனின் குரலை ஒலிக்கச் செய்தார்.
ஆனால், மீண்டும் பார்ப்பன சதியால் அனைத்து சாதி இந்துக்களின் அர்ச்சகர் நியமனம் தற்போது கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.பர்திவாலா அமர்வின் தீர்ப்பு , தமிழக அரசின் அர்ச்சகர் நியமன விதிகளை கடந்த ஜீன், 2022-இல் ரத்து செய்தது. இன்றுவரை அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. புதிய விதியும் கொண்டு வரவில்லை. காரணமும் தெரியவில்லை. பார்ப்பனீய சதி அரசு நிர்வாகத்தில், ஆழமாய் உள்ளதாய் தெரிகிறது. யார் மேல்முறையீட்டை தடுக்கிறார்கள்? என முதல்வர் அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறையிடம் விசாரித்து அறிய வேண்டும்.
மேற்படி தீர்ப்பின் தொடர்ச்சியாக இவ்வாண்டு, மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமி நாதன் அவர்கள், தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட திருச்சி, குமார வயலூர் முருகன் கோயில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்தார். இத்தீர்ப்பிற்கும், சட்டப்படி முறையான நடவடிக்கை இல்லை.
மதுரையில் நியமிக்கப்பட்ட இரண்டு அர்ச்சகர்களின் பணி நியமனத்தை எதிர்த்த வழக்கும் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமி நாதன் அவர்கள் முன்பு ஜூன்.13 அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. கலைஞர் பிறந்த நன்நாளில் அவரால் உருவாக்கப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்திற்கு வந்துள்ள ஆபத்தை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்! “ என அறிக்கையின் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
– ஆதிரன்