கஞ்சா பொட்டலத்தை முதல்வரிடம் நீட்டிய பாஜக நிர்வாகி !
கஞ்சா பொட்டலத்தை முதல்வரிடம் நீட்டிய பாஜக நிர்வாகி ! தனிப்பட்ட சுற்றுலா பயணமாக தனது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளுடன் கொடைக்கானல் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரையை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு ஒன்றை கொடுக்க முற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாஜக பிரமுகர் ஒருவர்.
ஒ.பி.சி. அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான சங்கர பாண்டியன், தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கோரிக்கை மனுவில், ”தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் ஏழை கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பு: சான்றாக இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.
” என்பதாக குறிப்பிட்டதோடு கஞ்சா பொட்டலத்துடன் மேற்படி மனுவையும் கொடுக்க முயற்சித்தார்.
முதல்வரின் தனிப்பட்ட பயணத்திட்டம் என்பதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அவரது செயல் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மத்தியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஷாகுல் படங்கள்:ஆனந்த்.