திருச்சி மேற்கு RTO அலுவலகத்தில் திடீர் ரெய்டு ! இலஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி !
திருச்சி மேற்கு மோட்டார் வாகன மண்டல (RTO) அலுவலகத்தில், திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தி வருகிறார்கள். டிரைவிங் லைசன்ஸ் தொடங்கி புதிய வாகனத்திற்கான பதிவுகள் வரையில் அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். பொதுவில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு இலஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், திருச்சி மேற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தங்களது கடமையை செய்து தருவதற்கு புரோக்கர்கள் வழியே கறார் இலஞ்சம் வசூலிப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த அதிரடியை நடத்தியிருக்கிறார்கள்.
திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பாலமுருகன் உள்ளிட்ட விஜிலென்ஸ் குழுவினர், ஆய்வுக்குழு அலுவலர் ராமலஷ்மி முன்னிலையில் இந்த அதிரடி ஆய்வை நடத்தி வருகிறார்கள். அதிரடி ரெய்டில், அலுவலகத்தின் நான்கு இடங்களிலிருந்தும் அங்கிருந்த இரண்டு புரோக்கர்களிடமிருந்தும் ரூபாய் 1,06,000/-ஐ இலஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள்.
சோதனையின்போது, பணியில் இருந்த ஆர்.டி.ஓ. மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோரிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள், இலஞ்ச ஒழிப்பு போலீசார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.