அந்த சின்ன துருப்புச்சீட்டு எஸ் வி சேகர் !
என்ன தான் எஸ்வி சேகர் அவர்களுக்கு ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு அரசியல் கணக்கு இருக்கிறது என்றாலும் “சேகர் உத்தரவிட்டார். நான் இந்த விழாவுக்கு வந்தேன்” என்று முதல்வர் சொல்வதெல்லாம் மிக மிக அதிகபட்சமானது.
பிஜேபி கை கழுவி விட்டதால் திமுக சார்புக்கு எஸ் வி சேகர் வந்தது ஓர் அரசியல் கணக்கு என்றால் எஸ் வி சேகரை, வரும் தேர்தலில் பிரச்சார பீரங்கியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஸ்டாலினின் கணக்கு. அதைத்தான் சூசகமாகச் சொன்னார் “2026 இல் நம்முடைய எஸ்வி சேகர் அவர்கள் இருந்தால் போதும்” என்று புள்ளி வைத்து பேசியது காரணம் காரியத்தோடு தான்.
இதன் மூலமாக மட்டுமல்ல எஸ்வி சேகர் அவர்கள் தந்தையார் வாழ்ந்த தெருவுக்கு வெங்கட்ராமன் தெரு என்று பெயர் வைத்தது கூட ஓர் அரசியல் தான். இதன் மூலமாக ஒரு சிறு பகுதி பிராமண வாக்குகளை திமுக பக்கம் திருப்பலாம் என்பது ஸ்டாலின் கணக்கு.
இதனால் எல்லாம் சங்கிகள் பக்கம் சாய்ந்து நிலை தடுமாறுகிறார் ஸ்டாலின் என்று சொல்வதெல்லாம் அரசியல் தெரியாதவர்கள் பேச்சு. அரசியலில் சிறு துரும்பையும் பயன்படுத்த தெரிந்தவன்தான் புத்திசாலி.
ஏனென்றால் வாக்கு அரசியலில் தூய்மைவாத அரசியல் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சுத்த திராவிடம் பேசிக்கொண்டு கடவுள் எதிர்ப்பு பிராமணிய எதிர்ப்பு என்று மிக மிக தீவிரமாக இருந்த பெரியார் அவர்கள் வாக்கு வாங்கி அரசியலில் நின்றிருந்தாலும் வென்றிருக்க முடியாது என்பது தான் உண்மை பெரியாருடைய கொள்கைகளை செயல்படுத்துவதில் அறிஞர் அண்ணா அவர்கள் எடுத்த முடிவு தான் சரியானது.
ஜனநாயகத்தில் வாக்கு அரசியலில் வளைவதில் வளைந்து நிமிர்வதில் நிமிர்வது தான் வெற்றியின் சூத்திரம். சுற்றிலும் பகைவர்கள் சுற்றி வளைத்து சூழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது கிடைக்கக் கூடிய, எதிர் முகாமில் இருந்து கிடைக்கக்கூடிய சின்ன துருப்புச் சீட்டை கூட பயன்படுத்திக் கொள்பவர் மட்டுமே அரசியலில் வெல்ல முடியும்….
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த சின்ன துருப்புச்சீட்டு எஸ் வி சேகர். அதை லாவகமாக கையாண்டு அக்கிரகாரத்தில் தனக்கான சில வாக்குகளை பெற ஸ்டாலின் கணக்கு போடுகிறார். தவிர போகிற இடங்களில் ஒரு பிராமண பையன் வந்து பிஜேபியை விமர்சனம் செய்து பேசும்போது மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதும் ஸ்டாலின் கணக்கு. இதுவரை திமுக மேடைகளில் தோன்றியது எல்லாம் பிராமணர் அல்லாதவர்கள் தான். அதில் எஸ்வி சேகர் வேறுபட்டவராக இருப்பார். அத்தோடு பல ஆண்டுகளாக மக்களுக்கு அறிமுகமான பெயர் என்பதும் முக்கியமான காரணம்.
— ஜெயதேவன்.