வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்… ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடப்பது என்ன?

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

வாரிசு இல்லாத ரூ.250 கோடி சொத்து ! ஆட்டயப்போடும் கும்பல்… ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் நடப்பது என்ன?

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தனியார் கல்வி நிறுவனங்களுள் ஒன்று கிருஷ்ணகிரி- ஊத்தங்கரையில் செயல்பட்டுவரும் ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனம். சிறந்த தேர்ச்சி விகிதம்; மாநில அளவில் முதல் இடம் என கல்விச் செய்திகளில் தடம் பதித்த கல்வி நிறுவனம்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

”வருமான வரித்துறையில் நடைபெற்றுவரும் வழக்கை முடித்து தருவதாகக்கூறி 1.20 கோடி வரை ஏமாற்றிவிட்டார் என்று சன் டி.வி. ஏரியா நிருபர் பாபு மீது, வித்யா மந்திர் பள்ளி தாளாளர் குற்றச்சாட்டு” ; “பள்ளியின் அறக்கட்டளை நிதியிலிருந்து பல்வேறு பிரமுகர்களுக்கு கடனாக கொடுத்த 5 கோடியை திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என்று நீண்ட பட்டியலோடு பள்ளி தாளாளர் எஸ்.பி.யிடம் நேரில் புகார்”; பதிலுக்கு “பள்ளி தாளாளர் மீது கிசு கிசு பாணியிலான பாலியல் குற்றச்சாட்டு”; “பள்ளி தாளாளருக்கு ஆதரவாக உள்ளூர் மக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்”; என பொதுவெளியில் வந்திருக்கிறது விவகாரம்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

எஸ்பியிடம் புகார் மனு

3

கடந்த மே 10 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.சரோஜ் குமார் தாக்கூரை நேரில் சந்தித்து, ”ஸ்ரீவித்யா மந்திர் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை” நிதியிலிருந்து, தற்காலிக கடனாகப் பெற்ற தொகை சுமார் 5 கோடி ரூபாயை திரும்ப செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு உதவ வேண்டுமென”, 40 பேர் அடங்கிய பட்டியலோடு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் வே.சந்திரசேகரன்.

ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் வே.சந்திரசேகரன்
ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் வே.சந்திரசேகரன்
4

யாருக்கு எவ்வளவு…

முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம் 75 லட்சம்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.இ. கிருஷ்ணமூர்த்தி 45 லட்சம்; செங்குட்டுவன் 25 லட்சம்; கே.ஆர்.கே. நரசிம்மன் 3 லட்சம்; தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரேசன் 42 லட்சம்; தி.மு.க.வின் மற்றொரு ஒன்றிய செயலாளர் செல்வம் 43 லட்சம்; முன்னாள் அ.தி.மு.க. மாவட்ட செயலர் ரவிச்சந்திரன் 65 இலட்சம்; விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனியமுதன் 10 இலட்சம் என கிறுகிறுக்க வைக்கிறது அந்த பட்டியல்.

பள்ளி தாளாளரின் பின்னணி

1967 ல் நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்திலிருந்து, தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அனுமன் தீர்த்தத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்து வந்தவர் இந்த சந்திரசேகரன்.

ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனம்
ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனம்

கைகலப்பில் முடிந்த விவகாரம்

1987 வரையிலான இருபதாண்டு காலம் அரசுப்பள்ளி ஆசிரியராக, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் தலைவராக செயல்பட்டவர். ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். சக ஆசிரியர் ஒருவரது உரிமைக்கான போராட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலருக்கும் இவருக்குமான வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாகி முடிந்திருக்கிறது. இதனால், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

அரசு ஆசிரியர் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில், நண்பர்களது உதவியுடன் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளியை தொடங்குவதற்கான முயற்சியை முன்னெடுக்கிறார். அதன்பிறகு, அவர் மீதான வழக்கு விசாரணை முடிவுற்று; அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பையடுத்து 2005 இல் மீண்டும் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்து, பணி நிறைவு செய்கிறார். அரசுப்பணியை அவர் நிறைவு செய்திருந்தாலும், அன்று முதல் இன்று வரையில் ஸ்ரீவித்யா மந்திர் குழும கல்வி நிறுவனங்களை ஒற்றை ஆளாய் நின்று இன்றுவரை நிர்வகித்து வருகிறார்.

