வெளிநாட்டுக்கு படிக்க போறீங்களா ? இதை தெரிஞ்சிகோங்க…
பொருளாதாரத்தில் நடுத்தர நிலையிலோ, அதற்குக் கீழே இருக்கும் குடும்பப் பின்னணியில் இருந்து மேற்கு நாடுகளுக்கு மேற்படிப்புப் படிக்க வருவோருக்கு ஒரு சில பரிந்துரைகள் :
- இளநிலையில் நீங்கள் படித்த முடித்த துறையில் ஒரு சில ஆண்டுகள் சொந்த நாட்டில் பணி அனுபவம் பெற்றபின் வருவது சாலச் சிறந்தது. படிப்பின் ஒரு பகுதியான Graduate Internship -க்கு கூட இந்தப் பணி அனுபவம் கை கொடுக்கும். அதே போல, படித்து முடித்த பின் வேலை தேடும் போதும் இது உதவும்.
- கல்விக் கட்டணம் தவிர்த்து, தங்கும் இடம், உணவு, சொந்தப் பராமரிப்பு என ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகை செலவாகும். இந்தியப் பணத்தில் தோராயமாக ரூ.75000 (ஒரு மாதத்திற்கு). நமது தேவையைப் பொறுத்து, இது சற்றுக் கூடலாம், குறையலாம்.
- படிப்பு விசாவில் இருப்போர் – குறிப்பிட்ட மணி நேரம் வரை பகுதி நேரமாக பணிபுரிய அனுமதி கிடைக்கும். ஆனால், பகுதி நேர வேலைகள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே, உங்கள் குடும்பப் பொருளாதாரச் சூழல் இதற்கு ஒத்துழைக்குமா எனத் திட்டமிடுங்கள்.
- படித்த முடித்த பின், வேலைகள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வந்தாலும், தற்காலச் சூழலில் – பணியைப் பெறுவதற்கான போட்டிகள் அதிகம். ஒரு வேளை, பணி கிடைக்காதச் சூழலில் – உங்கள் குடும்பப் பொருளாதாரச் சூழல் – தாங்கள் பெற்ற கல்விக் கடனைத் திரும்ப அடைக்கும் நிதி நிலையில் உள்ளதா எனவும் கருத்தில் கொள்க. திரும்ப பத்தி எண் ஒன்றை வாசிக்க.
- படிக்க வந்து விட்டால், படிப்பில் அதிக சிரத்தை எடுங்கள். பாடங்களில் அதிக கவனம் செலுத்துவது, புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுவது, ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது, Dissertation -ல் நல்ல project செய்வது எனத் தீவிரமாகச் செயல்படுங்கள். ஏற்கனவே பணி அனுபவம் இருப்பது இதற்கு உதவும்.
- The grass is always greener on the other side (இக்கரைக்கு அக்கரை பச்சை) என்பதைக் கருத்தில் கொள்க. படித்து முடித்த பின் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள, பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைக் எண்ணத்தில் கொண்டு, அதற்குத் தங்களைத் தயாரித்துக் கொண்டு பயணியுங்கள்.
இந்தப் பரிந்துரைகள் நாம் கண்கூடாகப் பார்க்கும் சூழலைக் கொண்டு எழுதப்பட்டது. எனவே, மேற்படிப்புக்குச் செல்லும் நாட்டைப் பொறுத்து சூழல் மாறுபடலாம். அந்தந்த நாடுகளில் படித்த முடித்த பின் உள்ளோரைத் தொடர்பு கொண்டு மேலும் உள்ளீடுகளைப் பெறுங்கள்.
“Education is the most powerful weapon which you can use to change the world” – Nelson Mandela
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு
அயர்லாந்து