திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் – எம்.பி. கனிமொழி பேச்சு !
கோவில்பட்டியில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளி விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அந்நிகழ்வில் அமைச்சர் மற்றும் எம்.பி.க்களுக்கு தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்ததை கண்டு அதனை மாற்றியமைத்து பார்வையாளர்களுக்கு போடப்பட்டிருப்பதைப்போலவே விருந்தினர்களுக்குமான இருக்கைகளையும் மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மஹாலில் அமர் சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. இதை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி எட்டயபுரம் ரோடு கதிரேசன் கோவில் சாலை வழியாக மண்டபத்தை வந்தடைந்தது. மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் பின்னர் கனிமொழி எம்பி பேசுகையில் மாற்றுத்திறன் படைத்த ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு என்பதை உணர்ந்துதான் மாற்றுத்திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு என்று ஒரு துறையை உருவாக்கி, அந்தத் துறையை அவர் கையில் வைத்துக் கொண்டார்.
அதேபோன்றுதான் திராவிட மாடல் அரசு நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் மாற்றுத்திறனாளி துறையை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுகவும், திமுக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழா மேடைக்கு கனிமொழி வந்த போது மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எம்பி மற்றும் அமைச்சருக்கு தனி இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்த கனிமொழி எம்.பி. அனைவருக்கும் ஒரே மாதிரியான ஷேர் போட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அந்த இருக்கைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான இருக்கைகள் அமைக்கப்பட்டது.
— மணிபாரதி.