கிறுகிறுக்க வைத்த பட்டியல்
கிறுகிறுக்க வைத்த பட்டியல்

கல்வித்துறையில் தனித்த அடையாளம்

கடந்த 20 ஆண்டுகளில் எப்படியும் பத்துமுறைக்கு மேல் மாநில அளவிலான முதல் மூன்று இடங்களுள் ஒன்று; மாவட்டத்தில் எப்போதும் முதலிடம்; தற்போது +2வில் பள்ளியின் சராசரி 600-க்கு 521 என கல்வித்துறையில் தனித்த அடையாளத்தை பெற்ற கல்வி நிறுவனமாக ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்.
அவர் ஓ.சி.யில் ஒன்றும் பள்ளி நடத்த வில்லை. பொதுவில் தனியார் பள்ளிகளுக்கே உரிய நடைமுறையின்படி, கல்வி கட்டணத்தை வசூலித்துத்தான் பள்ளியை நடத்தியிருக்கிறார். என்ன ஒரு வித்தியாசம், வரும் வருமானத்தை தனது பாக்கெட்டிலும் தன் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலும் போட்டுக் கொள்ளாமல்; பொதுவில் பள்ளியின் பெயரிலேயே அறக்கட்டளை ஆரம்பித்து சொத்தை பாதுகாத்து வளர்த்தி ருக்கிறார், தாளாளர் சந்திரசேகரன்.

கல்வி நிலையமே தனது குடும்பம்

ஆரம்பத்தில், நண்பர்களின் உதவியோடு தொடங்கப்பட்ட பள்ளி என்பதால், பள்ளி நிர்வாகத்திலிருந்து தன் குடும்பத்தாரை ஒதுக்கியே வைத்திருக்கிறார் சந்திரசேகரன். இன்னும் சொல்லப் போனால், மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப பந்தத்திலிருந்து விலகி, ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனத்தையே தன் குடும்பமாக பாவித்து வருகிறார்.

பள்ளி தாளாளர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
பள்ளி தாளாளர் சந்திரசேகரனுக்கு ஆதரவாக உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

பொதுசேவையில் ஈடுபாடு

மிக முக்கியமாக, அரசு பாலிடெக்னிக் அமைய பத்து ஏக்கர் நிலம்; அரசு மருத்துவமனைக்கு 4 ஏக்கர் நிலம் என பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான நிலத்தை அரசுக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். ஊத்தங்கரை அரசுப்பள்ளிக்கு ஒரு கோடி செலவில் நவீன நூலகம்; மின் மயானம் அமைக்க 75 இலட்சம் நிதியுதவி; அரசு மருத்துவமனைக்கு வைப்பு நிதியாக ஒரு கோடி செலுத்தி, அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டி வருவாயிலிருந்து மருத்துவமனையின் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு செலவிட்டுக் கொள்வதற்கான ஏற்பாடு என கல்வி நிறுவனங்கள் வழியே சம்பாதித்த சொத்தில் கணிசமான கோடிகளை ஊத்தங்கரை பகுதியின் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கிறார், சந்திரசேகரன். இதுதவிர, கல்வி நிறுவனத்தை தொடங் கிய காலம் தொட்டு, நண்பர்களாக பழகியவர்கள், பள்ளிக்கு பல் வேறு வழிகளில் உதவியவர்கள், பள்ளிக்காக உழைப்பவர்கள் என சாதி, மதம் கடந்து அரசியல் கட்சி என்ற பாரபட்சமின்றி பல்வேறு வகையில் அவர்களுக்கு உதவிகளை செய்து வந்துள்ளார். மகளின் திருமணத்திற்கு, மகனின் மேற்படிப்புக்கு, மனைவியின் மருத்துவ செலவுக்கு என தேவையின் அவசியம் கருதி இலட்சங்களில் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். தேர்தல் கால செலவுகளுக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வட்டியில்லா கடனாக பல இலட்சங்களை வாரியிறைத்திருக்கிறார்.

