அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சுந்தரம் பாட்டியும் … மையல் கொண்ட மாங்காய்த்துண்டுகளும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நினைவை விட்டு அகலாத அந்த நாளின் மாலைப்பொழுதொன்றில்,  நானும் நண்பர் ஆல்வினும், பிலிப்ஸும் கையில் டீயும் வாயில் அரட்டையுமாக இருந்தபோது, எங்களது பார்வையில் அழகாக தெரிந்தார்கள் பள்ளி சீருடையில் இருந்த சிறுவனும் அவனது கையில் மிளகாய்த்தூள் வர்ணம் தூவிய மாங்காய் துண்டுகளும்!

அந்தச் சிறுவனை வழிமறித்து, “எங்கடா இந்த மாங்காயை வாங்கின” என்று கேட்டதுதான் தாமதம். ஏதோ, ஹெல்மெட் அணியாமல் போலீசிடம் மாட்டிக்கொண்டவனை போல வெலவெலத்து போனவன், “அண்ணே ஸ்கூல் வாசல்ல விக்கிறாங்க” னு சிட்டாய் பறந்து போனான்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நானும் ஆல்வினும் பிலிப்ஸூம் நாங்கள் பள்ளி மாணவர்களாக இருந்த சமயத்தில் அடித்த லூட்டிகளை அசைபோட்டபடியே, அச்சிறுவன் சொன்ன இடத்தில் ஆஜர் ஆனோம். பார்த்த உடனே ஆர்வம் கொள்ள வைத்த அந்த மாங்காய்த் துண்டுகளை கடைவிரித்திருந்தாள் சுந்தரம் பாட்டி. தேன் கூட்டை மொய்த்து நிற்கும் தேனீக்களைப் போலவே, சுந்தரம் பாட்டியைச் சுற்றி நின்றிருந்தார்கள் பள்ளி மாணவர்கள்.

நேற்றிரவு பிறந்த பச்சிளங்குழந்தை போலவே, அவ்வளவு அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன எச்சிலூறும் குலாப் ஜாமூன்கள். கண்கவரும் பல வண்ணங்களில், தினுசு தினுசான தின்பண்டங்களை கடைவிரித்திருந்த போதிலும், என் பார்வை என்னவோ அந்த மாங்காய்த் துண்டின் மீதுதான் மையம் கொண்டிருந்தது. அந்த மாங்காய்த்துண்டுகளின் பால் நான் மையல் கொண்டேன் என்றே சொல்லலாம்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பிலிப்ஸ் “மாங்காய் எவ்வளவுன்னு கேளுடா”னு அவனை விசாரிக்க சொல்லிவிட்டு பாக்கெட்டை துலாவினேன்.  “ஒரு கீத்து ஒரு ரூபாய் தான்யா”என்றாள் சுந்தரம் பாட்டி. இந்தமுறை மூவரும் கோரஸாகவே கேட்டோம். சிரித்துக் கொண்டு மீண்டும் அதே பதிலை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சுந்தரம் பாட்டி,  “ஒரு ரூபாய் தான்யா, அப்பேல இருந்து ஒரு ரூபாய்க்கு தான் விக்கிறேன்”..

ஆச்சர்யம் அதோடு நிற்கவில்லை. பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாயை நீட்டினேன். இதற்கு பூராவும் மாங்காய்த் துண்டுகளை தாருங்கள் என்றேன். அவளோ, 25 கீத்தாக எங்கள் கைகளில் திணித்தாள்.

மாங்காய்த்துண்டுகளை மெல்ல அசைபோட்டபடியே, பாட்டியிடம் பேச்சை தொடர்ந்தோம்.  “ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே பாட்டி”என்றேன் நான்.

“இந்த புள்ளைங்க எல்லாம் என்னோட பேர பசங்கய்யா …  இப்ப பாரு மொத்தம் எனக்கு 50 பேரப்பசங்க இருக்காங்க.”னு பட்டென்று வந்தது பதில் பாட்டியிடமிருந்து.

மனிதர்களை பயன்படுத்திக் கொண்டு பணத்தை நேசிக்கும் இந்த காலகட்டத்தில், பணத்தை பயன்படுத்திக் கொண்டு மனிதர்களை நேசிக்கும் சுந்தரம் பாட்டியை பற்றிய கதைதான் வீட்டிலும் தொடர்ந்தது.

மறுநாள், மீண்டும் சுந்தரம் பாட்டியிடம் சென்றேன்.

