வேட்டி சேலையை திருடியதால், மானமும் போச்சு வேலையும் போச்சு சிக்கலில் அதிகாரி !
திடீர் பணக்காரன் அம்பலமான ரகசியம்….
தமிழகத்தில் பரவலாக, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம். திருப்பமாக, ரேஷன் வேஷ்டி – சேலையை கடத்தியதாக ஒரு கும்பலை கைது செய்திருக்கிறார்கள் மதுரை போலீசார். இதில் காலக்கொடுமை என்னவெனில், இந்த 50-50 திட்டத்தின் ஆபரேசன் ஹெட் சரவணன், அதே வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையாளர் என்பதுதான்.
பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்காக, மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலக குடோனில் 50 இலட்சம் மதிப்புள்ள வேஷ்டி – சேலைகளை இருப்பு வைத்திருந்தனர். திடீரென ஒருநாள், இருப்பில் இருந்து 125 பண்டல்கள் மாயமாகின. வேஷ்டி – சேலை களவுப்போனதையடுத்து, வடக்கு வட்டாட்சியர் சிவக்குமார், தல்லாகுளம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் புக்யா சினேக பிரியா மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி ஆணையர் சம்பத் தலைமையில், ஆய்வாளர்கள் பாலமுருகன், சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசு மோப்ப நாய் உதவியுடன் கடத்தல் காரர்கள் பதுக்கியிருந்த பண்டல்களை கண்டறிந்தனர்.
இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்த சர்வேயர் சரவணன் தலைமறைவாகி விட, 50-50 ஆஃபரில் கள்ளத்தனமாக அரசின் இலவச வேஷ்டி – சேலையோடு வம்பையும் விலைக்கு வாங்கிய வியாபாரிகள் சுல்தான் அலாவுதீன், சாகுல் ஹமீது, இப்ராஹிம்ஷா ஆகியோரை ஏ.சி. சம்பத் தலைமையிலான தனிப்படையினர் கொத்தாக தூக்கியுள்ளனர்.

மேலும், பண்டல்களை கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு நான்கு சக்கர சரக்குந்துகளையும் அதன் ஓட்டுநர்களான குமரன், மணிகண்டன் ஆகியோரையும் கைது செய்தனர். தலைமறைவான சர்வேயர் சரவணன், வழக்கறிஞர் மூலமாக முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. திருச்சி, தஞ்சை, சென்னை என போக்கு காட்டிய சர்வேயர் சரவணனையும் ஒருவழியாக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
”வியாபாரிகளிடமிருந்து 3 இலட்சம் பணம் சரவணன் கணக்கிற்கு கைமாறியிருப்பதை கண்டறிந்துள்ளோம். மொத்தம் 4 இலட்சத்து இரண்டாயிரம் ரூபாய் வியாபாரிகளிடமிருந்து வாங்கியிருப்பதாக எங்களது விசாரணையில் ஒப்புக் கொண்டிருக்கிறார். வேறு அதிகாரிகள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.” என்கிறார், ஏ.சி. சம்பத். “பழைய துணிகள் வாங்குவதை நிறுத்தி 15 வருடங்கள் ஆகிவிட்டது.
பழைய பட்டு புடவைகளின் ஜரிகைகளை வாங்கி விற்கும் வியாபாரத்துக்கு மாறிவிட்டேன். பணத்துக்கு ஆசைப்பட்டு அரசாங்க பொருளை திருட்டுத் தனமாக வாங்கியது தவறுதான்.” என்கிறார்,

நெல்பேட்டையைச் சேர்ந்த பழைய துணி வியாபாரிகள் சங்க முன்னாள் துணைத்தலைவர் அனிபா. ”அன்றாடம் அழுக்குத் துணியில் புரள்வதைப்போல இருந்தாலும், திடீரென ஒருநாள் கார், பங்களா என செட்டில் ஆகிவிடுவார்கள். அதன் இரகசியம் இதுதான் போல..” என நக்கலாக சிரிக்கிறார்கள், நெல்பேட்டை ஏரியா வாசிகள் சிலர். ”குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்ற எம்.ஜி.ஆர். பாடல்தான் நினைவுக்கு வருகிறது!

வேட்டி சேலையை திருடியதால், மானமும் போச்சு வேலையும் போச்சு !
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சர்வேயர் சரவணன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அரசு நடத்தை விதி எண் 1973-இன் படி நிரந்தர பணிநீக்கம் செய்யப்பபடுவதாக உத்தரவை பிறப்பித்து அதிரடி காட்டியிருக்கிறார், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
– ஷாகுல், படங்கள் : ஆனந்த்