உமாபதி
உமாபதி

எல்லாமே, பணம் பண்ணும் பாடு !

தனக்குப் பின்னர், தடுமாற்றமின்றி கல்வி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று விரும்பிய, சந்திரசேகரன் அதற்குரிய ஏற்பாடாக ”மூன் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்” என்றொரு டிரஸ்ட்டை புதிதாக உருவாக்க நினைக்கிறார். கல்வி நிறுவனத்தின் இலாபமாக கிடைக்கும் நிதி, கடனாக கொடுத்து பல்வேறு நபர்களிடமிருந்து திரும்ப வரவேண்டிய 5 கோடி நிதி உள்ளிட்டு அனைத்தையும் இந்த டிரஸ்டின் கட்டுப்பாட்டில் ”நிரந்தர வைப்பு நிதியாக” வரவு வைத்து இதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயிலிருந்து ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்.

இதில் கவனிக்கத்தக்க விசயம் என்னவெனில், இந்த வைப்பு நிதியின் வட்டிப் பணத்தை மட்டுமே கையாள முடியும். அதுவும் ஆசிரியர்களுக்கான சம்பளம்; மாணவர் களுக்கான கல்வி உதவித்தொகை; மாணவர்களுக்கான பரிசு பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே இந்தத்தொகையும் செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளோடுதான் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, இவரது நண்பரும் பத்திர எழுத்தருமான ஆர்.ஆர்.சுப்பிரமணி என்பவரிடம் இதற்கான பொறுப்பை ஒப்படைக்கிறார். சட்ட நடைமுறைக்காக, டிரஸ்டில் சந்திரசேகர னை தாண்டி குறைந்த பட்சம் இன்னும் இருவர் தேவை என்றிருக்கிறார் ஆர்.ஆர்.சுப்பிரமணி. தன் மனைவியையோ, தன் மகனையோ கை நீட்டவில்லை. மாறாக, தனது கல்வி நிறுவனத்தின் நம்பகமான கணக்காளரான அமுதா என்பவரையும்; டிரைவரான ராஜேஷ் என்பவரையும் டிரஸ்டியாக சேர்த்து ”மூன் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்” ஐ பதிவு செய்கிறார்.

சுப்ரமணி
சுப்ரமணி

பிரச்சினையின் முதற் கண்ணி!

இந்த தகவல், ஆர்.ஆர். சுப்பிரமணி வழியே, சன் டி.வி. நிருபர் பாபு மற்றும் சங்கர் கஃபே உரிமையாளர் உமாபதி ஆகியோரின் கவனத்திற்கு போகிறது. ”ஓட்டல் உரிமையாளர்; முன்னணி தொலைக்காட்சியின் நிருபர்; பிரபலமான பத்திர எழுத்தாளர் என நாமெல்லாம் இருக்கும்பொழுது, ஒரு டிரைவரும் பொம் பளயும் டிரஸ்ட நடத்துவதா? 250 கோடி சொத்தை அவர்கள் கையாள்வதா?” என்று அவர்களுக்குள் காரசார விவாதங்கள் நடை பெற்றதாகவும்; இதன்பின்னரே, அடுத்தடுத்து பள்ளி தாளாளர் மீது கிசுகிசு பாணியிலான குற்றச் சாட்டுகள் அவதூறுகளாக சமூக ஊடகங்களில் வெளியாகத்தொடங்கியது, என்கிறார்கள். பாபு, ஆர்.ஆர்.சுப்ரமணி, உமாபதி மட்டுமில்லை; இவர்களுக்கும் அப்பால், வாரிசு இல்லாத 250 கோடி சொத்தை ஆட்டையப்போட பினந்திண்ணி கழுகைப்போல குறிவைத்து ஒரு கும்பலே அலைவதாக சொல்கிறார்கள். அதில், தாளாளருக்கு மிகவும் பரிட்சயமான, அவரது நெருங்கிய நட்பிலுள்ள சில கருப்பாடுகளும் அடக்கம் என்கிறார்கள்.

