இரண்டு சர்வேயர் அடுத்தடுத்து ஒரே நாளில் லஞ்சம் வாங்கும் போது கைது !
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததற்கும், FMB கிடைக்க ஆவண செய்வதற்கும், திருச்சி, துறையூர் தாலுகா பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நிலஅளவர் ராஜா வயது 35/2025, த/பெ.பெரியண்ணன் என்பவரை அணுகியபோது கடந்த 10.07.2025ஆம் தேதி ராஜா ரூ.5,000/-ம் கையூட்டு கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக 11.07.2025ஆம் தேதி முருகேசன் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025ஆம் தேதி காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது பொன்னுசங்கம்பட்டி கிராமத்திற்குரிய உரிமம் பெற்ற நில அளவர் ராஜா லஞ்சம் பணம் ரூ.5,000/-த்தை முருகேசனிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, துறையூர் தாலுக்கா குறுவட்ட அளவர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா @ ராபியதுல் பஸ்ரியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை எண். 4ஐ தனது கணவர் பெயரில் வாங்கி அதை சாத்தனூர் பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தனிப்பட்டா வேண்டி திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தில் நிலஅளவை உதவி ஆய்வாளர் தையல்நாயகி என்பவரை கடந்த 10.07.2025ஆம் தேதி ராபியா சந்தித்தபோது ரூ.13,000/-ம் கையூட்டு கேட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக 11.07.2025ஆம் தேதி ராபியா திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 11.07.2025 ஆம் தேதி காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சேவியர் ராணி, பீட்டர் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது திருச்சி, கிழக்கு தாலுக்கா அலுவலக நில அளவை சார் ஆய்வாளர் தையல்நாயகி என்பவர் லஞ்சப்பணம் ரூ.13,000/-த்தை ராபியாவிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி கிழக்கு தாலுக்கா அலுவலகத்தின் நிலஅளவை பிரிவில் விசாரணை நடைபெற்று வருகிறது.