“எப்படி பாட்டி ஒரு ரூபாய்க்கு விக்கிறீங்க கட்டுபடி ஆகுதா” னு கேட்டேன். அப்படியே, இந்த வியாபாரத்துக்கு வந்த கதையையும் கேட்டேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சுந்தரம் பாட்டிபள்ளிக்கூடத்துக்கே முதல் ஆளாய், காலை ஐந்து மணிக்கே வந்து சேர்ந்துவிடுவாள் சுந்தரம் பாட்டி. திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் கடை போட ஆரம்பித்து நாற்பது வருசமாச்சு. அவங்க வீட்டுக்காரர் கலியபெருமாள் ஆட்டோ ஓட்டிட்டி இருந்தவரு. இப்போ உயிரோட இல்லை. அதுக்கு முன்னாடி, அவரு பக்கவாதத்தால பாதிக்கப்பட்ட, மொத்த குடும்ப பொறுப்பும் சுந்தரம் பாட்டி மேல விழுந்திருக்கு.

சுந்தரம் பாட்டிக்கு மொத்தம் மூனு பசங்க. ரெண்டு பொன்னுங்க. அதுல ஒரு பையன் தவறிட்டாரு. மிச்ச பசங்க ரெண்டு பேரும் அப்பா மாதிரி ஆட்டோதான் ஓட்டுறாங்க.

வீட்டுக்காரர் இறந்தபிறகும், ஒற்றை ஆளாய் இருந்து தன் பிள்ளைகளை நல்லமுறையில் கரை சேர்த்திருக்கிறாள் சுந்தரம் பாட்டி.

”அவர் இறந்த பிற்பாடு வந்து பாதர்கிட்ட அனுமதி கேட்டேன். உடனே அவங்களும் அனுமதி கொடுத்துட்டாங்க. முதல்ல லூதர் சர்ச் வாசலில் கடை போட்டேன். அதுக்கப்புறம் இங்க கடை போடுறேன். ஒவ்வொரு பாதர் மாறும்பொழுதும் அவங்க கிட்ட போய் இது மாதிரி நான் இங்கே கடை போடுறேன்னு சொல்லிடுவேன். ஒருத்தர் கூட, என்னை கடை போட வேணாம்னு சொன்னது கிடையாது.” என்றபோதே, கண்கள் கசிய தொடங்கியது, சுந்தரம் பாட்டிக்கு.

“ நாற்பது வருஷமா ஒரு மாங்காய் கீத்து ஒரு ரூபாய்க்கு தான்யா விக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் விப்பேன். எவ்வளவு விலை ஏறினாலும் இறங்கினாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லையா” என்றபோது, என்னையறியாமல் என் கண்களும் ஈரமாகியிருந்தன.

சுந்தரம் பாட்டி
சுந்தரம் பாட்டி

“எங்கே வாழ்கிறது மனிதம் என்று கேட்பவர்களுக்கு இதோ இங்கே வாழ்கிறாள் சுந்தரம் பாட்டி” யென்று கை காட்ட வேண்டுமென்றே தோன்றியது, அப்போது.

பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த மாங்காய் கீற்றை மறந்தே போனேன். எல்லாம் விற்றுத் தீர்ந்திருந்தது. சரி குட்டி குலாப் ஜாமூனை சுவைப்போம் என்று கேட்டு வாங்கினேன். அதற்கும் விலை ஒரு ரூபாய்தான்யா என்றாள் முகமலர சிரித்துக் கொண்டே. இப்போதும் நான் கொடுத்த ஐந்து ரூபாய்க்கு ஒரு குலாப் ஜாமூனை சேர்த்தே கொடுத்துவிட்டு, ”ரெண்டு பேரு இருக்கீங்க. ஆளுக்கு மூனா சாப்பிடுங்கய்யா” என்றாள், சுந்தரம் பாட்டி.

”என் பேரப்புள்ளைங்களும் இந்த ஸ்கூல்லதான்யா படிக்குதுங்க…”னு அவள் ஆர்வமாய் சொல்ல … ”இப்பொழுது முதல் உனக்கு ஒரு புதுசா பேரன் கிடைச்டிருக்கான்னு வச்சிக்கோ. அது நான்தான்”னு சொன்னபோது, சுந்தரம் பாட்டியிடமிருந்து பூத்த அந்த மெல்லிய புன்னகை என் வாழ்வில் என்றும் மறக்காத நினைவுகளை சூழ் கொண்டிருந்தது.

 

   –  சுஜாதா.சஞ்சய் குமார்,  இயற்பியல் துறை,

       தூய வளனார் கல்லூரி, திருச்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.