யார் இந்த பாபு-?

”இவ்வளவு பிரச்சி னைக்கும் மூலகாரணம் பாபுதான். தாளாளர் சந்திரசேகரனின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தவர்தான் இந்த பாபு. வயது முதிர்வின் காரணமாக, அரசு அலுவலங்களுக்கு அலைய முடியாத நிலையில், கல்வி நிறுவனம் தொடர்பான வேலைகளை பாபு தான் செய்துகொடுப்பார். அந்த நம்பிக்கையில்தான், தேர்தல் சமயத்தில் ஆசிரியர்களின் சம்பளத்திற்காக வைத்திருந்த 2.70 கோடி ரூபாயைக் கைப்பற்றி வருமான வரித்துறை பதிந்த வழக்கை கையாளும் பொறுப்பை பாபுவிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த வழக்கை முடித்து தருவதாகக்கூறி, சிறுக சிறுக 1.12 கோடி வரையில் ஆட்டைய போட்டிருக்கிறார், பாபு. வருடங்கள் ஓடியும் வழக்கு முடிந்த பாடில்லை என நெருக்கிக் கேட்கும் பொழுதுதான், வருமான வரித்துறை வழக்கை வைத்து பாபு வாரி சுருட்டியது தாளாளருக்குப் புரிந்தி ருக்கிறது. இதனால், பாபு மீது போலீசில் மோசடி புகார் கொடுத்தார் சந்திரசேகரன்.

சன்டிவி நிருபர் பாபு
சன்டிவி நிருபர் பாபு

தாளாளருக்கு எதிராக பாபு

மோசடிப்புகார் ஒருபுறமிருக்க; சந்திர சேகரனிடம் தனிப்பட்ட முறையில் பாபு கடனாக மட்டுமே 32 இலட்சம் வாங்கி யிருக்கிறார். போலீசில் கொடுத்த 40 பேர் பெயர் பட்டியலில் பாபு பெயரும் இருக்கிறது. வகையாய் சிக்கிவிட்டோம்னு நொந்து போய் பாபு புலம்பிட்டிருந்த நேரத்துல தான், மூன் டிரஸ்ட் தொடர்பான தகவல் அவருக்கு வந்து சேர்கிறது. இதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்த நினைத்த பாபு, தாளாளருக்கு எதிரான நாலாந்தர வேலையில் மும்மரமாக இறங்கிவிட்டார்.” என்கிறார், இவ்விவகாரங்களைப் பற்றி நன்கறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர்.

சன்டிவி நிருபர் பாபுவின் பண்ணை வீடு
சன்டிவி நிருபர் பாபுவின் பண்ணை வீடு

ஏரியா நிருபருக்கு இவ்வளவு சொத்தா?

”மாசம் அஞ்சாயிரம், ஆறாயிரம் சம்பளம் வாங்குற ஏரியா ரிப்போர்ட்டர் இலட்சக் கணக்குல செலவு செஞ்சி மூனு மாடி பங்களா வீடு கட்ட முடியுமா? பாபு கட்டியிருக்க பங்களா டைப் வீட்ல இன்டீரியருக்கு மட்டுமே 25 இலட்சம் வரை செலவு செஞ்சிருக்காரு” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத பாபுவின் நண்பர் ஒருவர்.
“எங்கள் மாவட்டத்திற்கு அவர் நிறைய செய்திருக்கிறார். ஆண்டவன் சாட்சியாக நான் என்றைக்கும் தவறான கருத்துக்களை சொன்ன தில்லை” என தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார், ஆர்.ஆர்.சுப்பிரமணியன். ”நான் பணிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் அந்தக் கல்வி நிறுவனம் மீது எந்தவொரு புகாரும் இல்லை.” என்கிறார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி.

