தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய பிரபாகரன்
தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை! – விளாசும் விஜய பிரபாகரன்
‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு தமிழக அரசியலில் வலம்வந்த விஜயகாந்த், 2011 சட்டமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்தார். தற்போது, உடல்நிலைக் கோளாறுகள் காரணமாக விஜயகாந்த் ஓய்வில் இருக்கும் நிலையில், அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் திடீரென அரசியல் என்ட்ரி கொடுத்துள்ளார். சோர்ந்துபோயிருந்த தே.மு.தி.க தொண்டர்களுக்கு இவரின் வருகை, புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது. விஜய பிரபாகரனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
“விஜயகாந்த் உடல் நிலையில் என்ன பிரச்னை? இப்போது அவர் எப்படி இருக்கிறார்?”
“கேப்டனுக்கு தொண்டையில் ஒரு சிறிய பிரச்னை. அமெரிக்காவில் சிகிச்சை முடித்து ஓய்வில் இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ஊர் திரும்பிவிடுவார்.”
“திடீரென அரசியலுக்கு வந்துள்ளீர்கள். ஏன் இந்தத் திடீர் ஆர்வம்?”
“தே.மு.தி.க ஆரம்பித்தது முதல் கேப்டனின் அரசியல் வாழ்க்கையில் கூடவே பயணித்துவருகிறேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் மக்களுக்கு எப்படியெல்லாம் அவர் உதவி செய்கிறார் என்பதைப் பார்த்து வந்துள்ளேன். அவரது செயல்பாடுகள்தான், என்னையும் அரசியலுக்குள் அழைத்து வந்துள்ளது. சமீபத்தில், காஞ்சிபுரம் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றுக் காகச் சென்றபோது முதன்முதலாகத் தொண்டர்கள் மத்தியில் பேசினேன். அவர்கள் அளித்த உற்சாகம்தான், என்னை அடுத்தடுத்தக் கூட்டங்களில் பேசவைத்தது.”
‘‘தி.மு.க-வை ‘வாரிசுக் கட்சி’ என்று விமர்சித்தவர் விஜயகாந்த். தே.மு.தி.க-வில் விஜயகாந்த் மனைவியும், மைத்துனரும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். இப்போது நீங்களும் வருகிறீர்கள். அப்படி என்றால், தே.மு.தி.க-வும் வாரிசுக் கட்சிதானே?”
“தி.மு.க., அண்ணா தொடங்கிய கட்சி. அண்ணாவுக்குப் பிறகுதான் கருணாநிதி வருகிறார். கருணாநிதி, தன் மூன்று பிள்ளைகளை தி.மு.க-வில் முன்னிலைப்படுத்தினார். தே.மு.தி.க அப்படியல்ல. இது, கேப்டன் ஆரம்பித்த கட்சி. இதில், எனக்கு எந்தப் பதவியும் இல்லை. கேப்டனுக்காகவே கட்சியில் இருக்கிறேன். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. அதற்காக நான் அ.தி.மு.க-விலோ, தி.மு.க-விலோ சேர முடியாது. இதுதான் என் கட்சி. எனக்குப் பதவிகள் முக்கியம் அல்ல. தவிர, ஒருபோதும் என்னை இங்கு முன்னிறுத்த மாட்டேன்.”
“ஆனால், உங்கள் அரசியல் பிரவேசத்தை சுதீஷ் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறதே?”
அப்படிப் பேசுவதெல்லாம் அபத்தம். என்னை வளர்த்தெடுத்ததே என் மாமாதான். அவர்தான் எனக்குப் பக்கபலமாகவும் இருக்கிறார்.”
“நீங்கள் அரசியலுக்கு வந்ததற்கு விஜயகாந்த் ரியாக்ஷன் என்ன?”
“கூட்டத்தில் நான் பேசிய வீடியோக்களைப் பார்த்துவிட்டு அப்பா பாராட்டினார். மக்களிடம் நேரடியாகச் செல்ல வேண்டும், மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும், எதற்கும் பயப்படக் கூடாது என்று அறிவுறுத்தினார். ‘நீ பார்ப்பதற்கு என்னைப்போல இருப்பதால், மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று வாழ்த்தினார்.”
“அப்படியெனில் தே.மு.தி.க-வின் ‘வைஸ்-கேப்டன்’ நீங்கள்தானா?”
“தே.மு.தி.க-வில் எப்போதும் கேப்டன் மட்டும்தான். மற்ற எல்லோரும் கட்சிக்காக உழைப் பவர்கள்தான். நானும் அப்படியே. கேப்டனுக்கு மகனாக இருப்பதே எனக்குப் போதும்.”
“தே.மு.தி.க-வை ஆரம்பித்தபோது இருந்த மாஸ் ஓப்பனிங் இப்போது இல்லையே?”
“மாஸ் ஓப்பனிங் அப்படியேதான் இருக்கிறது. கேப்டன் எம்.எல்.ஏ ஆனபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக ஆனபோதும் சரி, தொண்டர்கள் அவருக்கு எப்படி ஆதரவு தந்தார்களோ, இப்போதும் அதே ஆதரவைத் தருகிறார்கள். ஒரு தேர்தலை வைத்து எதையும் கணிக்க முடியாது. இதற்குமுன் தமிழகத்தை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன.”
“அரசியலிலிருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருப்ப தால், தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்களா?”
“கேப்டன் ஒதுங்கியிருக்கவில்லை. ஓய்வில் இருக்கிறார். விரைவில் பழையபடி திரும்பி வருவார். அப்போது, தே.மு.தி.க-வின் பலம் எல்லோருக்கும் புரியும்.”
“2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தே.மு.தி.க-வின் திட்டம் என்ன?”
“அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டியது கேப்டனும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும்தான். வெற்றிக்காக உழைக்க வேண்டியது மட்டும்தான் என் வேலை.”
“மத்தியிலும் மாநிலத்திலும் நடந்துவரும் ஆட்சி குறித்து..?”
“மத்தியில் நடக்கும் ஆட்சியை மக்களுக்கே பிடிக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை. இரு அரசுகளும் சொன்னது எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. அவர்கள் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. தமிழக நிர்வாகம் சீழ்ப்பிடித்துக்கிடக்கிறது. தமிழக முதல்வருக்கு நிர்வாகத்திறனே இல்லை. பக்கத்து மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், நாம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறோம்.”
“விஜயகாந்த் தவிர்த்து, அரசியலில் உங்களுக்குப் பிடித்தத் தலைவர் யார்?”
“அண்ணா தெரியும், பெரியார் தெரியும் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நான் வளர்ந்ததில் இருந்து கேப்டனைத்தான் பார்த்துவருகிறேன். எனக்குப் பிடித்தத் தலைவர் கேப்டன் மட்டும்தான். சொந்தப் பணத்திலிருந்து மக்களுக்கு உதவுகிறார். எம்.எல்.ஏ., எதிர்க்கட்சித் தலைவர் என உயர்ந்தபோதும், அவர் மீது எந்தக் கறையும் இல்லை. தன் பிறந்தநாளை வறுமை ஒழிப்புத் தினமாக அறிவித்து, வருடம் முழுவதும் மக்களுக்காக உழைப்பவரைத் தான் நான் தலைவராக ஏற்க முடியும்.”