இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தமிழ்
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தமிழ் – மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மராத்திய மொழிக்கு செம்மொழித் தகுதி வழங்க இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மராத்தியுடன் வங்காளம், அசாமி, பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளும் இந்திய ஒன்றிய அரசினால் செம்மொழித் தகுதியைப் பெறவிருக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையும் துர்கா பூஜையும் சிறப்பாக நடைபெறும் சூழலில் வங்காள மொழிக்கு செம்மொழித் தகுதியை வழங்குகிறது இந்திய ஒன்றிய அரசு. இந்தியாவில் மொழி அரசியலும் மொழி ஆதிக்கமும் அதிகாரத்துடன் நெருக்கமானத் தொடர்புடையவை. அத்தகைய அதிகார பீடங்களைத் தகர்த்து, அவரவர் மொழிகளைக் காத்திடும் படைக்கலனாக இருப்பது நம் தாய்மொழியான தமிழேயாகும்.
வடமொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவான தமிழ் இலக்கியங்கள், தமிழ் வழிபாட்டுத் திருமுறைகள், சித்தர்கள்-வள்ளலார் உள்ளிட்ட சமய நெறிக் கலகக்காரர்கள் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டுப் படையெடுப்புகளை எதிர்த்து நின்ற பெருமை தமிழுக்குரியது. அந்தத் தமிழுக்கு செம்மொழித் தகுதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது.
பழமையானதும், தனித்து இயங்கும் தன்மை கொண்டதும், பண்பாட்டு விழுமியங்கள் கொண்டதும், இலக்கிய-இலக்கண வளமை மிகுந்ததும், காலங்கடந்து நிற்கக்கூடிய ஆற்றலும் கொண்ட மொழிகளே செம்மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. உலகளவில் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, சீனம், அரபு மொழிகள் செம்மொழிகளாகப் பெயர் பெற்றுள்ள நிலையில், அவற்றுக்கு இணையாகவும் மேலாகவும் பல தன்மைகளைக் கொண்ட தமிழ் மொழிக்கான செம்மொழித் தகுதியை தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் தொடங்கி பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பல்வேறு கோரிக்கைகள், முறையீடுகள், போராட்டங்கள் நடைபெற்று முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் 2004ஆம் ஆண்டு, தி.மு.க. கூட்டணியின் மிகப் பெரிய வெற்றியால் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழுக்கு செம்மொழித் தகுதியை அளித்து சிறப்பித்தது. இந்திய ஒன்றிய அரசால் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி, தமிழ்தான். 2010ல் உலக செம்மொழித் தமிழ் மாநாடு கோவையில் 5 நாட்கள் நடைபெற்று, உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியாவின் தொன்மையான மொழி என்றால் சமஸ்கிருதம்தான் என்று நம்பக்கூடியவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, மேற்குலக நாடுகளிலும் இருக்கிறார்கள். சமஸ்கிருதம் தமிழைவிட பழமையானது என்பதும், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்பதும் உண்மையல்ல. வலிந்து திணிக்கப்படுவதாகும். இவை இரண்டையும் அன்று முதல் இன்று வரை உரக்க முழங்குவது தமிழ்நாடுதான்.
1938ல் தந்தை பெரியாரும் தமிழறிஞர்களும் முன்னெடுத்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்து, நடராசன் இருவரின் உயிர்த்தியாகத்தில் தொடங்கி, 1965ல் தமிழ்நாட்டின் மாணவர்களும் இளைஞர்களும் இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காத்திட தங்கள் உயிர்களை ஈந்தது வரையிலானப் போராட்டங்களும் அதன்பின்னரும் தொடரும் போராட்டங்களும் இந்தியாவின் பிற மாநிலங்களில் அவரவர் தாய்மொழியைப் பேசும் மக்களிடமும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வைப் பெருகச் செய்தது.
செம்மொழித் தகுதி குறித்த கோரிக்கையும் தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கி நிறைவேறியது. 2004ல் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்ததும், 2005ல் சமஸ்கிருதத்திற்கு அந்தத் தகுதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களும் தங்கள் மொழிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
செம்மொழித் தகுதிக்கு ஒரு மொழி எத்தனை ஆயிரம் ஆண்டுகாலம் மூத்ததாக இருக்க வேண்டும் என்கிற வரையறை உள்பட ஒரு சிலவற்றில் தளர்வுகளை மேற்கொண்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழித் தகுதியினைப் பெற்றன.
இதில் சமஸ்கிருதம் என்பது பேச்சு மொழியாக இல்லை. மாநில மொழியாகவும் இல்லை. 138 கோடி மக்கள் வாழும் நாட்டில் 25ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தற்போது செம்மொழித் தகுதி பெற்றுள்ள பாலியும் பிராகிருதமும் புத்த சமயத்தவர்கள் பயன்படுத்திய பழமையான மொழி. மக்கள் பயன்பாட்டில் மிக மிக அரிதாகவே உள்ளன.
காலம் கடந்தும் தனித்துவத்துடன் திகழும் தமிழ் மொழி இந்தியாவில் மாநில ஆட்சி மொழியாகவும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழியாகவும் இருப்பதுடன் இலங்கை-சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் இருப்பதால் ஐ.நா.மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பும் தமிழின் தொன்மையை அங்கீகரித்துள்ளது.
செம்மொழித் தகுதியைப் பெறுகின்ற மொழி உலகளாவிய பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கைகளைப் பெறும். புதிய புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற ஆராய்ச்சிகளுக்கும் அவற்றை கணினி முறையில் ஆவணப்படுத்துவதற்கும் செம்மொழியில் புலமை தேவை என்பதால் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். ஆராய்ச்சிகள் குறித்த புத்தகங்கள், காணொளிகள் உருவாக்கப்படும்போது அவை சார்ந்த துறைகளிலும் வேலைகள் கிடைக்கும்.
ஆதிக்க மொழியை எதிர்த்து நின்று தாய்மொழியைக் காப்பதற்கு தமிழ்நாடு எப்படி முதன்மையாக இருந்து பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியதோ, அதே முறையில் செம்மொழித் தகுதியை இந்தியாவின் பிற மொழிகள் பெறுவதற்கும், அந்த மொழிகளின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது நம் தாய்மொழித் தமிழ்.
— கோவி லெனின்
சிறப்பான கட்டுரை. இந்திய மொழிகளுக்கு வழிகாட்டி தமிழ் என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவும் காலத்தின் தேவையை உணர்ந்து எழுத்துரை. கட்டுரையாளர் கோவி லெனின் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி சார்