 

சன்டிவி நிருபர் பாபுவின் அடுத்தடுத்த மூன்றடுக்கு மாடி வீடுகள்
சன்டிவி நிருபர் பாபுவின் அடுத்தடுத்த மூன்றடுக்கு மாடி வீடுகள்

இந்த வயதிலுமா பாலியல் -குற்றச்சாட்டு-?

ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி தாளாளர் சந்திர சேகரனுக்கு இப்போது வயது 76. வயது முதிர்வையும் தாண்டி, மூன்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள்; என பிறர் உதவியின்றி ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாத அந்த முதியவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு! ஓர் ஆயிரமாக இருந்தாலும், நண்பர் களின் பங்களிப்போடு கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் என்றைக்கும் தனது குடும்பத்தின் சொத்தாக மாறிவிடக் கூடாதென்பதற்காகவே கல்வி நிறுவனத்திலிருந்து குடும்பத்தை ஒதுக்கி வைத்தவருக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்! இன்னும் சொல்லப்போனால், இறப்பிற்கு பின்னர், அவரது சடலம்கூட அவரது குடும்பத்திற்கு சொந்தமானதல்ல. அதையும் மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்காக; பொதுப் பயன்பாட்டுக்காக தானம் செய்து விட்டார், சந்திரசேகரன்.

நிருபர் போர்வையில் – “புரோக்கர் பாபு”

சன் டி.வி.யின் ஏரியா நிருபர் பாபு, ஊத்தங்கரையில் ஏற்கெனவே இவருக்கு மூன்றடுக்கு மாடி குடியிருப்பு இருக்கும் நிலையில், தற்போது நவீன திரையரங்குடன் கூடிய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றையும் புதிதாக கட்டி முடித்திருக்கிறார். படுக்கையறை உள் அலங்காரத்திற்கு மட்டும் சுளையாக 25 இலட்சத்தை செலவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
இதுவல்லாமல், இவருக்கு சொந்தமாக மூன்று கார்கள் வேறு இருக்கின்றதாம். சன் டி.வி. ரிப்போர்ட்டர் என்ற அடையாளத்தை வைத்து ”எனக்கு பல அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் தெரியும். அவர்களை வைத்து வேலை வாங்கித் தருகிறேன்” என்று உள்ளூரில் நிறையப் பேரிடம் பணம் கறந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சாமான்யன்களிடம் மட்டுமல்ல; சன் டி.வி.யில் பணிபுரியும் சக பணியாளர்களிடம்கூட தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறாராம் இந்த ”புரோக்கர் பாபு”!

இது குறித்து கருத்து கேட்க, அங்குசம் சார்பில் நிருபர் பாபுவை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். அவர்மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு ”கருத்துச் சொல்ல எதுவுமில்லை; போலீசில் புகார் கொடுத்துவிட்டார். போலீசிடமும் நீதிமன்றத்திலும் பதில் சொல்லிக்கொள்கிறேன்.” என்பதோடு முடித்துக்கொண்டார்.

தாளாளர் மீதான, குறிப்பான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவை தொடர்பான ஆதாரங்களையும் கேட்டோம். ”நானே திரும்ப அழைக்கிறேன்” என்று கூறி, அவசரம் அவசரமாக இணைப்பைத் துண்டித்தவர். இதழ் அச்சாகும் வரையில் திரும்பத் தொடர்புகொள்ளவே இல்லை. ”சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும்” என்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வந்து தொலைத்தது.

-எம்.வடிவேல், வே.தினகரன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.